உச்சநீதிமன்றம் என்ன பிக்னிக் ஸ்பாட்டா.. வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

தவறான அறிக்கையைத் தாக்கல் செய்த வருமான வரித்துறையைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள், இது உச்சநீதிமன்றமா இல்லை பிக்னிக் வந்து செல்லும் இடமா எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

596 நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையில் அடிக்கடி வாய்தா வாங்கும் வருமானவரித்துறைக்கு.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

ஏன்?

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நகரத் திட்டமிடல் நிறுவனமான ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் வருமானவரிச் சட்டத்திலிருந்து விலக்கு கோரி விண்ணப்பித்திருந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டு இந்தக் கோரிக்கையை வருமான வரித்துறை நிராகரித்தது.

வழக்கு

இதை எதிர்த்து வருமானவரித் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்த அந்தத் தொண்டு நிறுவனம், வரி விலக்குப் பெற்றது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் வரிவிலக்கை ரத்து செய்தது. இதனால் இந்த வழக்கை பில்குவா நிறுவனம் 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது.

வருமான வரித் துறை

இந்த வழக்கு நீதிபதி மதன்.பி.லோகூர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, விளக்கங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட வருமான வரித்துறை, தவறான ஆவணங்களைத் தாக்கல் செய்தது. வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் வாய்தா வாங்குவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அவகாசம் போதவில்லையா என்றனர். 596 நாட்களாகியும் விளக்கம் கொடுக்க முடியவில்லை என்றனர்.

கோவம்

இதனை உச்சநீதிமன்றம் என்று நினைத்தீர்களாக இல்லை சுற்றுலாத்தலமாகக் கருதுகிறீர்களா என வினவினர். உச்சநீதிமன்றத்தை அணுகும் முறை இதுதானா என்று கடுமையாகச் சாடிய நீதிபதிகள், உங்கள் சௌகரியம், அசௌகரியத்தைப் பொறுத்தெல்லாம் நீதிமன்றம் செயல்பட முடியாது என்றனர்.

அபராதம்

வருமான வரித்துறை ஆணையர் இவ்வளவு அலட்சியமாக நீதிமன்றத்தை அணுகியதை நினைத்து வேதனைப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். உரிய விளக்கம் அளிக்காமல் அவகாசம் கோரிய குற்றத்துக்காக 10 லட்சம் ரூபாய் தண்டம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Have a great day!
Read more...

English Summary

Supreme Court Slams IT Dept, says apex court is not a "picnic place"