வறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி

கசாப்புக்கடைகாரனாக இருந்திருக்கிறேன். ஓட்டலில் வேலை பார்த்திருக்கிறேன். டேபிளைத் துடைத்திருக்கிறேன். துணி துவைத்திருக்கிறேன். ஒரு சராசரி ஆணின் மனோபாவம் எதற்கெல்லாம் தயங்குமோ அத்தனையையும் செய்துள்ளேன். இது கோடீஸ்வர தொழில் அதிபர் பிரஸ்லி நிறுவனரின் வாக்குமூலம். அவர் பெயர் சதீஷ் சாமி வேலுமணி

அம்மா அவள்தான் அத்தனை வியூகங்களையும் எனக்கு கற்றுக் கொடுத்திருந்தாள். அப்பாவின் 400 ரூபாய் சம்பளத்தில் எங்கள் 6 பேரின் வயிற்றையும் வேளைத் தவறாமல் நிரப்பி வந்தாள். ஒருநாள் வறுமை எங்கள் வாழ்க்கையிலும் தலைவிரி கோலமாக விளையாடத் தொடங்கியது. உடல் நிலை பாதிக்கப்பட்ட என் அன்பு அம்மாவுக்கு டயாலிசிஸ் செய்ய முடியாமல் போனது. கஷ்ட ஜீவனங்களிலும் எங்கள் வயிற்றைக் கழுவிய அம்மாவின் மூச்சை எமன் இழுத்துக்கொண்டான். அப்போதுதான் கனவுகள் தன்னை விரட்டியதாக விவரிக்கிறார் சதீஷ்சாமி வேலுமணி

கனவில் உருவான கம்பெனி

ஒரு நிறைவான சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையிலும், சதீஷின் கனவு, வயிற்றை விடப் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தது. கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் போது வர்த்தக ஈடுபாடுதான் அவரை வதைத்தது. 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் எனக் கற்பனை செய்கிறார் சதீஷ் வேலுமணி..

நனவாகிறது கனவு

2014 ஆம் ஆண்டு கனவு நனவாகிறது. தானியங்கி இணைய இயங்குதளம் மூலம் விநியோகிக்கும், விரைவு உணவகங்களை பரீட்சார்த்த முறையில் சென்னையில் 3 இடங்களில் தொடங்குகிறார். காலப்போக்கில் புனே மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களிலும் அதனை விரிவுபடுத்தினார்.

புதிய உத்தி

பிரபலமான உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள பிரஸ்லி, உணவுப் பொட்டலங்களை உடனுக்குடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தானியங்கி இயங்குதளங்களில் தேவையான உணவுகளைத் தேர்வு செய்து பொத்தானை அழுத்தினால் போதும். இழுப்பறைகளுடன் கூடிய எந்திரத்தில் இருந்து உங்களுக்குக் குறிப்பிட்ட உணவுப் பொட்டலங்கள் கிடைத்து விடும். இதற்காக ஒவ்வொரு அவுட்லெட்டிலும் ஒரு ஊழியரை பிரஸ்லி நிறுத்தியுள்ளது.

விநியோக வசதி

ஒரு யூனிட்டில்(அலகில்) ஒரே நேரத்தில் 140 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க முடியும். இது தவிர 300 பொட்டலங்களைச் சேமிக்க முடியும். ஒரு யூனிட்டை ஒரு இடத்தில் நிறுவ 8 மணி முதல் 12 மணி நேரம் போதும் என்கிறார் சதீஷ்

விரிவடைகிறது சேவை

வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 20 முதல் 25 வகைகளில் உணவுகள் வழங்கப்படுகிறது. வழக்கமான நேரங்களில் சில்லறை விற்பனை அவுட்லெட்கள் செயல்படுகின்றன. விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் கூட்டத்தை பொறுத்து பிரஸ்லி விரைவு உணவகம் திறக்கப்பட்டு சேவைத் தொடங்குகிறது

ரூ.50 கோடி இலக்கு

முதல் எந்திரத்தை நிறுவ 35 லட்சம் ரூபாய் செலவு செய்த பிரஸ்லி, தற்போது 3.0 தலைமுறையிலான எந்திரங்களை மலிவு விலையில் வாங்கி நிறுவி வருகிறது. 2017-18 நிதி ஆண்டில் மொத்த வருவாயாக 5 கோடி ரூபாயை இந்த நிறுவனம் ஈட்டியதாகத் தெரிவித்த சதீஷ், நடப்பு நிதி ஆண்டில் 50 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறினார்.

