விமான நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய திட்டம்.. விரைவில் அறிமுகப்படுத்த முடிவு!

நாடு முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தில் டிஜி யாத்ரா என்ற திட்டத்தைத் தயாரித்துள்ள மத்திய அரசு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாரணாசி விமான நிலையத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்திய விமான நிலையங்களை ஆண்டுக்கு 334 மில்லியன் பயணிகள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலால் விமான நிலைய வாயில்களில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க டிஜி யாத்ரா விரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 17 சதவீதம் பயணிகளை ஈர்க்க இந்தத் திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.

வாரணாசிக்கு முன்னுரிமை

முதல் கட்டமாகக் கொல்கத்தா, விஜயவாடா, வாரணாசி மற்றும் புனே உள்ளிட்ட 4 விமான நிலையங்களில், டிஜி யத்ரா திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டமாக அறிமுகமாக உள்ள இந்தத் திட்டம், ஜூலை மாதம் முக்கிய விமான நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் என விமானப் போக்குவரத்துத்துறை ஆணையத் தலைவர் குருபிரசாத் தெரிவித்தார்.

டிஜி யாத்ரா தளம்

பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள டிஜி யாத்ரா தளத்தில் இணையும் விமானப் பயணிகள் தனித்துவமான ஐ.டியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதில் பயணிகளின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன், டிக்கெட்டும் ஒரு பகுதியாக இருக்கும். டிஜி யாத்ராவில் ஒருமுறை சேரும் பயணி ஆயுட்காலம் முழுவதும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.

பயன்பாடு

டிஜி யாத்ராவின் புதிய வடிவமைப்பு ஆதாரைச் சார்ந்திருக்காது. பயோமெட்ரிக்கில் முக அடையாளங்கள் குற்றமாகக் கருத வாய்ப்பு இல்லாததால் முக அடையாளம் மட்டும் சேகரிக்கப்படும் . டிஜி யாத்ரா தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட விவரங்களை மட்டும் பயணிகள் வழங்க வேண்டும். விமான நிலைய தரவு தளத்தில் முக அடையாளம் ஒரு பகுதியாக இருக்கும். இது வெளியூர் விமான நிலையங்களில் இருந்து பயணிக்கும் போது பயன்படும்.

ஆதார் ஆணையம் மறுப்பு

பயணிகளின் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக்கை பயன்படுத்த அரசுக்கு சொந்தமான விமான நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால் ஆதார் விவரங்கள் கசிவது தொடர்பான பிரச்சினை பூதாகரமாக எழுந்துள்ளதால் , ஆதார் ஆணையம் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்து விட்டது.

விரைவில் அறிமுகம்

டிஜி யாத்ரா வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பான வரைவுத் திட்டம் விரைவில் இறுதி செய்யப்படவுள்ளது. இன்போசிஸ் மென்பொருள் நிறுவன இணை இயக்குநர் நந்தன் நீல்கேனி, தனியார் விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Soon No More Long Queues In Airports