உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு (Ford) நிறுவனம் ஏஐ வேண்டாம் எங்களுக்கு மனிதர்கள் தான் வேலைக்கு தேவை என அறிவித்திருப்பது உலக அளவில் விவாத பொருளாக மாறியுள்ளது.

Advertisement

கடந்த சில ஆண்டுகளாக, ஃபோர்டு நிறுவனம் தனது உற்பத்தித் தரத்தைக் கண்காணிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி அமைப்புகளை பெருமளவில் பயன்படுத்த தொடங்கியது. சுமார் 900-க்கும் மேற்பட்ட AI கேமராக்களை தொழிற்சாலைகளில் நிறுவி, வாகனங்களின் குறைபாடுகளை கண்டறிய முயற்சித்தது. ஆனால், எதிர்பார்த்த திறனை ஏஐ வெளிப்படுத்தவில்லை என அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Advertisement

இதனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பி, மனிதர்களின் அனுபவத்திற்கு பதில் இயந்திரங்களை முன்னிறுத்திய ஃபோர்டு நிறுவனம், அது பெரிய தவறு என உணர்ந்துள்ளது. மீண்டும் 350-க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த முன்னாள் பொறியாளர்களை பணியமர்த்தியுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் ஹார்டுவேர் பொறியியல் துணைத் தலைவர் சார்லஸ் பூன் அளித்துள்ள பேட்டியில் ஏஐ ஒரு சிறந்த கருவிதான், ஆனால் அது எந்த தரவுகளைக் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் செயல்பாடு அமையும் என கூறியுள்ளார். பல ஆண்டுகளாக நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பொறியாளர்களின் நுணுக்கமான அறிவையும், நடைமுறை சிக்கல்களைக் கையாளும் திறனையும் ஏஐ இயந்திரங்களால் ஈடுசெய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement

இயந்திரங்கள் தரவுகளை மட்டுமே பகுப்பாய்வு செய்கின்றன, ஆனால் மனிதர்கள் பல தலைமுறை வாகனங்களை உருவாக்கிய அனுபவத்தால் ஒரு சிக்கலை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலை பெற்றுள்ளனர் என கூறியுள்ளார்.எனவே ஃபோர்டு நிறுவனம் இழந்த தரத்தை மீட்டெடுக்க, மீண்டும் 350-க்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த, 'கிரே பியர்ட்' (நீண்டகால அனுபவம் கொண்ட) பொறியாளர்களை பணியமர்த்தியுள்ளது.

இவர்கள் தற்போது, புதிய தலைமுறை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள், தொழிற்சாலைகளுக்கு வாகன வடிவமைப்பு செல்லும் முன்பே, அதில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்வார்கள் என கூறியுள்ளது. ஏற்கனவே உள்ள AI கருவிகளை, மனிதர்களின் அனுபவ அறிவைக் கொண்டு மீண்டும் மேம்படுத்துவார்கள் என அறிவித்துள்ளது.

Advertisement

இந்த மாற்றத்திற்குப் பிறகு, ஃபோர்டு நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடு கணிசமாக முன்னேறியுள்ளதாம். JD Power நிறுவனத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், ஃபோர்டு நிறுவனம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், வாகனங்களைச் சரிசெய்யும் செலவு மற்றும் திரும்பப் பெறும் எண்ணிக்கை குறைந்துள்ளதால், நிறுவனத்திற்குப் பல கோடி டாலர்கள் லாபம் கிடைத்துள்ளதாக ஃபோர்டு தலைமைச் செயல் அதிகாரி ஜிம் ஃபார்லி தெரிவித்துள்ளார்.என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், பல ஆண்டுகால மனித அனுபவத்திற்கு இணையாகாவது என்பதை ஃபோர்டு நிறுவனத்தின் இந்த செயல் உணர்த்தியுள்ளது.