அயல்நாட்டு பண பரிவர்த்தனைகளுக்கு பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

வெளிநாடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பணம் அனுப்புவதாக இருந்தாலும், அல்லது வெளிநாடுகளில் ஏதேனும் சொத்துக்கள் வாங்குவதாக இருந்தாலும் நிரந்தரக் கணக்கு எண் என்று சொல்லப்படுகின்ற பான் (PAN) கட்டாயம் தேவை.

அதே போலச் செலவு செய்யும் தொகையின் அளவுக்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் செலவு செய்யப்படும் இந்தியர்களின் பணம் அனைத்தையும் வருமான வரிக் கணக்கின் கீழ் கொண்டு வருவதற்காக இந்திய அரசு எடுத்துவரும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

25,000 டாலர்

இந்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைக்கான நடைமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது. இதற்கு முன்னர், 25,000 டாலர் வரையிலான அயல்நாட்டுப் பரிவர்த்தனைக்குப் பான் அவசியமில்லை என்னும் நடைமுறை இருந்தது.

தாராளமாக்கப்பட்ட பணம் செலுத்தும் திட்டம்

இந்தியாவில் வசிப்பவர்கள், தாராளமாகப் பணம் செலுத்தும் திட்டத்தின் கீழ் (Liberalised Remittance Scheme (LRS) ) கல்விச்செலவு, வணிக முதலீடு போன்றவற்றிற்கு அயல்நாட்டிற்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்தியர்கள், வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கும், உறவினர்களுக்குப் பணம் அனுப்புவதற்கும் LRS முறையைப் பயன்படுத்தி வந்தனர். LRS முறையைப் பயன்படுத்தி, இந்தியாவிலிருந்து உலகின் எந்தப் பகுதிக்கும் பணம் அனுப்ப முடியும்.

வரம்பின்றிப் பணப்பரிமாற்றம் நடப்பதற்குக் கட்டுப்பாடு

தற்போது இம்முறைப்படி பணம் அனுப்ப பான் கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய வணிகர்கள், பாலிவுட் நடிகர்கள், வைர வியாபாரிகள் ஆகியோர் வரம்பின்றி வெளிநாட்டுக்குப் பணப் பரிவர்த்தனை செய்து வருவதை ரிசர்வ் வங்கி கண்டறிந்ததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தனிநபருக்கான பணம் செலுத்துகை உச்சவரம்பு

இத்திட்டத்தின் விதிமுறைகளின் படி தனிநபர்கள் வெளிநாட்டிலிருந்து பங்குகள் மற்றும் சொத்துக்களை வாங்க முடியும். ஆனால், டெரிவேட்டிவ்ஸ் போன்றவற்றின் மீது யூக வணிகம் மற்றும் சூதாட்ட வணிகத்தில் ஈடுபட முடியாது. 2015 ஆம் ஆண்டு, தனிநபர் ஒருவருக்கு, ஒரு ஆண்டுக்கான LRS வரம்பு, 1,25,000 டாலரிலிருந்து 2,50,000 டாலராக உயர்த்தப்பட்டது.

தனிநபர்களின் பணப்பரிமாற்றம் குறித்துத் தினந்தோறும் அறிக்கை

LRS முறையில் தனிநபர்கள் மேற்கொள்கின்ற பணப் பரிமாற்றங்கள் குறித்துத் தினந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளை 2018 - 19 ஆம் ஆண்டுக்கான முதல் இருமாத அறிக்கையின் மூலம் ரிசர்வ் வங்கிக் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட டீலர் வங்கிகள் (AD banks), ஒரு நிதியாண்டில் ஒவ்வொரு தனிநபரும் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து அவை LRS முறையில் நிர்ணயித்த வரம்பினை மீறியுள்ளனவா என ஆய்வு மேற்கொள்ளும்.

பான் எண்

வாடிக்கையாளர்களின் பான் எண் அடிப்படையில் பணப் பரிவர்தனைத் தகவல்கள் சேகரிக்கப்படும். இதற்கு முன்னால் 25000 டாலர்கள் வரையில் பணம் அனுப்புவதற்குப் பான் எண் கட்டாயம் இல்லை.

ஆனால் தற்போது, LRS முறையில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளுக்கும் பான் அவசியம். மேலும் LRS முறையில் நெருங்கிய உறவினர்களுக்குப் பணம் அனுப்பும் பொழுது, "நெருங்கிய உறவினர்கள்" யார் என்பதை, 1956 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்திற்குப் பதிலாக, 2013 ஆம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படும்.

 

Read more about: pan nri lrs money

Have a great day!
Read more...

English Summary

PAN becomes mandatory for sending money abroad: LRS rules tightened