ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கடந்த சில மாதங்களாக ஏடிஎம் மோசடிகள் தொடர்பாக வங்கிகளுக்கு வரும் புகார்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன. டெபிட் அட்டைகளில் புதிதாகச் சிப் பொருத்துவது போன்ற பல்வேறு வழிகளில் மோசடிகளைத் தடுக்க வங்கிகள் முயன்றுவரும் நிலையில்,வாடிக்கையாளர்களும் தங்களின் புத்திசாலித்தனமான முயற்சிகளை மேற்கொண்டு சொந்த பணத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.

அதே நோக்கத்துடன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி, ஏடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என முக்கிய அறிவுரைகளை மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவித்துள்ளது. அவை என்னவென்று இங்குப் பார்க்கலாம்.

செய்யக்கூடியவை

*உங்கள் ஏடிஎம் பரிவர்த்தனைகளை முழுவதும் அந்தரங்கமாகச் செய்யவும், கடவுச்சொல் உள்ளீடு செய்வதைப் பார்க்க யாரையும் அனுமதிக்கக்கூடாது.

*பரிவர்த்தனைகளைச் செய்து முடித்த பின்னர், ஏடிஎம் திரையில், வரவேற்றுத் திரை உள்ளதை உறுதிசெய்யவேண்டும்.

*உங்களின் தற்போதைய கைப்பேசி எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். அதன் மூலம் உங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் அறிவிக்கை குறுஞ்செய்திகள் பெறமுடியும்.

* ஏடிஎம்-ல் உங்களைச் சுற்றியுள்ள நபர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் மற்றும் அறிமுகமில்லாத நபர்கள் உரையாட முயற்சிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*சந்தேகத்திற்கிடமான வகையில் ஏடிஎம்-ல் ஏதேனும் கூடுதல் கருவிகள் இணைக்தப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும்.

*உங்களின் ஏடிஎம்/டெபிட் அட்டை தொலைந்து போனாலோ அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடக்கும் போது, உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிக்க வேண்டும்.

* வங்கி பரிவர்த்தனை தொடர்பான குறுஞ்செய்திகள் மற்றும் வங்கி அறிக்கைகளை(Bank Statement) தொடர்ந்து சரிபார்க்கவும்.

*ஏடிஎம் இயந்திரம் பணம் இல்லாத நிலையிலும், பணம் இல்லை எனத் திரையில் தெரிவிக்கவில்லை எனில், அங்குள்ள தகவல் பலகையில் உள்ள எண்ணில் தொடர்பு கொண்டு வங்கிக்குத் தகவல் தெரிவியுங்கள்.

*பணம் எடுத்தவுடன், எவ்வளவு பணம் எடுக்கப்பட்டுள்ளது எனக் குறுஞ்செய்தியை சரிபாருங்கள்.


செய்யக்கூடாதவை

*ஏடிஎம் கடவு எண்ணை, ஏடிஎம் அட்டையில் எழுதி வைக்கக்கூடாது. மாறாக அதை மனதில் பதிய வையுங்கள்.

* முன்பின் அறிமுகமில்லாதவர்கள் உங்கள் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்த மற்றும் உங்களுக்கு உதவிபுரிய அனுமதிக்கவேண்டாம்.

*வங்கி ஊழியர்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்பட யாரிடமும், ஏடிஎம் கடவு எண்ணை வெளிப்படுத்தக் கூடாது.

*பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது, ஏடிஎம் அட்டை உங்கள் பார்வையிலிருந்து எங்கும் செல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

*பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது மொபைல் போனில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

Have a great day!
Read more...

English Summary

Things to Do and What Not to Do While Using an ATM