ரயிலிலும் பிரஸ்லி

அடுத்த மாதத்துக்குள் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட் 12 யூனிட்டுகளை நிறுவ முடிவு செய்துள்ள பிரஸ்லி, உதய் ரயில்களில் ஒவ்வொரு தானியங்கி இயக்குதளங்களைக் கொண்ட விரைவு உணவகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளததாக சதீஷ் தெரிவித்தார்.

கோவைவாசியான பாலக்காட்டுக்காரர்

கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சதீஷ்சாமி வேலுமணி, பாரம்பரியமான தச்சுவேலையைத் தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். தச்சு வேலையில் நாட்டமில்லாத அவரது அப்பா குடும்பத்துடன் கோவையில் குடியேறி இருக்கிறார்.

இக்கட்டான சூழல்

அம்மா, அப்பா மூன்று குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் குடியேறிய சதீஷின் குடும்பம், பொதுக்கழிப்பிடத்தைத்தா பயன்படுத்தி வந்துள்ளது. அதிகாலையிலேயே வாளிகளுடன் 40 பேர் வரிசையில் நிற்கக் காலைக்கடனை கழிக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை.

வறுமையும் வரக்காப்பியும்

வீட்டில் பால்வாங்க வசதியில்லாததால் வரக்காப்பி மட்டுமே குடித்து வந்ததாகக் கூறும் சதீஷ், 1998 இல் அப்பா ஓய்வு பெற்ற 400 ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியதாகத் தெரிவித்தார், இந்தச் சம்பளத்தில் தான் அத்தனை பேரின் வயிறும் அம்மாவின் கைவண்ணத்தால் நிரம்பியுள்ளது. அப்போது தான் அம்மா நல்ல சமையல் கலை நிபுணர் என்பது தெரிந்ததாம்.

குச்சி ஐஸ் வாங்க வழியில்லை

12 வயதாக இருக்கும்போது வீட்டில் ஒரு டியூப் லைட், மின்விசிறியைத் தவிர வேறு வசதி இல்லை. நிதிநிலை மோசமாக இருந்தது. சில்லறைக் காசு இல்லாததால் அம்மா குச்சி ஐஸ் கூட வாங்கிக் கொடுக்கவில்லை என்று பழைய ஞாபத்தை அசைபோடுகிறார் சதீஷ்

அம்மாவின் மறைவு

ஓய்வூதியப்பலனில் வந்த சிறு தொகையைக் கொண்டு கோயம்புத்தூர் புறநகர் பகுதியில் ஒரு சிறிய வீட்டை சதீஷ் அப்பா கட்டுகிறார். அங்குக் குடியேறியபோது கடன் உள்ளிட்ட பிரச்சினைகளால் வீட்டின் 4 சுவர்களுக்குள்ளும் வறுமைதான் நிரம்பியிருந்தது. அப்போது திடீரென சதீஷின் அம்மாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. டயாலிசிஸ் செய்ய முடியாத கையறு நிலையில் உயிர் பிரிந்துள்ளது. ஓட்டலில் வேலை பார்த்தும், டேபிள் துடைத்தும் குடும்பச்சுமையை ஏற்றுக்கொள்கிறார் சதீஷ்.

வறுமை தடையாக இல்லை

10 ஆம் வகுப்பு வரையில் தமிழ் மீடியத்தில் படித்த சதீஷ், மேல்நிலைப் பள்ளியை இங்கிலீஷ் மீடியத்தில் தொடர்கிறார். கோவை குமரகுரு கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்கிறார். காலேஜில் கோல்டு மெடல். யூனிவர்சிட்டி சில்வர் மெடல் எனப் படிப்பில் கவனம் செலுத்துகிறார். அப்போது குடும்ப சூழல் இதற்குத் தடையாக இருக்கவில்லை என்கிறார் சதீஷ்

இந்த காலகட்டத்தில் தான் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. அப்போது தனக்குள் உருவான கற்பனையும், கனவுகளும் தற்போது நனவாக மாறி இருப்பதாகக் கூறுகிறார் சதீஷ்சாமி வேலுமணி. உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய கனவுகள் ஒருபோதும் வீணாகாது என்பதை சதீஷ்சாமி வேலுமணி நிரூபித்துள்ளார். ஆகையால் கனவு காணுங்கள். இது சதீஷ் மணியின் அன்பான வேண்டுகோள்

 

Have a great day!
Read more...

English Summary

‘I have cut meat, worked in restaurants, cleaned tables, washed dishes, done everything’