தோட்டத் தொழில்களை அழித்த இயற்கை பேரிடர்.. காபி, டீ விலை உயரக்கூடிய ஆபத்து!

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் புரட்டிப்போட்ட பேய்மழையும், நிலச்சரிவும் தோட்டத்தொழில்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவில் 700 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 2000 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பெய்த கனமழையில் ரப்பர் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டதோடு, மிளகுப் பயிர்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதிலிருந்து மீண்டு வருவது சவாலான காரியம் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேயிலை உற்பத்தி

கேரளாவில் மூணாறு, வயநாடு, நெல்லியம்பதி உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடகாவில் குடகு, சிக்மகளூர் மற்றும் ஹசன் உள்ளிட்ட பகுதிகளிலும் தேயிலை, காபித் தோட்டங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இருதினங்களுக்கு முன்னர் ஒரு வார காலமாகத் தொடர்ந்த வெள்ளத்தால் தோட்டத்தொழில்கள் பாதிக்கப்பட்டன.

ரூ-700 கோடி சேதம்

கேரள மாநிலத்தில் மட்டும் 40000 ஹெக்டேர் பரப்பளவுள்ள விவசாய நிலங்களை வெள்ளம் சூறையாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு 900 கோடி ரூபாய் இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். அதேநேரம் தோட்டத்தொழிலில் 600 கோடியிலிருந்து 700 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சரிந்த ரப்பர் மரங்கள்

தேயிலை, ரப்பர், மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களின் இழப்பு எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும் என்று கூறும் கேரள விவசாயிகள் சங்க செயலாளர் அஜீத், குறைந்த விலை நிர்ணயம், சீதோஷ்ண நிலை மாறுபாடு மற்றும் கூலி உயர்வுகளால் தள்ளாடும் தொழிலில் வெள்ளம் நட்டத்தை உருவாக்கி விட்டதாகத் தெரிவித்தார்.

இருண்ட வர்த்தகம்

ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழை காரணமாகத் தேயிலை உற்பத்தி ஒரு இருண்ட வர்த்தகத்தை நோக்கி நகர்வதாகத் தெரிவித்த உற்பத்தியாளர்கள், விலை வீழ்ச்சியும் தவிர்க்க முடியாததாகி விட்டதாகக் கூறினார். இந்தியாவில் தேவையில் 85 சதவீத ரப்பர் உற்பத்தியை செய்து வரும் கேரளாவுக்கு இது கெட்ட நேரம் என்று குறிப்பிடுகிறார்கள்.

தோட்டப்பயிர்கள் நாசம்

இந்தியாவின் காபி உற்பத்தியில் 70 சதவீதத்தைக் கர்நாடக பூர்த்திச் செய்கிறது.கொடகு, சிக்மகளூர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் காபி தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சரசாரியான லாபத்தை எதிர்பார்க்க முடியாது எனத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பிரமோத் கூறினார்.

பேரிழப்பு

வெள்ளத்தால் பிடுங்கி வீசப்பட்ட காபி பயிர்களால் 1500 கோடி முதல் 2000 கோடி ரூபாய்க்கு இழப்பு இருக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2018- 2019 ஆம் ஆண்டுகளில் 70 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை நட்டம் ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது. இதேபோல் மிளகு, நெல் உள்ளிட்டவற்றிலும் குறிப்பிடத்தக்க அளவில் உற்பத்தி சரிவு உருவாகியுள்ளது

நோய்களால் பாதிப்பு

கொடகு, வயநாடு, இடுக்கி, சிக்மகளூரில் மழை மீண்டும் தொடங்கினால் காபி, டீ பயிர்களை நோய்கள் தாக்கக்கூடும் என்று காபி வாரிய இயக்குநர் ரகு ராமுலு கூறினார். கறுப்பு அழுகல், தண்டு அழுகல் மற்றும் பூஞ்சாண நோய்களின் அறிகுறிகள் தற்போது தோன்றத் தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்றுமதி சரிவு

நிலச்சரிவு, வெள்ளத்தால் சாலை துண்டிப்பு, காபி மற்றும் தேயிலை தோட்டங்களின் பாதிப்புக் காரணமாக 2018-19 ஆண்டுகளில் ஏற்றுமதி குறைய் வாய்ப்புள்ளது. உற்பத்தி குறைந்தால் காபி, டீயின் விலை அதிகரிக்கும் ஆபத்தும் இருக்கிறது.

Have a great day!
Read more...

English Summary

It’s ‘raining’ trouble for plantation sector in Kerala, Karnataka