விடா முயற்சியும் சரியான திட்டமிடலும் இருந்தால் எதிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு விவசாயி முருங்கை மரத்தை கொண்டு ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். இப்போதெல்லாம் தொடக்க நிலை ஐடி ஊழியர்களுக்கு கூட இவ்வளவு வருமானம் கிடைப்பதில்லை.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம், சங்கோலா பகுதியை சேர்ந்தவர் சந்தீப் கடம். இவர் ஆரம்பத்தில் மாதுளை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனால், பருவமழை பொய்த்தது மற்றும் நோய்த்தாக்குதல்கள் காரணமாக மாதுளை விளைச்சல் இல்லாமல் நஷ்டமே மிஞ்சியது. இந்த நிலையில் விவசாயத்தையும் விட்டு விட கூடாது, லாபமும் பார்க்க வேண்டும் என மாற்றுப்பயிரை தேடியபோது அவருக்கு முருங்கைக்காய் விவசாயம் குறித்து தெரிய வந்தது.

Advertisement

கடந்த 2010ஆம் ஆண்டு, வெறும் 40 செடிகளுடன் பரிசோதனை முயற்சியாக முருங்கை சாகுபடியை தொடங்கினார். தமிழ்நாட்டில் இருந்து விதைகளை வாங்கி பயன்படுத்தினார். ஒரு மரம் இவருக்கு 1000 ரூபாய் வருமானம் தந்தது. நல்ல விளைச்சலும் லாபமும் கிடைத்ததால் படிப்படியாக விரிவாக்கம் செய்து தற்போது சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 7,000 முருங்கை மரங்களை வளர்த்து வருகிறார். இவர் ODC-3 மற்றும் PKM-2 ஆகிய ரகங்களை இணைத்து, சொந்தமாக ஒரு புதிய முருங்கை ரகத்தை உருவாக்கியுள்ளார். இதற்கென அரசு காப்புரிமையும் பெற்றுள்ளார்.

சந்தீப் கடம் நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்தி வெற்றி பெற்றுள்ளார். இயற்கை உரங்களான மாட்டுச் சாணம் மற்றும் மண்புழு உரங்களை அதிகமாக பயன்படுத்துவதால், இரசாயன உரங்களுக்கான செலவு கணிசமாக குறைந்ததாக கூறுகிறார். தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதி என்பதால் சொட்டு நீர் பாசன முறையை பின்பற்றுகிறார்.

Advertisement

அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு இரண்டு முறை மரங்களை கத்தரிப்பதன் மூலம் அதிக கிளைகள் வளர்ந்து, அதிக மகசூல் கிடைப்பதை உறுதி செய்கிறார். தனது முருங்கைக்காய்களை வெறும் உள்ளூர் சந்தையை மட்டும் நம்பியிருக்காமல், ஹைதராபாத், புனே, பெங்களூரு என இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு அனுப்புகிறார்.

அது தவிர வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கிறார். இது தான் அவருக்கு நல்ல லாபம் தருகிறது. மொத்த உற்பத்தியில் சுமார் 20% தரமான முருங்கைக்காய்கள் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு சுமார் 4,200 கிலோ முருங்கைக்காய் கிடைக்கிறது. அவற்றை சராசரியாக கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்வதன் மூலம், ஏக்கருக்கு ஆண்டுக்கு 25 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறதாம். பராமரிப்பு செலவுகள், கூலி ஆகியவை போக, ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாய் நிகர லாபமாக அவருக்குக் கிடைக்கிறது.

Advertisement

முருங்கை காய், முருங்கை கீரை ஆகியவை சிறந்த ஊட்டச்சத்து கொண்டது என்பதால் அதனை அப்படியே உணவு சமைப்பது தாண்டி பொடியாகவும் விற்பனை செய்கின்றனர் என்பதால் சந்தீப்பிற்கு இது நல்ல லாபம் தந்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.