மியூச்சுவல் ஃபண்டுகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்..!

அனைவருக்கும் பொருத்தமான முதலீட்டுத் திட்டம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான நோக்கங்களுடனும் முதலீட்டுத் திட்டங்களுடனும் களம் காண்கின்றனர். உங்களுடைய நண்பர் ஒருவருக்குப் பொருத்தமானதாக அமையும் முதலீட்டுத் திட்டம் உங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

மியூச்சுவல் ஃபண்ட்டுகள் பலவிதம்

இதனைப் போலத்தான் மியூச்சுவல் ஃபண்டுகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும். எவ்வகையான மியூச்சுவல் ஃபன்டுகளில் முதலீடு செய்யலாம் என்பது, முதலீட்டாளரின் நோக்கம், முதலீட்டின் அளவு, முதலீட்டுக்கான கால அளவு போன்றவற்றைப் பொறுத்துத்தான் தீர்மானிக்க இயலும். உங்களுடைய நிதிசார்ந்த இலக்கு என்ன என்பதைப் பொறுத்து அதற்கேற்ற மியூச்சுவல் ஃபன்டுகளில் முதலீடு செய்தால் உங்களுடைய முதலீடுகளுக்குப் பாதுகாப்பானதாக அமையும். எல்லோருக்கும் எல்லா மியூச்சுவல் ஃபண்ட்டுகளும் ஏன் பொருத்தமானதாக அமைவதில்லை என்பதற்கான காரணங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான ரிஸ்க் எடுக்க வேண்டும்

மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டு அபாயங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஒவ்வொரு வகையான மியூச்சுவல் ஃபண்டுகளிலும் ஒவ்வொரு வகையாகின ரிஸ்க் உள்ளது. பங்குச் சந்தையோடு இணைந்த மியூச்சுவல் ஃபண்டுகள் அதிகமாக ரிஸ்க் எடுக்கத் துணிந்தவர்களுக்கு ஏற்றது. ஆனால், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்குக் கடன் பத்திரங்களோடு இணைந்த மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது சமநிலைப் மியூச்சுவல் ஃபண்டுகள்தான் சிறந்ததாக இருக்கும். இவற்றின் மதிப்பின் மீதான ஏற்ற இறக்கங்கள் மிக நிதானமானதாக இருக்கும்.

டைனமிக் ஃபண்டுகளும் விதிவிலக்கு அல்ல

அதே சமயத்தில் எல்லா வகையான கடனீட்டு மியூச்சுவல் ஃபண்டுகளும் குறைவான சந்தை அபாயங்களைக் கொண்டது எனக் கூறமுடியாது. உதாரணமாக, டைனமிக் ஃபன்ட்டுகள் மீதான முதலீடு நிலையான வைப்புளைப் போலப் பத்திரமாக இருக்கும் என நினைத்தால் அது தவறு. வட்டி விகிதம் மற்றும் விலை மாறுதலுக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டவை இந்த இயங்குநிலை பத்திர பரஸ்பர நிதியங்கள்( Dynamic bond Fund). அது மட்டும் அல்லாமல் குறுகிய காலத்தில் வீழ்ச்சியைச் சந்திக்கக் கூடிய அபாயமும் உள்ளது.

ஒவ்வொரு வகையான மியூச்சுவல் ஃபண்டுகளில் பொதிந்துள்ள அபாயங்களுக்கு ஏற்பவும், எந்த அளவு வரை ரிஸ்க் எடுக்க முடியும் என்கின்ற உங்களுடைய நிலைக்கு ஏற்பவும் ஆழமாக யோசித்து முடிவெடுப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

 

வெவ்வேறு வகையான பங்குகளின்மீது முதலீடு செய்யப்படுதல்

மியூச்சுவல் ஃபண்டுகளின் மீதான நம்முடைய பணம் எவ்வகையான பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பதும் சிறந்த வழிமுறையாகும். கடன் பத்திரங்கள், பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் நம்முடைய பணம் முதலீடு செய்யப்படும். இவற்றில் எதன் மீதான முதலீடு ஆதாயம் தரக் கூடியது என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

