இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம் ரிலையன்ஸ். இதனை உருவாக்கிய திருபாய் அம்பானியின் மகன்களுள் ஒருவரான அனில் அம்பானி ஒரு காலத்தில் தொழில் உலகில் கொடி கட்டி பறந்தவர். இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும் இருந்தவர். ஆனால் இவரது நிறுவனங்கள் திவாலாகி தற்போது அடுத்தடுத்த வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

Advertisement

அனில் அம்பானி மீது பல மோசடி வழக்குகள் இருக்கும் நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனமான EPFO-விற்கு சுமார் 1,816 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி அனில் அம்பானி மற்றும் அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் மீது சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2013-14 ஆம் நிதியாண்டில், ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் (Secured Non-Convertible Debentures) ஈபிஎஃப்ஓ நிறுவனம் சுமார் 2,500 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது.

Advertisement

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் இந்த முதலீட்டை திருப்பி செலுத்த தவறியதால் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. சமீபத்தில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் சில மோசடியான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அமலாக்கத்துறை தனது கண்டுபிடிப்புகளை ஈபிஎஃப்ஓ-விடம் பகிர்ந்ததை தொடர்ந்து, அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் மீது சிபிஐ-இடம் புதிய புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

சிபிஐ-யிடம் ஈபிஎஃப்ஓ அளித்துள்ள புகாரில், டிசம்பர் 7, 2019 முதல் டிசம்பர் 6, 2021 வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் கேபிடல் நிர்வாகத்தில் இருந்தவர்கள் பல மோசடியான பரிவர்த்தனைகளை செய்துள்ளனர், தங்கள் அமைப்பிற்கு தர வேண்டிய பணத்தை முழுமையாக தரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் ஈபிஎஃப்ஓ நிறுவனம் தனது நிலுவை தொகையை திரும்ப கேட்டது. அதன் பின் 2024-ஆம் ஆண்டில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய ஒப்புதலுக்கு பின் பிறகு, ஈபிஎஃப்ஓ-வுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்த நிலுவையில் 1,492 கோடி ரூபாய் மட்டுமே அனில் அம்பானி நிறுவனம் வழங்கியது. மீதமுள்ள 1,007 கோடி ரூபாய் அசலும், 809 கோடி ரூபாய் வட்டியும் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வீட்டு கடன், வாகன கடனுக்கான EMI உயர போகுதா? ரிசர்வ் வங்கியின் முக்கிய முடிவு..!!

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அனில் அம்பானியின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள தகவலில் சிபிஐ பதிவு செய்துள்ள இந்த முதல் தகவல் அறிக்கை ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தை பற்றியது. அனில் அம்பானி 2005 முதல் நவம்பர் 2021 வரை ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் நிர்வாகம் சாராத தலைவராக இருந்தார். நவம்பர் 2021இல் ரிசர்வ் வங்கி அந்த நிறுவனத்தின் வாரியத்தை கலைத்து நிர்வாகியை நியமித்தது. அனில் அம்பானி சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வார் என தெரிவித்துள்ளது.

Advertisement
துபாயில் புது பிஸ்னஸ்..!! தென்னிந்தியாவை மையமாக வைத்து நடிகர் மாதவன் போடும் கணக்கு..!!

இதற்கிடையே இந்த 1816 கோடி ரூபாய் பிஎஃப் நிதி மோசடியால் சாதாரண ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு சிக்கல் ஏற்படுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. வழக்கமாக நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஈபிஎஃப்ஓ பல வழிகளில் முதலீடு செய்து லாபம் பார்க்கும். அப்படி செய்த ஒரு முதலீடு தான் இது. ஆனால் இந்த பணத்தை ஈபிஎஃப்ஓ மீட்டு விடும் என்பதால் நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை எனவே ஊழியர்கள் நிம்மதியாக இருக்கலாம்.