பெங்களூர்: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை ஆதரிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்ததுமே அரசியல் கட்சிகள், வர்த்தகர்கள் உள்பட பலரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகளும், வர்த்தகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது அதை ஆதரிக்குமாறு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பின்னர் கூடிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறு மத்திய அரசு இது குறித்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவோடு வெற்றிகரமாக நிறைவேற்றியது.
சிங்கிள் பிராண்ட் ரீடைல்...
ஏற்கனவே ஒற்றை பிராண்ட் கொண்ட ரீடைல் கடைகளுக்கு (single brand retail) மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டது. அதாவது, ரீபோக் ஷூ நிறுவனம் தானே முழு முதலீட்டையும் போட்டு இந்தியாவில் எத்தனை கடைகளை வேண்டுமானாலும் திறக்கலாம். எவ்வளவு அன்னிய முதலீடு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ரீபோக் பிராண்டை மட்டுமே விற்க வேண்டும். இது தான் single brand retail. இதை பாஜக உள்பட எந்தக் கட்சியும், வர்த்தகர்களும் எதிர்க்கவில்லை.





















