வங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியின் சர்வரை ஹேக் செய்த சைபர் குற்றவாளிகள், சில மணி நேரங்களில் 94 கோடி ரூபாயை வெளிநாட்டு வங்கிகளுக்கு மாற்றியது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகப் புனே காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள வங்கி நிர்வாகம், வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

விபரீத விளையாட்டு

ஆகஸ்டு 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் தங்களின் விபரீத விளையாட்டுக்களைத் தொடங்கிய ஹேக்கர்கள், ஆகஸ்டு 11 ஆம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையில் வங்கியின் சர்வரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பலகோடி ரூபாயை சுருட்டியுள்ளனர். இதேபோல் 13 ஆம் தேதியும் இரண்டு முறை ஊடுருவி பணத்தைக் கொள்ளையடித்தனர்

ரூ.94 கோடி சுவாகா

12000 விசா கார்டுகளின் மூலம் 78 கோடி ரூபாயை திருடிய அந்த மர்ம ஆசாமிகள், அதனை வெளிநாட்டு வங்கிகளுக்கு மாற்றியுள்ளனர். 2.50 கோடி ரூபாயை இந்தியாவுக்குள் பரிவர்த்தனை செய்துள்ளனர். இரண்டாவது முறையாகக் காஸ்மோ வங்கியின் சர்வரை ஹேக் செய்து விரைவுப் பரிவர்த்தனை மூலம் 13.94 கோடி ரூபாயை திருடினர். அந்தத் தொகையை ஹாங்காங் வங்கி ஒன்றில் ஏ.எல்.எம் டிரேடிங் லிமிடெட் என்ற வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளனர். இது உடனடியாக எடுக்கப்பட்டு விட்டது.

கார்டுகளின் விவரங்களும் திருட்டு

சர்வரில் உள்ள ஏடிஎம் சுவிட்ச் மூலமாக வாடிக்கையாளர்களின் விசா மற்றும் ரூபே கார்டுகளின் விவரங்களையும் ஹேக்கர்கள் திருடியுள்ளதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிப்பு இல்லை

400 டெபிட் கார்டுகளின் மூலம் 2800 பரிவர்த்தனைகளில் 2.5 கோடி ரூபாயை திருடப்பட்டுள்ளது. போலி கார்டுகளின் மூலமாகச் செய்யப்பட்ட பரிவர்த்தனையில் வாடிக்கையாளர்களின் கணக்குகள் பாதிக்கப்படவில்லை என வங்கியின் தலைவர் மிலிந்த் காலே கூறினார்.

ஹேக்கிங் உத்தி

ஏ.டி.எம் சுவிட் சர்வரில் மால்வேர் தாக்குதல் நடத்தி பணம் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கூட்டுறவு வங்கியான காஸ்மோஸ், 1906 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பழமையான இந்த வங்கியில் ஹேக்கர்கள் மூலம் பலகோடி ரூபாய்த் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Rs. 94 Crore Siphoned Off By Hackers From Cooperative Bank In Pune