தொடக்கநிலை பங்கு வெளியீடு எனப்படும் ஐபிஓ-ல் “கிரே மார்க்கெட்” என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்காகப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்பாகவே வேறு வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுப் பங்கு விற்பனை நடைபெற்றால் அதனை இணையான பங்குச் சந்தை என்கிறோம். இதனை ஆங்கிலத்தில் கிரே மார்க்கெட் (Grey Market) என்கிறோம்.

இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட வணிகம் இல்லை. இவ்வகையில் பங்குகளை வாங்கும் பொழுது "கிரே மார்க்கெட் பிரீமியம்" அல்லது "கிரே மார்க்கெட் கழிவு" என்கின்ற கூடுதல் தொகையினைப் பங்குத்தரகரிடம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தப் பகுதியில், இணைச் சந்தை அல்லது கிரே மார்க்கெட் என்பது குறித்து இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலமாக விளக்கமாகப் பார்க்கலாம்.

அங்கீகரிக்கப்படாத வணிக நடைமுறை

கிரே மார்க்கெட் என்னும் சொல்லைப் பார்த்தவுடனேயே இது அங்கீகரிக்கப்பட்ட வணிக நடைமுறை இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வகையான நடைமுறையிலான பங்கு வர்த்தகம் முழுவதும் ரொக்கப் பணப் பரிமாற்றத்தின் மூலமாகவே நடைபெறும். செபி அல்லது பிற சட்டப்பூர்வ அமைப்புகள் எதுவும் இது போன்ற வணிகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை. முதலீட்டாளருக்கும் பங்குகளை விற்போருக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில்தான் இவ்வகையான வணிகம் நடைபெறுகிறது. ஏதேனும் சிக்கல்கள் எழும்பொழுது, செபி அல்லது பங்கு வர்த்தகத் தரகர்களைப் பொறுப்பாக்க முடியாது.

பங்கு வெளியீட்டு இணைச் சந்தை (IPO Grey Market) பின்வரும் நடைமுறைகளை உள்ளடக்கியது

பங்குகளைப் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்னர்தான் இவ்வகையில் பங்குகளை வாங்கவோ விற்கவோ விண்ணப்பிக்க முடியும். மேலும், பிரீமியம் தொகை செலுத்தியாக வேண்டும்.

"இணைச் சந்தை" நடைமுறை சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற்றது அல்ல. பரஸ்பர நம்பிக்கை கொண்ட சிறு குழுக்களுக்கு இடையேதான் இவ்வகையிலான பரிவர்த்தனைகள் நடைபெறும். கிரே மார்க்கெட் நடைமுறையில் "பிரீமியம்", "கொஸ்டக் (Kostak)" என்னும் இரண்டு சொற்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

கிரே மார்க்கெட் பிரீமியம்

கிரே மார்க்கெட் விலை அல்லது கிரே மார்க்கெட் பிரீமியம் என்பது பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்னால் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ விண்ணப்பிக்கக் கொடுக்க வேண்டிய விலையைக் குறிக்கும். பங்குகளை வாங்குவதற்கு உள்ள போட்டி நிலையைப் பொறுத்து இந்தப் பிரீமியத் தொகை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

எடுத்துக்காட்டு - 1
நிறுவனம் : X லிமிடெட்
வெளியீட்டு விலை : ரூ.200
கிரே மார்க்கெட் பிரீமியம் : 150 (பங்குகளை வாங்குவோருக்கு)
மேற்கண்ட நிலையில், X லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்ககினை வாங்க வேண்டும் என்றால் 350 ரூபாய் செலுத்த வேண்டும் (200 + 150 = 350)

எடுத்துக்காட்டு - 2
நிறுவனம் : Y லிமிடெட்
வெளியீட்டு விலை : 350
கிரே மார்க்கெட் விலை : ரூபாய் ( - ) 25 (விற்போருக்கு)
மேற்கண்ட நிலையில், Y நிறுவனத்தின் பங்குகளை 325 ரூபாய்க்கு விற்பதற்குத் தயாரக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளலாம். (350 - 25 = 325)

 

கொஸ்தக் (Kostak)

ஒரு நிறுவனத்தின் ஐபிஓ-விற்காக விண்ணப்பிக்கக் கிரே மார்க்கெட்டில் குறிப்பிட்ட விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த விலையைத்தான் கொஸ்தக் விலை என்கிறோம். கொஸ்தக் விலை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அதனுடைய தேவையைப் பொறுத்து விலை அமையும். புதிய வெளியீட்டுப் பங்குகளை வாங்குவதற்கான கிரே மார்க்கெட்டின் கொஸ்தக் விலையைப் பொறுத்து அப்பங்குகளை நாம் விற்றால் கிடைக்கக் கூடிய இலாபத்தை அறிந்து கொள்ளலாம்.

வாய்ப்பு 50% மட்டுமே

விண்ணப்பங்களுக்கு ஏற்பப் பங்குகள் ஒதுக்கப்பட்டால் பங்குகள் உங்களுக்கு உரிமையானதாகும். பங்குகள் ஒதுக்கப்படவில்லை என்றால் செலுத்திய தொகை திரும்பக் கிடைக்காது. கொஸ்தக் பங்குகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், மொத்த விண்ணப்பங்களில் 50% விண்ணப்பங்களுக்கு மட்டுமே பங்குகள் ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

நிறைவாக..

ஒரு சிலரால் மட்டுமே, கிரே மார்க்கெட்டில் உள்ள தடைகளை வெற்றிகரமாகச் சமாளிக்க முடிகிறது. இது சட்டத்துக்குப் புறம்பான வணிக நடவடிக்கை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் கணக்கில் வராத பணத்தின் மூலமாகவே இத்தகைய வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னால், குறுகிய கால முதலீட்டுக்கான ஆதாயத்திற்காக நீங்கள் செலுத்த வேண்டிய வரியை துல்லியமாக் கணக்கிட்டுக் கொள்வது நல்லது. சில நேரங்களில் மிகச் சொற்பமான இலாபம் மட்டுமே கிடைக்கும்.

Have a great day!
Read more...

English Summary

Things to know about IPO grey market