நிதி அமைச்சராக பொறுப்பேற்றார் அருண் ஜேட்லி..!

3 மாத இடைவெளிக்குப் பிறகு நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சராக அருண் ஜேட்லி மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த மே மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதைத் தொடர்ந்து அவர் ஓய்வில் இருந்துவந்தார்.

Advertisement

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70-க்கும் கீழாக குறைந்துவரும் நிலையில் அருண் ஜேட்லி மீண்டும் நிதி அமைச்சராக பொறுப்பேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2018-ம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 9 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. ஆசிய நாணயங்களில் மிக அதிக அளவு சரிவை சந்தித்த நாணயம் இந்திய ரூபாய் ஆகும். இதனால் 2018-19 நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3 சதவீதம் அளவுக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். 2017-18 நிதியாண்டில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 1.9 சதவீதமாக இருந்தது.

Advertisement

சமீபத்தில் வெளியான தேசிய புள்ளியியல் ஆணையத்தின் அறிக்கை, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைவிட கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தது. இத்தகைய சூழலில் அருண் ஜேட்லி மீண்டும் நிதி அமைச்சராக பொறுப்பேற்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மூலம் பெறப்படும் வரி வருவாய் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எட்டாதது, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலக்கலை வெற்றிகரமாக செயல்படுத்த முடியாதது போன்ற நிகழ்வுகளால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக குறைப்பதில் சிக்கல்கள் நிலவும் சூழலில் ஜேட்லி நிதி அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார்.

Advertisement

நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அருண் ஜேட்லிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் அறிவித்ததைத் தொடர்ந்து புதுடெல்லி தலைமை செயலக கட்டிடத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஜேட்லி பொறுப்பேற்றுக்கொண்டார்.

நிதிச் செயலர் ஹஷ்முக் ஆதியா, நிதிச் சேவைகள் செயலர் ராஜீவ் குமார் உள்ளிட்ட பல்வேறு அரசு செயலர்களையும் அருண் ஜேட்லி அப்போது சந்தித்தார். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்தார்.

கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் அடுத்த சில வாரங்களுக்கு பொதுவெளிக்கு அவர் அதிகமாக வரமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரக பாதிப்பு காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக அருண் ஜேட்லி ஓய்வில் இருந்துவந்த நிலையில் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறையை, ரெயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கவனித்துவந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary

arun jaitley is taking power as finance minister
Advertisement