7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் ஜியோ, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் மற்றும் வோடபோன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள், குரல் அழைப்புகளையும், டேட்டாக்களையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளன. இது தவிர போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் கட்டணங்களைச் செலுத்துவதற்கான காலக் கெடுவை நீட்டித்துள்ளன.

கனமழை காரணமாக கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக கேரள மாநிலம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெள்ளம் மற்றும நிலச்சரிவில் சிக்கி 67 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியாத இந்தச் சூழலில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

ஏர்டெல் உதவி

ஏர்டெல் நிறுவனம் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு தினந்தோறும் 30 ரூபாய் மதிப்புள்ள குரல் அழைப்புகளை இலவசமாக வழங்குகிறது. அடுத்த 7 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாக கூறியுள்ள அந்த நிறுவனம், 17 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரை எஸ்.டி.டி அழைப்புகளை இலவசமாக பெறலாம் என தெரிவித்துள்ளது.

காலக்கெடு நீட்டிப்பு

இது தவிர போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 இடங்களில் வை பை வசதி செய்யப்பட்டுள்ளது. போன்களை ரீசார்ஜ் செய்து கொள்ள திரிச்சூர், கோட்டயம், திருவனந்தபுரம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள ஸ்டோர்களில் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜியோவின் இலவச அழைப்புகள்

உறவினர்கள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்ள வசதியாக ஜியோ நிறுவனம் வரம்பில்லா அழைப்புகளையும், இலவச டேட்டாக்களையும் வழங்கியுள்ளது. ஒரு வார காலத்துக்கு இந்த சேவை தொடரும் என அறிவித்துள்ளது.

வோடபோன் உதவிக்கரம்

நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் மதிப்புள்ள அழைப்புகளையும், 1 ஜி.பி டேட்டாவும் இலவசமாக வழங்க வோடபோன் முன்வந்துள்ளது. சந்தாதாரர்கள் 144 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால் உடனடியாக 30 ரூபாய்க்கு டாப் அப் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. வௌளப்பாதிப்பு நீடிக்கும் வரை போஸ்ட் வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

ஐடியா சேவை

ஐடியா நிறுவனம் 10 ரூபாய் மதிப்புள்ள அழைப்புகளையும், 1 ஜி.பி டேட்டாவையும் கேரள வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகிறது. •150•150 என்ற எண்ணுக்கு அழைத்தால் ரீசார்ஜ் செய்யப்படும் என கூறியுள்ளது.

 

 

பி.எஸ்.என்.எல் சலுகை

பி.எஸ்.என்.எல் நிறுவனம் நாள் ஒன்று 20 நிமிடத்துக்கான இலவச அழைப்புகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. குறுந்தகவ்ல் மற்றும் டேட்டாக்கள் 7 நாட்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

 

Have a great day!
Read more...

English Summary

Kerala Floods: Jio, Airtel, Vodafone, Idea, BSNL Offer Free Data and More