சேதமடைந்த 2000 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளப் புதிய விதிமுறை.. ஆர்பிஐ அதிரடி!

கிழிந்த, சேதமடைந்த புதிய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் திண்டாடி வந்த நிலையில், சேதமடைந்துபோன 2000 மற்றும் 200 ரூபாய் தாள்களை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்வதற்கான புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

சேதத்தின் தன்மையைப் பொறுத்து மாற்று மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான இந்த அறிவிப்பு, அரசிதழியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளில் குறிப்பிட்ட அளவை விடக் கூடுதலாகவோ, குறைவாகவோ சேதம் ஏற்பட்டிருந்தால் பணம் திரும்பப் பெற முடியாது அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய ரூபாய் தாள்கள்

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 1000, 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவித்த மத்திய அரசு, மகாத்மா காந்தி சீரிஸில் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. கிழிந்த அல்லது சேதமடைந்த 5, 10, 20, 50, 100 மற்றும் 500 ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்வதற்கான விதிமுறைகள் ஏற்கனவே வெளியிட்டது. ஆனால் 200, 2000 ஆயிரம் ரூபாய் தாள்களை மாற்றுவதற்கான விதிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்தது.

திண்டாட்டம்

பழைய செல்லாத ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளின் படி, 200, 2000 ரூபாய் தாள்களை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. சேதமடைந்த புதிய ரூபாய் தாள்களைத் தானியங்கி எந்திரங்களும், வங்கிகளும் ஏற்க மறுத்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

புதிய விதிமுறைகள்

இந்நிலையில் உயர்மதிப்புடைய 200 மற்றும் 2000 ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்வதற்கான விதிமுறைகளை வகுக்குமாறு ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியது. அமைச்சகத்தின் அனுமதியுடன் புதிய ரூபாய் தாள்கள் திரும்பப் பெறும் சட்டம் 2018 ன்படி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சேத மதிப்பில் பணம்

109.56 சதுர சென்டி மீட்டர் அளவைக் கொண்ட புதிய 2000 ரூபாய் தாள்களில், 88 சதுர சென்டி மீட்டர் அளவுக்குச் சேதம் ஏற்பட்டிருந்தால் முழுத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. 44 சதுர சென்டி மீட்டரில் சேதமடைந்தால் பாதித் தொகை மட்டும் கிடைக்கும் என்று கூறியுள்ளது.

மாற்று மதிப்பு

புதிய 200 ரூபாய் தாள்களில் 78 சதுர சென்டிமீட்டருக்குச் சேதமடைந்திருந்தால் முழுத்தொகையும் வழங்கப்படும். அதேநேரம் 39 சதுர சென்டி மீட்டருக்கு சேதமடைந்தால், பாதிப்பணம் மட்டுமே திரும்ப அளிக்கப்படும். கூடுதலாகச் சேதமடைந்திருந்தால் பணத்தை மாற்ற முடியாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தன்மைக்கு ஏற்ப மதிப்பு

50 ரூபாய் மற்றும் அதற்கும் கூடுதலாக மதிப்பைக் கொண்ட ரூபாய் தாள்களை மாற்றும்போது, கிழிபடாத பகுதிகளின் பெருமளவை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப மாற்று மதிப்பு வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

RBI Announces New Rules For Exchange Of Damaged Rs 2000, 200 Notes