இந்தியா தனக்கு தேவையான பெட்ரோல், டீசலுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயை தான் பெருமளவில் சார்ந்திருக்கிறது. ஈரானில் ஏற்பட்ட போர் காரணமாக இந்தியாவுக்கு போதிய கச்சா எண்ணெய் கிடைக்கவில்லை. இதனால் வளைகுடா நாடுகளுக்கு மாற்றாக வேறு நாடுகளில் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பெட்ரோல் , டீசல் விலைகளும் உயர்த்தப்பட்டன.

Advertisement

பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்தும் போது குறைந்த விலைக்கு பெட்ரோல் கிடைக்கும் மேலும் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் போக்கும் குறையும் என மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது பயன்படுத்தப்படும் E20 பெட்ரோல் அதாவது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களை வீணாக்கி விடும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு இதற்கு விரிவான விளக்கம் தந்துள்ளது.

Advertisement

E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் இன்ஜின் பழுதடைவது, மைலேஜ் பெருமளவு குறைவது மற்றும் இன்சூரன்ஸ் கிடைக்காமல் போவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 10 அம்ச விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா, கனடா, தாய்லாந்து, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பல ஆண்டுகளாக எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள அரசு இந்தியாவில் எந்த சோதனையும் இல்லாமல் புதிதாக பயன்படுத்துவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கூறியுள்ளது.

Advertisement

E20 பெட்ரோலால் இன்ஜின் பாகங்கள் பழுதடைவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ARAI மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற முன்னணி நிறுவனங்களின் ஆய்வுகளின்படி, நவீன வாகனங்களில் E20 பயன்பாட்டால் எந்தவிதமான தொழில்நுட்ப பாதிப்புகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அரசு மிகப்பழைய வாகனங்களில் உள்ள சில ரப்பர் பாகங்களை முன்னதாகவே மாற்ற வேண்டிய தேவை இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

E20 பயன்பாட்டினால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தெரிவித்துள்ள அரசு, எத்தனால் கலப்பு வாகனத்தின் வேகத்தை அதிகரிக்கவும், இன்ஜினில் Knocking எனப்படும் தேவையற்ற சத்தத்தை குறைக்கவும் உதவுகிறது என விளக்கியுள்ளது.

Advertisement

E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் வாரண்டி அல்லது இன்சூரன்ஸ் செல்லாது என பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என தெரிவித்துள்ள அரசு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இதனை தெளிவுபடுத்தி இருப்பதால் வாகன ஓட்டிகள் எந்த ஒரு அச்சமும் கொள்ள தேவையில்லை என கூறியுள்ளது.

பெட்ரோலில் கலக்கும் எத்தனாலில் சர்க்கரை இருப்பதாக கூறப்படுவது தவறு. எத்தனால் தயாரிப்பின் போது அனைத்து சர்க்கரை சத்துக்களும் நீக்கப்பட்டு, பூச்சிகளை ஈர்க்காதவாறு வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என அரசு கூறியுள்ளது.பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்ற பெயரில் கரும்பு ஜூஸ் கலக்கப்படுவதாக வெளியாகும் வீடியோக்கள் போலியானவை என தெரிவித்துள்ள அரசு, இதற்காக முறையாக ஆலைகள் அமைக்கப்பட்டு அவற்றிடம் இருந்து எத்தனால் பெற்று தான் பெட்ரோலில் கலக்கப்படுகிறது என கூறுகிறது.

Advertisement

பெட்ரோலில் எத்தனால் கலப்பு திட்டம் மூலம் வெளிநாட்டு கரன்சியில் 1.9 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக கூறும் மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி பெருமளவு குறைக்கப்பட்டு நம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என விளக்கம் தந்துள்ளது.