மோடி அரசை சுழலில் சிக்க வைக்கும் அவநம்பிக்கைகள்.. ரிசர்வ் வங்கியின் கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி!

பொதுப் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும் என்பதில், நாட்டு மக்களில் பாதிப்பேர் நம்பிக்கை இழந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் கருத்துக் கணிப்புகள் அம்பலப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டுத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், பொதுமக்களின் அவநம்பிக்கை அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

அதிர்ச்சிகரமான தகவல்கள்

இந்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் அண்மையில் நடத்திய நுகர்வோர் நம்பிக்கை கருத்துக்கணிப்பில்தான், இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஓர் ஆண்டில் பொதுப் பொருளாதாரச் சூழல்களும், வேலை வாய்ப்பும் தங்களை மேம்படுத்தும் என்று பொதுமக்களில் பாதிப்பேர் எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முயற்சித்தாலும், மக்கள் அதற்கான பலனைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

நம்பிக்கை - அவநம்பிக்கை

48.2 சதவீதம் பேர் வரும் 12 மாதகாலங்களில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகின்றனர். ஆனால் 27.7 சதவீதத்தினர் பொதுப் பொருளாதார நிலைமைகள் மோசமாக்கும் என்று கருதுகின்றனர்.

மோசமான எதிர்பார்ப்புகள்

49.8 விழுக்காட்டினர் அடுத்த ஆண்டைக் கடந்தும் வருமானம் அதிகரிக்கும் என்று நம்பிக்கையில் உள்ளனர். 49.1 சதவீதம் மக்கள் வேலை வாய்ப்புகள் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் என்று கருதுகின்றனர். அதேநேரம் வேலை வாய்ப்பு எதிர்பார்ப்புகள் மோசமாக்கும் என்று கால்பகுதி மக்கள் நினைக்கின்றனர்.

மேம்பாடு - நலிவு

பொதுமக்களில் 25.3 சதவீதம் பேர் கடந்த ஆண்டு வருமானத்தின் மூலம் திருப்தி அடைந்ததாகக் கூறியுள்ளனர்.33.5 விழுக்காட்டினர் வேலை வாய்ப்புகளால் மேம்பட்டதாகத் தெரிவித்திருந்தாலும், அவர்களில் 40 சதவீதத்தினர் வாழ்க்கை மோசமானதாகக் கூறியுள்ளனர். பொதுப் பொருளாதாரச் சூழல்களில் 34.6 பேர் வளர்ச்சியடைந்ததாகவும் 42 சதவீதம் பேர் நலிவடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அரசுக்கு நல்ல செய்தி இல்லை

நுகர்வோர் நம்பிக்கை ஜூன் மாதத்தை விட முந்திய மாதத்தில் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால் ஆண்டின் எதிர்பார்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது. அடுத்த ஆண்டுத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இந்த அவநம்பிக்கைகள் அரசுக்கு நல்ல செய்தியாக இருக்காது என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

துயரத்தில் கிராமப்புறங்கள்

சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட ஆறு மெட்ரோபாலிடன் நகரங்களில் இந்தக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டன. நகரங்களைவிடக் கிராமப்புறங்களில் உள்ள முறைசாரா தொழில்துறைகள் துன்பகரமான நிலையில் சிக்கியுள்ளதாக ரிசர்வ் வங்கியின் கருத்துக்கணிப்புகள் பிரதிபலித்துள்ளன.

Have a great day!
Read more...

English Summary

RBI consumer confidence survey: Majority of Indians don’t expect their economic conditions to improve