வீட்டுக் கடன் மற்றும் மனை கடன்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன?

இன்றைய சூழலில் அதிக வருவாய் தரக்கூடிய முதலீடாக ரியல் எஸ்டேட் முதலீடுகள் உள்ளன. நீங்கள் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்பினால், ஒரு வீடு அல்லது வீட்டு மனையை வாங்கலாம். இதற்குக் கை கொடுக்க வீட்டுக் கடன் அல்லது மனைக்கடன் உள்ளது. இவை இரண்டிற்கும் இடையே சிறிது வித்தியாசம் மட்டுமே உள்ள்து. எனவே உங்களுக்கு வீட்டு கடன் மற்றும் மனைக்கடன் இடையே எதைப் பெறுவது என்பதில் சிறிது குழப்பம் ஏற்படலாம். முதலாவதாக, வீட்டுக் கடன்கள் ஏற்கெனவே கட்டிமுடிக்கப்பட்ட குடியிருப்பு, அல்லது கட்டப்படும் வீடு அல்லது எதிர்காலத்தில் கட்டப்படவிருக்கும் வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

வட்டி விகிதம் மற்றும் செயல்முறை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இரண்டு வகைக் கடன்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் அவற்றுக்கு இடையே கணிசமான அளவு வேறுபாடுகளும் உள்ளன.

இரண்டு கடன்களுக்கு இடையேயான ஒற்றுமைகள்:

வங்கிகள் அல்லது அல்லாத வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) 21 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்களுக்கு நில மற்றும் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. குடியிருப்பின் நோக்கங்களுக்காக நிலம் பயன்படுத்தப்படுமானால், என்.ஆர்.ஐ. க்களுக்கு வங்கிகள் நிலக் கடன்கள் வழங்குகின்றன. வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகிய இரண்டும் சற்று அதிகமாகப் பரிசீலனைக் கட்டணங்களை வசூலிக்கின்றன. ஒரு சில வங்கிகளில், வீட்டு கடன் மீதான வட்டி விகிதங்கள் நிலக் கடனைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீட்டு கடன் மற்றும் நில கடன்களுக்கு இடையே உள்ள வேறுபாடு:

வீடு அல்லது நிலக் கடனில் பயன்பாட்டு வரம்புகளை நீங்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.

சொத்து நோக்கம் மற்றும் அது அமைந்துள்ள இடம்

எந்தவொரு இடத்திற்கும் நீங்கள் வீட்டுக் கடனைப் பெறலாம். மறுபுறம் நிலக் கடன் என்பது, நகராட்சி அல்லது மாநகராட்சி வரம்புகளுக்குள் உள்ள குடியிருப்பு மனைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதன் பிறகு ஒரு வீட்டுக் கடன் உதவியுடன் அந்த இடத்தில் ஒரு வீட்டை நீங்கள் கட்டிக் கொள்ளலாம்.

விவசாய அல்லது வணிக நோக்கங்களுக்காக, ஒரு தொழில்துறை பகுதியில் அல்லது ஒரு கிராமத்தில் நிலம் அமைந்திருந்தால் அந்த நிலத்திற்கு நிலக் கடன் கிடைக்காது. அதோடு கூடுதலாக, வங்கியின் நிலக் கடனைப் பொறுத்தவரையில், கடன் வாங்கியவர், பிராமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டபடி குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை கட்டத் தொடங்கினால் மட்டுமே நிலக் கடன்களை வழங்கும். உதாரணமாக, எஸ்.பி.ஐ. ரியால்டி கடன் திட்டத்தின் கீழ், ஒரு கடன் பெற்ற 2 ஆண்டுகளுக்குள் வீட்டை கட்டி முடிக்க உறுதி அளித்தால் மட்டுமே கடன் கிடைக்கும்.

 

சொத்து மதிப்புக்கேற்ற கடன் (LTV)

LTV என்பது நீங்கள் ஒரு சொத்து மதிப்புக்கு எதிராகப் பெறக்கூடிய கடன் அளவை குறிக்கும். உங்கள் வீட்டின் மதிப்பில் சுமார் 80 முதல் 85 சதவிகிதம் வரை உங்களுக்குக் கடன் கிடைக்கும். ஒரு சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு 90 சதவிகிதம் வரை கடன் கிடைக்கலாம்.

நிலக் கடனைப் பொறுத்தவரையில், நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய அதிகபட்ச LTV மதிப்பு என்பது 70 சதவீதம் ஆகும். அதாவது ஒரு மனை வாங்குவதற்கு நீங்கள் சொந்தமாக 30 சதவீத நிதியை திரட்ட வேண்டும்.

 

கடனை திரும்பச் செலுத்தும் கால அளவு

வீட்டுக் கடனை விட மனைக் கடனுக்கான திரும்பச் செலுத்தும் கால அளவு மிகவும் குறைவு. மனைக் கடனுக்கான அதிகபட்ச் திரும்பச் செலுத்தும் காலம் 15 ஆண்டுகளாகும். அதேசமயம், வீட்டுக் கடன்களைப் பொருத்தவரை இந்தக் கால அளவு 30 ஆண்டுகள் வரை உள்ளது. விதிவிலக்காக, ஒரு சில வங்கி சாரா நிதி நிறுவனங்கள் நில கடன்களுக்கு 20 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்குகின்றன.

கடன் தொகை மீதான வரம்பு

நிலக் கடன்களுக்குக் கடனாக வழங்கக்கூடிய அதிகபட்ச தொகையைச் சில வங்கிகள் வரையறுத்துள்ளன. எனவே நீங்கள் ஒரு மனைக் கடன் வாங்கும் முன்னர்ப் பல்வேறு வங்கிகளுக்குச் சென்று அவற்றின் உச்ச வரம்புகளை விசாரித்து அறிவது சிறந்தது. 

வரிச் சலுகைகள்

வீட்டுக் கடன்களுக்கான செலுத்திய வட்டிக்கும் திரும்பச் செலுத்திய அசலுக்கும் வரி விலக்கு கிடைக்கும். இந்த வரி விலக்கு நிலக் கடன்களுக்குக் கிடையாது. இருப்பினும் மனைக் கடனை வாங்கி நீங்கள் வீடு கட்டி முடித்த பின்னர் இந்த வரி விலக்குக் கிடைக்கத் தொடங்கும்.

Have a great day!
Read more...

English Summary

What is the Difference Between Home Loan and Land Loan?