புதிதாக பதவியேற்றிருக்கும், விஜய் தலைமையிலான தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து சில மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகள், கல்லூரிகள் கோயில்கள், மசூதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்றவற்றுக்கு 500 மீட்டர் தொலைவில் இருக்கும் அனைத்து மதுக் கடைகளையும் மூடுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இப்படிப்பட்ட இடங்களில் இயங்கி வந்த சுமார் 717 டாஸ்மாக் கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை மூடப்பட்டுள்ளன. இதனால் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக சில கடைகளில் வசூலிக்கப்பட்டது.

Advertisement

இந்தக் கூடுதல் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காகவும், ஏற்கனவே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் 25 சதவீத ஊதிய உயர்வை தமிழ்நாடு அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்திருக்கிறது.

Advertisement

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இனிவரும் மாதங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், ஊழியர்களுக்கு என்று இஎஸ்ஐ திட்டங்கள் கொண்டுவரப்படும். கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட்டு வருகிறது. அதோடு கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் கடைகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வசூலிக்கப்படுவது தொடர்கதையாகி வருவதால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இந்த 25 சதவீத சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஸ்டாலின் ஆட்சியில் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை மட்டுமே சம்பள உயர்வை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை டாஸ்மாக் ஊழியர்களின் பரிந்துரையை ஏற்று 25 சதவீத ஊதிய உயர்வை முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். வருகின்ற 1-ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதனால் ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை அதிகரித்த சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement

முதல்வரின் அதிரடி உத்தரவால் டாஸ்மாக் துணை விற்பனையாளர்களின் சம்பளம் 17,925-ஆகவும், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சம்பளம் ரூ.19,413-ஆகவும், மேற்பார்வையாளர்களின் சம்பளம் ரூ. 22,313 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு அமைச்சர் விக்னேஷ் கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். இந்த திருத்தப்பட்ட ஊதிய உயர்வு குறித்த கூடுதல் விபரங்கள் இனிவரும் காலங்களில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.