மிரட்டலுக்கு பணிந்தது ஏர் இந்தியா.. விமானிகளின் சம்பள நிலுவைபடியை வழங்கியது

விமானிகளுக்கு ஜூன் மாதத்துக்கான ஊதிய படிகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது. நிலுவைப் படிகளை உடனடியாக வழங்காவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்ற விமானிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜூன் மாதத்துக்கான படிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலுவைத் தொகையை உடனடியாக வழங்காவிட்டால் விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என கடந்த ஆகஸ்ட்-17 அன்று இந்திய வர்த்தக விமானிகள் கூட்டமைப்பு ( ஐசிபிஏ), ஏர் இந்தியாவின் நிதிப் பிரிவு இயக்குநருக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஏர் இந்தியாவின் ஏர் பஸ் 320 விமானத்தை இயக்கும் 700 விமானிகள் இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலுவைப் படி

நிலுவைப் படி உடனடியாக வழங்கப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்த அதேவேளையில் படிகள் வழங்கப்படாவிட்டாலும் கேரள வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட தயாராக இருப்பதாக ஆகஸ்ட்-19 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு விமானிகள் கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பணப் பற்றாக்குறை

ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பதற்கு கடந்த ஆண்டு அரசு முடிவெடுத்த நிலையில் நிறுவனத்துக்கு நிதி உதவிகள் அளிப்பதை நிறுத்திவைத்துள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணப் பற்றாக்குறை காணப்படுகிறது.

மத்திய அரசு

தற்பொழுது தனியாருக்கு விற்பதற்கு முன்பாக மற்ற விமான நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு திறனுள்ள நிறுவனமாக ஏர் இந்தியாவை மாற்றுவதற்கு அரசு திட்டம் தீட்டிவருகிறது.

ஊதியம்

பணப் பற்றாக்குறையின் காரணமாக கடந்த ஏழு மாதங்களில் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்காமல் 6 முறைகள் ஏர் இந்தியா இழுத்தடிப்பு செய்துள்ளது. ஜூலை மாதத்துக்கான ஊதியத்தை கால தாமதமாக கடந்த ஆகஸ்ட்-14 அன்றுதான் ஏர் இந்தியா வழங்கியுள்ளது.

கடிதம்

ஆகஸ்ட்-17 அன்று நிதிப் பிரிவு இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கிடையே வேறுபாடுகள் காட்டப்படுவதாகவும் விமானிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. மற்ற அனைவருக்கும் முழு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், விமானிகள் மற்றும் கேபின் க்ரூ ஊழியர்களுக்கு மட்டும் பறத்தல் படிகள் வழங்கப்படவில்லை என அந்தக் கடிதத்தில் விமானிகள் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. மொத்த வருவாயில் விமானிகள் மற்றும் கேபின் க்ரூ ஊழியர்கள் அதிக அளவு பங்களித்துவரும் நிலையிலும் இந்த வேறுபாடுகள் காட்டப்படுவதாக விமானிகள் கூட்டமைப்பு கூறியிருந்தது. பறத்தல் படிகளை ஊதியத்திலிருந்து தனியாக பிரிக்கக்கூடாது என்றும் ஏர் இந்தியாவுக்கு விமானிகள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்திருந்தது.

ஏர் இந்தியா

முன்னதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க எந்த தனியார் நிறுவனமும் முன்வராததால் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.தொடர்ந்து நஷ்டம் அடைந்துவரும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் கடன்களை அடைக்க ரூ.500 கோடி அளிக்குமாறு விமான போக்குவரத்து அமைச்சகம், நிதி அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Air india gives the balance salary to its employees