அமேசான் - வால்மார்ட் கடும் போட்டி தள்ளுபடிகளை வாரி வழங்க திட்டம்

வரவிருக்கும் விடுமுறை காலங்களில் வாடிக்கையாளர்கள் யாரிடமிருந்து அதிக அளவில் பொருட்களை வாங்க இருக்கிறார்கள் என்பது தொடர்பாக வால்மார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்த நுகர்வோர் செலவழிப்புத் தொகையில் 40 சதவீதம் அளவுக்கு இணைய சில்லறை வர்த்தக நிறுவனங்கள் பங்களிக்கும் நிலையில் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

அமேசான் இந்தியா நிறுவனமும், வால்மார்ட்டின் பிளிப்கார்ட் நிறுவனமும் தொலைக்காட்சிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களின் விற்பனையை முந்தைய ஆண்டுகளைவிட 2 மடங்கு அளவு அதிகரித்துள்ளன. பெருமளவிலான தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு இவை அளித்து வருகின்றன.

வால்மார்ட்

அமேசான் நிறுவனம் விற்பதைவிட அதிக மதிப்பிலான மற்றும் அதிக எண்ணிக்கையிலான பொருட்களை பிளிப்கார்ட் விற்கவேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் முந்தைய பிளிப்கார்ட் மேலாண்மை குழுவுக்கு வால்மார்ட் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வால்மார்ட்டிடம் இருந்து பெற்ற 2 பில்லியன் டாலர் தொகையின் ஒரு பகுதியை இந்த ஆண்டு விற்பனைக்காக பிளிப்கார்ட் முதலீடு செய்யும் எனத் தெரிகிறது. அமேசான் நிறுவனமும் இதற்கு இணையாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதால் பெரிய அளவிலான தள்ளுபடிகளை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

தீபாவளி

சிறப்பு நிகழ்வுகளுக்கு மட்டும் தள்ளுபடி அளிக்கும் நடைமுறையை மாற்றி தீபாவளிவரை தொடர்ச்சியாக தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகை அளிக்க இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நோ காஸ்ட் ஈஎம்ஐ & எக்ஸ்சேஞ்

நோ காஸ்ட் ஈஎம்ஐ மற்றும் பழைய பொருட்களை கொடுத்து புதிய பொருட்களை வாங்குதல் போன்றவற்றுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதாகவும், இந்த விழாக்காலத்தை விற்பனை அதிகரிப்பு, புதிய வாடிக்கையாளர் சேர்ப்பு போன்றவற்றுக்கு உகந்த காலகட்டமாக பார்ப்பதாகவும் அமேசான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 3.8 லட்சம் விற்பனையாளர்கள் 170 மில்லியன் பொருட்களை விற்க இருப்பதாகவும், அக்டோபர் 9 முதல் 11 வரையிலான காலகட்டத்தில் முதல்கட்ட விழாக்கால சலுகைகள் ஆரம்பமாகலாம் எனவும் அமேசான் அதிகாரி குறிப்பிட்டார்.

 

டிவி

தீபாவளி காலத்தில் 32 அங்குலம், 43 அங்குலம் மற்றும் 50 அங்குலம் கொண்ட தொலைக்காட்சிகளின் விற்பனையில் மிகப்பெரிய அளவில் தள்ளுபடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் விற்பனை

தீபாவளி காலத்தில் ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்குவது மிக அதிக அளவில் அதிகரிக்கும் என வியூ, பிபிஎல், தாம்சன், ஸ்கை வொர்த், ஒனிடா மற்றும் கோடக் போன்ற நுகர்வோர் மின்னணு பிராண்ட்களைச் சேர்ந்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விழாக்காலத்தில் ஸ்மார்ட் போன் விற்பனை 70 முதல் 80 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என நம்புவதாக சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் அமேசான் மற்றும் வால்மார்ட் இடையே கடும் போட்டி நிலவும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு விழாக் காலங்கள் பெரும் கொண்டாட்டமாக அமைய உள்ளன.

Have a great day!
Read more...

English Summary

amazon walmart plans to offer heavy competition on festival season