8 வகையான கட்டணங்களை வங்கிகள் நம்மிடமிருந்து வசூலிக்கின்றன...தெரிந்து கொள்ளுங்கள்..!

நம்முடைய அன்றாட வரவு செலவுக் கணக்குகளை வங்கிகள் மூலம் எளிமையாக மேற்கொள்ள முடிகிறது. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற ஒவ்வொரு சேவைக்கும் கட்டணங்களை வசூலிக்கின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏ.டி.எம். மையங்கள், வங்கிகள், மற்றும் வணிக நிறுவனங்கள் மூலமாக நம்முடைய வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் எவ்வகையில் கட்டணங்களை விதிக்கின்றன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

குறைந்தபட்ச இருப்பு இல்லாமைக்கான கட்டணம் :

சேமிப்புக் கணக்குகளுக்கு 1,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகை என வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து அபராதக் கட்டணத்தை வசூலிக்கின்றன. எனவே, செயல்படாத அல்லது குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க இயலாத வங்கிக் கணக்குகளின் இயக்கத்தை நிறுத்தி விடுவது நல்லது.

பணம் எடுத்தல் :

நம்முடைய வங்கிகளைச் சாராத பிற ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகிய நேர்வுகளின் போது வங்கிகள் நம்மிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன.

பணம் டெபாசிட் செய்தல் :

வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத பிற கிளை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் பொழுது அதற்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

காசோலைகள் :

ஒரு மாதத்திற்கு ஒரு காசோலைக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும். வெளியூர் வங்கிகளைச் சேர்ந்த காசோலைப் பரிவர்த்தனைகளுக்குத் தனியான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குறுஞ்செய்திச் சேவைக் கட்டணம் :

நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாகக் கைப்பேசிகளுக்கு அனுப்பப்படுகின்ற குறுஞ்செய்திகளுக்காகக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

டெபிட் கார்டுகள் வழங்கும் பொழுது:

தொலைந்து போன அல்லது திருட்டுப் போன டெபிட் கார்டுகளுக்குப் பதிலாகப் புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் அதற்கெனத் தனியான அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

வணிகப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் :

இணையம் வழியான வணிகப் பரிவர்த்தனைகளின் போது பொதுவாகக் கட்டணங்கள் விதிக்கப்படுவது இல்லை. ஆனால், நம்முடைய வங்கி அல்லாத பிற முகமை நிறுவனங்கள் மூலமாக வணிக நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தப்படும் பொழுது சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக IRCTC இணையதளம் மூலமாக ரயில் பயணச் சீட்டுக்களுக்குப் பணம் செலுத்தும் பொழுது, குறைந்தபட்சக் கட்டணம் அல்லது செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவிகிதத்தில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

அயல்நாட்டுப் பண மாற்றப் பரிவர்த்தனைகள் :

கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளின் மூலமாக அயல்நாட்டு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் 2 முதல் 4 சதவிகிதம் வரை சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது

Have a great day!
Read more...

English Summary

8 Overlooked Bank Charges That You Should be Aware of