வெவ்வேறு வகையான முதலீட்டுத் திட்டங்களைக் கொண்டது

ஒவ்வொரு ஃபண்டுகளும் ஒவ்வொரு வகையான முதலீட்டுத் திட்ட யுக்திகளைக் கொண்டதாக விளங்குகின்றது. சில ஃபண்டுகள், கட்டுமானத் திட்டங்கள், நுகர்வோர் பொருள் உற்பத்தித் துறை, மருந்துப் பொருள் தயாரிப்பு போன்றவற்றின் மீது முதலீடு செய்யும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கும். சில ஃபன்டுகள் சர்வதேசச் சந்தைகளில் முதலீடு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கும். உங்களுடைய பணம் எங்குப் பாதுகாப்பாக முதலீடு செய்யப்பட வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அதற்கேற்ற மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு ஃபன்டும் ஒவ்வொரு வகையான கால முறையைக் கொண்டது

பங்குச் சந்தையோடு இணைந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு ஒரு வருடத்திற்குள் பெரும் இலாபத்தை எதிர்பார்க்கக் கூடாது. பொதுவாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் இலாபம் ஈட்டுவதற்குக் குறைந்தது ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை தேவைப்படும். குறைந்த கால அளவில் இலாபத்தை எதிர்பார்ப்பவர்கள் இதை யோசித்து முதலீடு செய்ய வேண்டும்.

அனைத்து ஃபன்டுகளும் சீரான வருமானத்தைத் தராது

சீரான வருமானத்தை மனதில் வைத்துக் கொண்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யக் கூடாது. ஈக்விட்டி ஃபண்டுகள் மீதான பங்காதாயம் நிறுவனங்களின் இலாபத்தைப் பொறுத்துத்தான் அமையும். ஒருவேளை நிறுவனங்கள் தொடர்ச்சியான நஷ்டத்தைச் சந்தித்து வந்தால் முடிவில் நமக்கும் நஷ்டமே மிஞ்சும். பங்குகளுக்கு உரிமையுடைய நிறுவனங்களின் தொடர்ச்சியான இழப்பு நம்முடைய முதலீட்டை முற்றிலும் சிதைத்து விடவும் வாய்ப்புண்டு.

எனவே உங்களுக்குச் சீரான வருமானம் வேண்டும் என்றால், கடன் பத்திரங்களோடு இணைந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. இவ்வகையான ஃபன்டுகள் மீதான வருமானத்தைச் சீரான இடைவெளியில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

 

வருமான வரிப் பலன்களுக்கு ஏற்ற ஃபன்டுகள்

வருமான வரியிலிருந்து விலக்குப் பெறுவதற்கேற்ற மியூச்சுவல் ஃபண்டுகளையும் தேர்வு செய்யலாம். ஒரு ஆண்டுக்குள் விற்றுவிடக் கூடிய குறுகிய கால ஈக்விடி மியூச்சுவல் ஃபன்டுகள் மீதான முதலீட்டு லாபத்திற்கு 15 % வரி விதிக்கப்படும். நீண்டகால முதலீட்டின் அடிப்படையில் அமைந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபன்டுகளை ஒராண்டுக்குப் பிறகு விற்றால் அந்த வருமானத்துக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். அதற்குப் பிறகான வருமானத்துக்கு 10% வரி விதிக்கப்படும்.

குறைந்த கால முதலீட்டின் அடிப்படையில் அமைந்த கடன் பத்திரங்களோடு இணைந்த மியூச்சுவல் ஃபன்டுகளை 36 மாதங்களுக்குள் விற்றால் வரக்கூடிய வருமானத்துக்கு நடப்பு ஆண்டுக்கு ஏற்ற வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும். முதலீடு செய்கின்ற முதலாண்டில் 80C பிரிவின் கீழ் வருமானவரி விலக்கு பெறக் கூடிய வகையிலான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபன்டுகளும் உள்ளன. இது போன்ற வசதி பிற மியூச்சுவல் ஃபன்டுகளில் கிடையாது. வருமான வரி சேமிப்புக்காக முதலீடு செய்வதாக இருந்தால் இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் கொள்வது நல்லது.

 

அடிப்படையான விசயத்தை மறந்திடாதீங்க

கடினமாக உழைத்துச் சேர்த்த பணத்தை இழப்பதற்கு யாரும் விரும்பமாட்டார்கள். எனவே, நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக இருந்தால் மேற்கண்ட வகையில் அமைந்த முதலீட்டுத் திட்டங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்த பிறகு உங்களுடைய நோக்கத்திற்கும், வசதிக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபன்டுகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள்.

Have a great day!
Read more...

English Summary

Mutual funds are many, each one is also different