ஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா?

ஓய்வூதியத் தொகைக்கான வருமான வரிக் கணக்கீடு என்பது ஓய்வூதியம் பெறும் பணியாளரின் நிலையைப் பொறுத்தும் அவர் பணிக்கொடை (gratuity) பெற்றிருக்கிறாரா? என்பதைப் பொறுத்தும் அமையும்.

பல்வேறு சூழ்நிலைகளில் ஒரு பணியாளர் ஓய்வூதியம் பெற முடியும். ஓய்வூதியத்திற்கான வரிக் கணக்கீடும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும். பணிக்காலம் முடிந்து ஒரு பணியாளர் தான் உயிரோடு இருக்கும் காலத்தில் ஓய்வூதியம் பெற்றால் அந்த ஓய்வூதியம் வரி விதிப்புக்கு உட்பட்டதாகும். அரசுப் பணியாளர்கள் அரசுத் துறை சாராத பணியாளர்கள் எனப் பணியாளர்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஓய்வூதியத்தையும் இரு வகையாகப் பிரிக்கலாம். பகுதி ஓய்வூதியம், தவணை முறை ஓய்வூதியம் என ஓய்வூதியத்தையும் இரு வகையாகப் பிரிக்கலாம் (commuted and uncommuted). தவணை முறை ஓய்வூதியம் என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்படுவது ஆகும். உதாரணமாக ஒரு அரசுப் பணியாளர் அல்லது தனியார் துறைப் பணியாளர் மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார் என்றால், ஊதியத்தைப் போலவே இந்த ஓய்வூதியத் தொகைக்கும் பிரிவு 15-ன் படி வரி வசூலிக்கப்படும்.

பகுதி ஓய்வூதியம்

மொத்த ஓய்வூதியம் அல்லது பகுதி ஓய்வூதியம் என்பது (Commuted pension) தவணை முறையில் அல்லாமல் மொத்தமாக வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையைக் குறிக்கும். உதாரணமாக, ஒருவர் தன்னுடைய மொத்த ஓய்வூதியத் தொகையில் 25% தொகையை அதாவது 60000 ரூபாய் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். ( ஓய்வூதியத் தொகையில் மீதமுள்ள 75% ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் என்கின்ற வகையில் வழங்கப்படும்) இங்கு 60000 ரூபாய் என்பது மொத்த ஓய்வூதியத் தொகையில் ஒரு பகுதி ஆகும். இந்த ஓய்வூதியத் தொகையை ஒரு அரசுப் பணியாளர் ( மத்திய அரசுப் பணி இல்லது மாநில அரசுப் பணி) பெறுகிறார் என்றால், அவர் பணிக்கொடை பெற்றிருந்தாலும் பெற்றிருக்காவிட்டாலும் அவர் பெற்ற ஓய்வூதியத் தொகைக்கு முழுவதும் வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் தொகையை அரசு துறை சாராத பணியாளர் பெற்றிருந்தால், அவர் பணிக்கொடைத் தொகையையும் பெற்றவர் என்றால், அவர் பெற்ற ஓய்வூதியத் தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்படும். இதுவே, பணிக்கொடை பெற்றிராத அரசு துறை சாராத பணியாளராக இருந்தால் அவர் பெற்ற மொத்த ஓய்வூதியத் தொகையில் பாதித் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

மொத்தமாகப் பெறும் ஓய்வூதியத் தொகை மேற் சொன்ன அளவினை மீறினால், வரம்பினை மீறும் அதிகமான தொகைக்கு வரி விதிக்கப்படும். எந்த ஆண்டுத் தொகை பெறப்பட்டதோ அந்த ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கில் பிடித்தம் செய்யப்படும். இருந்தாலும், வருமானவரிச் சட்டப்பிரிவு 89-ன் படி வருமான வரிவிலக்குக் கோரி விண்ணப்பிக்கலாம்.

 

புதிய ஓய்வூதியத் திட்டம்

அரசுப் பணியில் புதியதாகச் சேர்பவர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டம்தான் பொருந்தும். அவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. இத்திட்டத்தின்படி, 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்பவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய ஊதியத்தில் 10% தொகையை ஓய்வூதியக் கணக்கில் செலுத்த வேண்டும். பணியாளர் செலுத்தும் 10% தொகைக்குச் சமமான தொகையை அரசும் பணியாளரின் ஓய்வூதியக் கணக்கில் செலுத்தும். இவ்வகையில் பெறப்படும் ஓய்வூதியத் தொகைக்கான வருமான வரி பின்வரும் வகையில் அமையும்.

முக்கியமானவை

1) தேசிய ஓய்வூதியத் திட்டம் எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி பணியாளர் கணக்கில் அரசாங்கம் செலுத்தும் 10% தொகை பணியாளரின் சம்பளக் கணக்கின் கீழ் கொண்டு வரப்படும்.
2) அரசின் இந்தப் பங்களிப்புத் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80 CCD(2) -ன் படி சம்பந்தப்பட்ட பணியாளர் வரி விலக்குப் பெற்றுக் கொள்ளலாம்.
3) ஓய்வூதியக் கணக்கில் பிடித்தம் செய்யப்படும் பணியாளரின் 10% தொகைக்குப் பிரிவு 80CCD (1)-ன் படி வரி விலக்குப் பெற்றுக் கொள்லாம்.
4) ஓய்வூதியம் பெறும்பொழுது ஓய்வூதியத் தொகைக்கு வரி விதிக்கப்படும்.
5) ஓய்வூதியக் கணக்கில் செலுத்துவதற்காகப் பணியாளரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் 10% தொகை கணக்கிடும் பொழுது, பணியாளரின் அடிப்படைச் சம்பளம் (BP) மற்றும் அதற்கான அகவிலைப்படி (DA) ஆகிய இரண்டு மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி (MA) உள்ளிட்ட பிற தொகைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

வரி விலக்கு

வருமான வரிச் சட்டப் பிரிவுகள் 80C, 80CCC மற்றும் 80CCD (1) (ஓய்வூதியக் கணக்கிற்கான பணியாளரின் பங்களிப்பு) ஆகிய பிரிவின் கீழ் வரி விலக்குப் பெறுவதற்கான தொகை 1.5 இலட்சத்திற்கு மிகக் கூடாது.

2012 -13 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வூதியக் கணக்கில் செலுத்தப்படும் அரசின் பங்களிப்புத் தொகை மேற் சொன்ன 1.5 இலட்ச ரூபாய் வரம்பிற்குள் இடம் பெறுவதில்லை. பிரிவு 80CCD (2) -ன் படி பணியாளர் ஓய்வூதியக் கணக்கில் செலுத்தப்படும் அரசின் பங்களிப்புத் தொகைக்குத் தனியாக வரிவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம். 2016 ஆம் நிதியாண்டில் இருந்து, 80CCD (1) என்னும் பிரிவின் கீழ் காட்டப்படும் வரி விலக்கிற்கான பணியாளரின் பங்களிப்புத் தொகையில் 50,000 ரூபாயை 80CCD (1B) என்னும் தனிப் பிரிவின் கீழ் காட்டி வரிவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

 

Have a great day!
Read more...

English Summary

Know how your pension can be taxed