வெள்ளத்தால் அழிந்து கொண்டிருக்கும் கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவி..!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 500 கோடி ரூபாயை, உடனடி நிவாரண நிதியாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, புனரமைப்புப் பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.

மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் உட்பட உயர் அதிகாரிகளுடன் கொச்சியில் ஆலோசனை நடத்தினார்.

வெள்ளப்பாதிப்பு

மே மாதம் 29 ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8 ஆம் தேதி தீவிரமடைந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மோசமான வானிலை

இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று திருவனந்தபுரம் சென்றார். இன்று காலை அங்கிருந்து கொச்சி சென்ற அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ளப்பாதிப்பை பார்வையிட இருந்தார். மோசமான வானிலை நிலவியதால் அந்தத் திட்டம் ரத்துச் செய்யப்பட்டது.

ரூ.500 கோடி நிதியுதவி

கொச்சியில் மாநில ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் அல்போன்ஸ் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். உடனடி நிவாரண நிதியாக 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ரூ.2 லட்சம் நிவாரணம்

இதுதவிர உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

கோரிக்கை

கடந்த 12 ஆம் தேதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஆயிரத்து 220 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. நிலச்சரி மற்றும் வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 8,316 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Have a great day!
Read more...

English Summary

PM Modi visits Kerala; announces Rs 500 crore relief fund