பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாரன் பபெட்..!

உலகின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனமான வாரன் பபெட்டின் பெர்க்‌ஷியர் ஹாத்வே இன்க் நிறுவனம் பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனில் முதலீடு செய்ய உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

பேடிஎம் நிறுவனம் பெர்க்‌ஷியர் ஹாத்வேவிடம் இருந்து 2,500 கோடி ரூபாய் முதலீட்டினை திரட்டுவதற்காகப் பிப்ரவரி மாதம் முதலே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று தெரியவந்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பேடிஎம் நிறுவனத்தில் பெர்க்‌ஷியர் ஹாத்வே முதலீடு செய்ய உள்ளதா என்று இரு தரப்பிற்கும் மின்னஞ்சல் அனுப்பியதற்கு இது வரை நமக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அதே நேரம் இரண்டு நிறுவனங்களும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை 2 வாரங்களில் வெளியிட வாய்ப்புகளும் உள்ளது என்று கூறப்படுகிறது.

முதலீடுகள்

வாரன் பபெட்டின் பெர்க்‌ஷியர் ஹாத்வே உலகின் மிக முக்கிய நிறுவனங்களான ஐபிஎம், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் மே மாதம் உபர் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருந்த நிலையில் அது நடைபெறாமல் போனது.

பஜாஜ் அலையன்ஸ்

2011-ம் ஆண்டுப் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பெர்க்‌ஷியர் ஹாத்வே இன்சூரன்ஸ் திட்டங்களை விற்று வந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் முன்பு இதில் இருந்து பெர்க்‌ஷியர் ஹாத்வே வெளியேறியது.

பெர்க்‌ஷியர் ஹாத்வே இந்தியாவில் நீண்ட காலமாகவே மிகப் பெரிய முதலீட்டினை செய்ய முயன்று வரும் நிலையில் தற்போது இங்கு ஏற்பட்டுள்ள ஸ்டார்ட்அப் புரட்சிகள் வாரன் பபெட்டினை மிகவும் ஈர்த்து வருகிறது.

 

நிலையான முதலீட்டாளர்கள்

பேடிஎம் நிறுவனத்தில் ஏற்கனவே ஜப்பானின் சாப்ட்பாங்க் குழுமும், அலிபாபா குழுமம் மற்றும் ஆண்ட் ஃபினான்ஷியல் போன்ற நிலையான முதலீட்டாளர்கள் உள்ளனர்.

பேடிஎம்

விஜய் சேகர் ஷர்மாவால் 2000-ம் ஆண்டு ஒன்9 நிறுவனம் மொபைல் வாலெட் மற்றும் ரீசார்ஜ் சேவைக்காகத் துவங்கப்பட்டது. இன்று இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தற்போது இ-காமர்ஸ், ஆர்பிஐ அனுமதியுடன் பேமெண்ட்ஸ் வங்கி சேவை போன்றவையும் வழங்கி வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Warren Buffett May Pick Up Small Stake In Paytm