ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கைவிட வேண்டும்.. இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா!

ஈரான் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் இந்தியாவின் பொருளாதாரத்தை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்று இந்தியா, அமெரிக்காவிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளது.

இந்தியா- அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று நடைபெற்றது. அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிடம், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவரேஜ் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

இந்தியா கோரிக்கை

இந்தியா ஒரு ஆற்றல் சார்ந்த நாடாக இருப்பதால் ஈரான் மீது விதிக்கப்படும் தடைகள் இந்தியாவைப் பாதிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை உடனடியாகக் குறைத்தால் அது இந்தியப் பொருளாதாரத்தைப் பாதித்து விடும் என்று தெரிவித்த சுஷ்மா, அமெரிக்காவின் கொள்கைகள் இந்தியாவிற்குக் கேடு விளைவித்து விடக் கூடாது என்றார்.

அமெரிக்கா பதில்

இந்தியாவின் நிலைமையைப் புரிந்து கொள்ள முடிவதாகத் தெரிவித்த பாம்பியோ, இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என்று தெரிவித்தார். அதேநேரம் கொள்கைகளில் நீண்டகாலம் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

மீறினால் பொருளாதாரத் தடை

நவம்பர் 4 ஆம் தேதி ஈரானிய கச்சா எண்ணெய் மீது தடை விதிக்கப்படுவது குறித்து அனைத்து நாடுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம். அதேபோல் இந்தியாவுக்கும் இந்தத் தகவலை கூற கடமைப்பட்டுள்ளோம். நவம்பர் 4 ஆம் தேதிக்குப் பிறகு ஒவ்வொரு நாடும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முழுமையாகக் கைவிட வேண்டும் எதிர்பார்ப்பதாகக் கூறிய பாம்பியோ, தவறினால் அத்துமீறிய நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனக் கூறினார்.

விளக்கம்

ஈரானின் தவறான அணுகுமுறைக்குப் பாடம் கற்பிக்கவே பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதாகப் பாம்பியோ விளக்கம் அளித்தார். அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்ய இந்தியா ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Have a great day!
Read more...

English Summary

America Threaten India To Stop Oil Import From Iran Sanction