அஞ்சலக சேமிப்பு கணக்கு vs இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் சேமிப்பு கணக்கு.. விரிவான அலசல்!

அஞ்சலகத்தில் சேமிப்பு வங்கி கணக்கு துவங்க விரும்புகிறீர்களா? சாதாரண சேமிப்பு கணக்கு துவக்க 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று கடந்த வாரம் துவக்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க், மற்றொன்று இந்தியா போஸ்ட் தனது சில்லறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சாதாரண சேமிப்பு கணக்கு. நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சலகங்கள் மூலம் மிகப்பெரிய வலையமைப்பை கொண்டுள்ள இந்தியா போஸ்ட், இந்த இருவித சேமிப்பு கணக்குகளுக்கும் ஆண்டு வட்டிவிகிதமாக 4% வழங்குகிறது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்-ல் உள்ள சாதாரண சேமிப்பு வங்கி கணக்கு, அஞ்சலக சேமிப்பு கணக்கு அல்லது இந்தியா போஸ்ட் சேமிப்பு கணக்குடன் இணைத்துக்கொள்ளலாம். பேமெண்ட் பேங்க் வங்கி கணக்கில் நாள் முடிவில் ரூ1 லட்சத்திற்கும் மேல் உள்ள தொகை மற்ற இரு கணக்கிற்கு மாற்றப்படும் என இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் இணையதளமான ippbonline.com கூறுகிறது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேமிப்பு கணக்கு மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கு பற்றி அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ.

1. வைப்புநிதிக்கான வட்டிவிகிதம்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேமிப்பு கணக்கில் நாள் முடிவில் இருக்கும் இருப்புதொகைக்கு 4% வட்டிவிகிதம் தருவதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஞ்சலக சேமிப்பு கணக்கு திட்டத்தில் உள்ள வைப்புநிதிக்கு ஆண்டு வட்டிவிகிதமாக 4% வட்டிவிகிதம் வழங்குவதாக இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in குறிப்பிடுகிறது. இரண்டிலும், காலாண்டு அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது.

2. குறைந்தபட்ச முதலீடு

இந்தியா போஸ்ட் சாதாரண அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்க, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச வைப்புநிதியாக ரூ20 செலுத்தவேண்டும். இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்-ல் சாதாரண சேமிப்பு கணக்கு துவக்க அதுபோன்ற எந்தகட்டுப்பாடும் இல்லை.

3. அதிகபட்ச வைப்புநிதி வரம்பு

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் இணையதளத்தின் அடிப்படையில், அதன் சாதாரண சேமிப்பு கணக்கில், நாள் முடிவில் அதிகபட்சமாக ரூ1 லட்சம் இருப்புத்தொகை இருக்க அனுமதிக்கப்படுகிறது. அஞ்சலக சேமிப்பு கணக்கில் இதுபோன்ற அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை.

4. இரு கணக்குகளை இணைத்தல்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் சாதாரண சேமிப்பு கணக்கை அஞ்சலக சேமிப்பு கணக்குடன் இணைக்க வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அப்படி இணைக்கும் பட்சத்தில், நாள் முடிவில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் சேமிப்பு கணக்கில் ரூ1லட்சத்திற்கு அதிகமாக உள்ள இருப்புத்தொகை அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும்.

5. குறைந்தபட்ச இருப்புத்தொகை

இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் சாதாரண சேமிப்பு கணக்கில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாதாந்திர சராசரி இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படியெனில் கணக்கில் இருப்புத்தொகை குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கப்பட மாட்டாது.

இந்தியா போஸ்ட் அஞ்சலக சேமிப்பு கணக்கில், காசோலை வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ரூ500ம், மற்றவர்கள் ரூ50ம் குறைந்தபட்ச இருப்புத்தொகையாக சேமிப்பு கணக்கில் பராமரிக்க வேண்டும்.

 

Have a great day!
Read more...

English Summary

Difference Between Post Office Savings Account Vs IPPB Regular Savings