கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன?

கடந்த வாரம் சில டிவியில் எஸ்பி்ஐ வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகளுக்கும் இடையே கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டதாகப் பரபரப்பான செய்திகள் உலா வந்தன. வங்கிகளுக்கு இடையே கடன் ஒப்பந்தங்களா? அப்படி என்றால் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இது தொடர்பான விளக்கங்களை இங்குக் காண்போம்.

வாராக் கடனை வசூலிப்பதற்கான வழிமுறை

சுருக்கமாகச் சொல்வதென்றால் சமீப காலமாக இந்தியாவில் அதிகரித்து வரும் வாராக் கடன் (bad loans) சிக்கலைச் சமாளிப்பதற்காக வங்கிகள் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன அவற்றுள் ஒன்றுதான் இது. இந்தியாவில் வங்கிகளால் கொடுக்கப்பட்டு வசூலிக்க இயலாமல் உள்ள மொத்தக் கடன் தொகை 10 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்திய வங்கித் துறையில் முன் எப்போதும் இல்லாத வகையில் வராக்கடன் பிரச்சினை தலை தூக்கியுள்ளது. இந்திய அரசாங்கம் கொண்டு வந்த ஷாசாக்ட் திட்டம் (The Sashakt) இப்பிரச்சினைக்குச் சில தீர்வுகளை முன் வைத்திருக்கிறது.

கடன் வழங்குவோருக்கு இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிதி நிறுவனங்கள்:

பிஸினஸ் ஸ்டான்டேர்டு அறிக்கையின்படி, எஸ்.பி.ஐ. வங்கியின் தலைமையில் 24 கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கி ஆகியவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகத் தெரிகிறது.

இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் உட்பட 22 பொதுத் துறை வங்கிகள், 19 தனியார் வங்கிகள் மற்றும் 32 வெளிநாட்டு வங்கிகள் ஆகிய அனைத்தும் கடன் கொடுப்பவர்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் (ICA) இணைகின்றன. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், பவர் பைனாஸ் கார்பரேசன், ரூரல் எலக்ட்ரிஃபிகேசன் கார்பரேசன் போன்ற 12 நிதி நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

 

 

கடன் கொடுப்பவர்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் தன்மைகள்:

கடன் கொடுப்பவர்களுக்கு இடையேயான ஓப்பந்தம் (ICA) என்பது இந்திய அரசாங்கம் கொண்டு வந்த ஷாசாக்ட் திட்டத்தின் (The Sashakt) மூலம் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஆகும். சுனில் மேத்தா என்பர் தலைமையிலான குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் திட்ட வரைவு கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

தலைமை நிதி நிறுவனம்

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் தங்களுக்குள் ஒரு தலைமையாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தத் தலைமை நிதி நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நிறுவனங்களின் சார்பாகச் செயல்படும். தலைமை நிறுவனம் வாராக் கடன் தொடர்பான தீர்மானங்களை முன்னெடுக்கும். இந்நிறுவனம் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிறுவனங்களுள் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்தால், கடனை ஒழுங்காகக் கட்டாத நிறுவனங்களின் கணக்குகளின் மீது முடிவெடுக்கும் அதிகாரம் தலைமை நிறுவனத்திற்குக் கிடைக்கும்.

தலைமை நிறுவனத்தின் பொறுப்புகள்:

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிதி நிறுவனங்களுக்குத் தலைமையேற்கும் நிறுவனத்திற்குப் பல பொறுப்புகள் உள்ளன.

1. செயல்படாத சொத்துக்கள் (NPA) மீது தீர்மானம் கொண்டு வந்து அதனை மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஒரு மாதத்திற்குள் மேற்பார்வைக் குழுவை (overseeing committee) அமைக்கும்.

2. கொண்டு வரப்படும் ஒவ்வொரு தீர்மானமும் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கும், நெறிமுறைகளுக்கும், சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டும் இருக்க வேண்டும்.

3. செயல்படாத சொத்துக்களோடு தொடர்புடைய தாக்குப்பிடிக்கக் கூடிய கடன் (sustainable debt) குறித்தும் முடிவெடுக்க வேண்டும்.

4. தீர்மானத்தின் மூலம் முன்வைக்கப்படும் திட்டங்களை 180 நாட்களுக்குள் செயல்படுத்தும் அதிகாரத்தை இந்த ஒப்பந்தம் தலைமை நிதி நிறுவனத்திற்கு வழங்குகிறது.

 

கவனிக்க வேண்டியவை

தலைமை நிதி நிறுவனம் தன்னுடைய சேவைகளுக்காக ஒரு குறிப்பிட்ட அளவுக் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம்.

கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் படி (ICA) முதல் சீராய்வுக் கூட்டம் மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் நடைபெறும்.

ரிசர்வ் வங்கியின் நேரடித் தலையீட்டினால், கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

Have a great day!
Read more...

English Summary

What Is Inter creditor Agreement Signed By Banks In India?