ஹெவிபேடு, அருங்காட்சியகங்களுடன் கட்டப்பட்ட பங்களாக்கள் - வாரி இறைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

சொந்த வீடு இருப்பதால் மட்டும் ஒருவன் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கொண்டவனாகி விடமாட்டான். அழகான ஆடம்பரமான வீடுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து. ஆடம்பரமான மாளிகைகள் வாழ்க்கையில் எப்போதுமே கூடுதல் கவர்ச்சியை உருவாக்கிக் கொடுக்கின்றன.

இந்தியாவில் எழுப்பப்பட்டுள்ள பல்வேறு மாடமாளிகைகளில் பணத்தின் பிரதிபலிப்பைக் காண முடிகிறது. வெற்றிகரமான மனிதர்கள் எப்போதுமே ஆடம்பரமான மாளிகையைக் கட்டத்தான் தீர்மானிக்கிறார். பணத்தை வாரி இறைத்து உருவாக்கப்பட்ட ஆடம்பர பங்களாக்கள் எத்தனையோ இருக்கின்றன. இருப்பினும் இந்தியாவில் உள்ள 10 மாளிகைகள் தனித்துவமானவை.

ரத்தன் டாடா வீடு

உலக அளவில் பிரபலமாக அறியப்படும் இந்தியாவின் பாரம்பரியமிக்க வர்த்த வம்சாவளியின் பங்களா. மும்பை கொலபாவில் உள்ள இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் ரத்தன்டாடா. 15000 சதுர அடி பரப்பளவில் 3 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. விலையுயர்ந்த பங்களாக்களின் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது. ஒரு ஊரையே வளைத்துக் கட்டியிருக்கும் இந்த வீட்டின் மதிப்பு 150 கோடி ரூபாய் ஆகும்.

என்.சி.பி.ஏ. அபார்ட்மெண்ட்ஸ்

வானத்தைக் கிழிப்பது போல உயர்ந்து நிற்கும் இந்த என்.சி.பி.ஏ அடுக்குமாடி குடியிருப்பு, மும்பையின் ஒரு முக்கியமான லேண்ட்மார்க். நாரிமன் பாய்ண்ட்டில் அமைந்திருக்கிற இந்த அபார்ட்மெண்டில் வீடு வாங்குவது பலபேரின் கனவாக உள்ளது. இந்த அபார்ட்மெண்ட்டில் 4 படுக்கையறைகள் கொண்ட ஒரு வீடு 29 கோடி ரூபாயாகும். அந்த அளவுக்கு இந்த அபார்ட்மெண்டுக்குள் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ஒயிட் ஹவுஸ்- பெங்களூரு

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கு டாட்டாவும், அரசின் விசாரணை அமைப்புகளுக்குத் தண்ணியும் காட்டி வரும் மல்லையாவுக்குச் சொந்தமானது. பெங்களூரில் யு.பி சிட்டியில் அமைந்துள்ள இந்த ஆடம்பர மாளிகையின் பெயர் ஒயிட் ஹவுஸ் இன் தி ஸ்கை. 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த இல்லம், மதுபானத்தொழிலில் கொழிக்கும் செல்வச் செழிப்புக்கு கட்டியம் கூறுகிறது.

ராணா கபூர் இல்லம்

இந்தியாவின் 10 விலை உயர்ந்த கட்டிடங்களில் இது 7 வது இடத்தைப் பிடித்துள்ளது. மும்பையில் டோனி அல்டாமெண்ட் சாலையில் கம்பீரமாக காட்சி அளிகிகிறது. 120 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆடம்பர மாளிகை எஸ் பேங்கின் உரிமையாளர் ராணாகபூருக்கு சொந்தமானது. சகல சௌபாக்கியங்களும் இந்த வீட்டுக்குள் இருப்பதாக அவர் நம்புகிறார்.

அபோடு- மும்பை

மும்பையின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இந்த வீடு இந்தியாவின் மதிப்புமிக்க மற்றொரு வர்த்தக முதலாளிக்குச் சொந்தமானதுதான். முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியுடையது இது. இந்த வீட்டின் மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இருக்காதோ பின்னே...

ஜே.கே. ஹவுஸ் - மும்பை

மும்பை பீச் கேன்டியில் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த வீட்டின் உரிமையாளர் ரேமண்ட் நிறுவன அதிபர் கவுதம் சிங்கானியா. ஜே.கே.ஹவுஸ் என்று அழைக்கப்படும் இதில் ஹெல்த் செண்டர், ஹெலிபேடு மற்றும் அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. 30 க்கும் அதிகமான தளங்களைக் கொண்ட வீட்டில் உல்லாச உணர்வுகளை உருவாக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ரவி ருய்யாவின் இல்லம்

டெல்லியில் டீஸ் ஜனவரி மார்க் சாலையில் உள்ள இந்த வீடு ரவி ருய்யாவுக்கு சொந்தமானது. பல ஆண்டுகளுக்கு நிலைகுலையாமல் இருக்கும் அளவுக்கு அழுத்தமாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரவி ருய்யாலம் அவரது சகோதரர் சசி ரூய்யாவும் இணைந்து எழுப்பிய இந்த ஆடம்பர மாளிகையின் மதிப்பு 120 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

நவீன் ஜிண்டால் வீடு - டெல்லி

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், அரசியல் பிரமுகருமான நவீன் ஜிண்டாலின் ஆடம்பர இல்லம். 120 கோடி ரூபாய் மதிப்பில் வசதிகள் அனைத்தையும் வனைந்து கட்டப்பட்ட இந்தப் பங்களா டெல்லியில் உள்ளது. நவீன் ஜிண்டாலின் அரசில் அதிகாரத்தையும், செல்வச் செழிப்பையும் வீட்டின் புறத்தோற்றம் காட்டுகிறது.

மன்னாத், மும்பை

இந்தி திரைப்பட உலகில் முத்திரை பதித்த ஷாரூக் கானின் சொந்த வீடு இது. மும்பை பந்ராவில் உள்ள இந்த ஆடம்பர மாளிகைதான் எஸ்.ஆர்.கே- கவுரிகான் தம்பதிகளின் கனவு இல்லம். 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வீடு, இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க வசிப்பிடமாகத் தகுதி பெற்றுள்ளது.

ஆண்டிலா, மும்பை

மும்பையில் உள்ள ஆண்டிலா ஆடம்பரமாளிகை, வர்த்தக உயரத்தைப் பறைசாற்றும் அடையாளம். 4 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீடு, முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. அவரது பணமும், பவிசும் வீட்டின் கட்டுமானங்களில் பிரதிபலிக்கிறது. 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தப் பங்களாவில் 27 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு வசதிகள்... மும்பை வந்து செல்லும் வெளியூர்வாசிகள் இதைச் சுற்றுலாத்தலம் போலப் பார்த்து விட்டுச் செல்கிறார்கள்.

இந்தியாவில் உள்ள மிக விலை உயர்ந்த பங்களாக்கள் பற்றிய சர்வே 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

Have a great day!
Read more...

English Summary

Top 10 Most Expensive Houses In India 2018