ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்..!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் (ஆர்ஐஎல்) சந்தை மூலதனம் ரூ.8 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ரூ.8 லட்சம் கோடி சந்தை மூலதன மதிப்பினை தாண்டும் முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குகள்

ஆர்ஐஎல் நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தின்போது மும்பை பங்கு சந்தையில் 1.86 சதவீதம் விலை உயர்ந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.1,269.70 என்ற அளவில் வர்த்தகமாயின. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.8,05,000 கோடியை எட்டி சாதனை படைத்தது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து அதிகரித்துவருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்தநிலையில் ஆர்ஐஎல் பங்குகள் அதிக அளவில் வர்த்தகமாயின.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர்

ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவையான ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் மற்றும் ஜியோ போன் 2 மூலம் அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்றன.

 

 

வாடிக்கையாளர்கள்

ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவது, வாயு சுத்திகரிப்பு அமைப்புகளை ஆர்ஐஎல் அமைத்திருப்பது போன்றவற்றின் மூலமும் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஐஎல் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் சிறப்பாக உள்ளதும் முதலீட்டாளர்களை உற்சாகம்கொள்ள செய்துள்ளது. 2018-ம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பங்குகள் ஒட்டுமொத்தமாக 38 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளன.

ஜியோ

ஜூன் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.612 கோடி லாபம் அடைந்துள்ளது. நிறுவன செயல்பாடுகள் மூலம் ரூ.8,109 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மார்ச் காலாண்டில் ஜியோ நிறுவனம் ரூ.510 கோடி லாபம் ஈட்டியிருந்தது. மார்ச் காலாண்டில் வருவாய் ரூ. 7,128 கோடியாக இருந்தது. சில்லறை வர்த்தகப் பிரிவு ஈட்டும் வருவாய் 123.7 சதவீதம் உயர்ந்து ரூ.25,890 கோடியாக உள்ளது.

தொலைத்தொடர்பு ஆணையம்

தொலைத்தொடர்பு ஆணையத்தின் தகவல்படி கடந்த ஜூன் மாதம் 97.1 லட்சம் வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையில் இணைத்துள்ளது. இதன்மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 21.5 கோடியாக அதிகரித்துள்ளது.

 

 

மார்கன் ஸ்டான்லி

வாடிக்கையாளர் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், விலையை உயர்த்தும் எண்ணும் எதுவும் நிறுவனத்துக்கு தற்போது இல்லை எனவும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஜியோ நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார். ஆர்ஐஎல் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை சந்திக்கும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தை மூலதனம்

சந்தை மூலதன மதிப்பில் ஆர்ஐஎல் நிறுவனத்துக்கு அடுத்த இடத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனம் ரூ. 7.79 லட்சம் கோடியாக உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Reliance Industries Crosses Rs 8 Lakh Crore In Market Value