என்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களுரில் ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய போக்கு நிகழ்ந்து வருகின்றது. கட்டுமான நிறுவனங்கள் சொகுசு வீடு கட்டும் திட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன. வெளி நாடுவாழ் இந்தியர்கள் (NRI) சொகுசுக் குடியிருப்புகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக ஆர்வம் காட்டுவதுதான் இதற்குக் காரணம் ஆகும்.

முக்கிய நகரங்கள்

பெங்களுரில் மட்டும் இந்த நிலைமை இல்லை. மும்பை மற்றும் புனே நகரில் உள்ள கட்டுமான நிறுவனங்களும் சொகுசு வீடு கட்டும் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் சட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ள சாதகம் மற்றும் பாதகமான அம்சங்களால் இந்நிலை காணப்படுகின்றது. புதுச் சட்டத்தின்படி கட்டுமானத் திட்டங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். திட்ட ஒப்பந்தத்தின் படி வாடிக்கையாளர்கள் மன நிறைவு கொள்ளும் வகையில் கட்டுமானங்கள் அமையாவிட்டால் கட்டுமான நிறுவனங்கள் பொறுப்பு ஏற்கவேண்டும் போன்ற சட்ட விதிகளால் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் குடியிருப்புக் கட்டுமானத் திட்டங்களில் இருந்து பின் வாங்கியுள்ளன. இதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீள்வதற்காக இது போன்ற சிறு அளவிலான கட்டுமானத் திட்டங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன

ரிஸ்க் எடுத்தால் நஷ்டத்துக்கு வாய்ப்பில்லை

ஆடம்பரமான சொகுசு வீடு கட்டுவோரின் எண்ணிக்கை குறைவுதான். இருந்தாலும், கட்டுமான நிறுவனங்கள் தற்போது இதில்தான் ஈடுபட்டுள்ளன. ரியல் எஸ்டேட் துறைக்கே உரிய ரிஸ்க் இதில் இருந்தாலும் வாடிக்கையாளர்களையும் கட்டுமான நிறுவனங்களையும் அது பாதிப்பதில்லை. காரணம், இடம் மற்றும் குடியிருப்புகளின் சொத்து மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. மும்பையில் முக்கியமான பகுதிகளில் நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு 2016 ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் தற்போது 20% உயர்ந்துள்ளது.

பெரும் நிறுவனங்கள்

பெரும்பாலான குடியிருப்புத் திட்டங்களின் மதிப்பு நூறுகோடிகளில் உள்ளது. காரணம், ஒவ்வொரு வீடுகளும் 6 முதல் 8 கோடி வரை விற்பனை செய்யப்படுகின்றன. ரியல் எஸ்டேட் துறையில் பெரும் நிறுவனங்களாக உள்ள K Raheja மற்றும் DLF போன்ற நிறுவனங்களும் மும்பை, குர்கான் (Gurgaon) போன்ற பகுதிகளில் ஆடம்பரக் குடியிருப்புத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இத்திட்டங்களின் மூலம் இந்நிறுவனங்கள் அடைந்துள்ள இலாபம் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளன. இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் DLF நிறுவனம் 450 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது. இதற்குக் காரணம், ஹரியானாவின் குர்கான் பகுதியில் இந்நிறுவனம் மேற்கொண்ட Crest மற்றும் Camellias என்னும் பெயரில் அமைந்த இரண்டு ஆடம்பரக் குடியிருப்புத் திட்டங்கள்தான்.

சிறிய திட்டங்கள் பெரிய வளர்ச்சி

சமீப காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றங்களில் இருந்து மீண்டு வருவதற்காகக் கட்டுமான நிறுவனங்கள் பெரும் திட்டங்களை விடுத்து சிறிய கட்டுமானத் திட்டங்களில் ஈடுபடுகின்றன. ஆடம்பரமான குடியிருப்புத் திட்டங்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அது இந்நிறுவனங்களைப் பாதிப்பதில்லை. "ரியல் எஸ்டேட் சட்டத்தினால் சோர்ந்திருக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு இது போன்ற சிறிய அளவிலான சொகுசு வீடு கட்டும் திட்டங்கள் பெரும் ஆறுதலாக உள்ளன."

என்ஆர்ஐ

இதனால் என்ஆர்ஐகளுக்காவே அழகிய ஆடம்பரமான வீடு தேவைப்படுகின்ற வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்திச் செய்வதற்காகப் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

Read more about: nri luxury real estate market

Have a great day!
Read more...

English Summary

Will NRIs Reshape Luxury Real Estate Market In India?