டெக் மஹிந்திரா தலைமை செயல் அதிகாரி ஊதியம் 146 கோடி ரூபாய்!

டெக் மஹிந்திரா நிறுவன தலைமை செயல் அதிகாரி சி.பி.குர்னானி 2017-18 காலகட்டத்தில் 146.19 கோடி ரூபாயைத் தனது ஊதியமாகப் பெற்றுள்ளார். இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் அவர் பெற்ற மொத்த ஊதியம் ரூ.510 கோடியை எட்டியுள்ளது.

எச்சிஎல்

ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சி.விஜய்குமார், 2017-18 காலகட்டத்தில் 33.13 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார். விஜயகுமார் ஒரு முழு ஆண்டுக்கு ஹெச்சிஎல் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பது இதுதான் முதல்முறை என்பதால் கடந்தமுறை அவர் பெற்ற ஊதியத்தோடு இதனை ஒப்பிடமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆனந்த் குப்தா தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து விஜயகுமார் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

டிசிஎஸ்

2017-18 காலகட்டத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதனின் ஊதியம் ரூ.12 கோடியாக இருந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் அவரது ஊதியம் ரூ.6.2 கோடியாக இருந்தது. 2017-ம் ஆண்டு ஜனவரியில் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டார்.

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2018-ம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றுள்ள சலில் பரேக், ஆண்டு இறுதியில் ரூ.32.5 கோடி அளவுக்கு ஊதியம் பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக 2017-ம் நிதியாண்டில் இன்போசிஸ் முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்கா ரூ.42.92 கோடி அளவுக்கு ஊதியம் பெற்றிருந்தார்.

விப்ரோ

2018-ம் நிதியாண்டில் விப்ரோ தலைமை செயல் அதிகாரி அபிதாலி நீமச்வாலாவின் ஆண்டு ஊதியம் 34 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.18.2 கோடியாக உள்ளது. மொத்த சம்பளமாக அவருக்கு ஆண்டுக்கு 6.2 கோடி ரூபாயும், பங்குகள் மூலமாக 10.2 கோடி ரூபாயும் கிடைக்கிறது. போனஸ் மற்றும் பிற வகைகளில் 1.71 கோடி ரூபாயும், ஓய்வூதியப் படிகள் வழியாக 30 லட்ச ரூபாயும் நீமச்வாலாவுக்கு கிடைக்கிறது. இவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு டாலரில் ஊதியம் அளிக்கப்படுகிறது. விப்ரோ நிறுவனத்தின் தலைமை உத்தி அதிகாரி ரிஷாத் பிரேம்ஜியின் ஆண்டு ஊதியம் 250 சதவீதம் அதிகரித்து ரூ.6 கோடியாக உள்ளது.

 

 

ஷிவ் நாடார்

ஹெச்சிஎல் தலைமை செயல் அதிகாரி அதிக ஊதியம் பெறும் அதேவேளையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார் ஊதியம் 66.25 சதவீதம் சரிவடைந்து ரூ.1.64 கோடியாக உள்ளது.

அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள்

நாட்டின் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் ஊழியர்களில் 28 பேர் ( விஜயகுமாரைத் தவிர்த்து) கோடிகளில் ஊதியம் பெறுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Read more about: tech mahindra

Have a great day!
Read more...

English Summary

Tech Mahindra ceo gets highest salary