இந்திய ஐடி நிறுவன பங்குகள் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏஐ தொடர்பான முதலீட்டு கோணத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

Advertisement

மெட்டா மற்றும் ஆப்பிள் எடுத்த முடிவால் சர்வதேச முதலீட்டு சந்தையில் முதலீட்டாளர்கள் ஏஐ மற்றும் செமிகண்டக்டர் பங்குகளில் செய்த முதலீட்டை திடீரென விற்க துவங்கி, ஏஐ துறையின் வளர்ச்சியில் அடுத்தக்கட்ட தூணாக இருக்கும் மலிவான விலையில் டெக் சேவை அளிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் மீது முதலீட்டை அதிகரித்தனர். இதன் விளைவு இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் திடீர் உயர்வு.

Advertisement

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 5 சதவீதமும், ஹெச்சிஎல், டிசிஎஸ், டெக் மஹிந்திரா ஆகியவை 4 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நிஃப்டி ஐடி குறியீடு சுமார் 4 சதவீதம் வரையில் உயர்ந்து காணப்படுகிறது. இதேபோல் இந்திய ஐடி துறையில் முக்கிய சக்தியாக உருவெடுத்து வரும் Coforge, Mphasis மற்றும் Persistent Systems போன்ற சிறிய ஐடி நிறுவனங்களும் இன்று பெரிய அளவிலான முதலீட்டை பெற்று வலுவான உயர்வை பதிவு செய்துள்ளது.

ஏன் இந்த திடீர் உயர்வு

உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஏஐ மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் மீது செய்யப்படும் முதலீடுகள் குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில், இத்துறையில் முதலீடுகள் கையைமீறிப்போவதாக இறுதி முடிவுக்கு வந்தனர். இதன் விளைவாக ஏஐ மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்கள் மீதான முதலீட்டை குறைக்க துவங்கினர்.

Advertisement

இதன் மூலம் தென் கொரியாவில் சிப் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், எஸ்கே ஹைனிக்ஸ் ஆகியவை 8 சதவீதம் வரையில் குறைந்தது. அமெரிக்காவின் மைக்ரான் மற்றும் சான்டிஸ்க் ஆகியவை 10 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. இந்த சரிவுக்கு அடித்தளமிட்டது மெட்டா நிறுவனம் தான்.

ஏஐ தொழில்நுட்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம், வருவாய் கிடைக்காத காரணத்தால் மெட்டா நிறுவனம் தனது ஏஐ கட்டமைப்புகளை லாபகரமாக பயன்படுத்தும் நோக்கில் கிளவுட் சேவை வர்த்தகத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தான் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்த குழப்பத்தை அதிகரித்து முதலீட்டை விற்பனை செய்ய தூண்டியது.

Advertisement

மெட்டா தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் எடுத்துள்ள முடிவும் ஏஐ முதலீட்டு சந்தையை பாதித்துள்ளது. ஆப்பிள் தனது ஸ்மார்ட்போன் மற்றும் இதர கருவிகளில் பயன்படுத்த சீனாவில் இருந்து சிப்களை வாங்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இது ஒட்டுமொத்த செமிகண்டக்டர் துறையை பாதித்தது.

இந்திய ஐடி நிறுவனங்கள் ஏன் முக்கியம்

ஏஐ இனி வரும் காலக்கட்டத்தில் நீக்க முடியாத ஒன்று என்பது உறுதி. ஆனால் இத்தொழில்நுட்பம் பெரிய அளவில் லாபம் பெற வேண்டும் என்றால் இதை அதிகளவில் நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும். இதற்கான வழியாக தான் இந்திய ஐடி நிறுவனங்கள் உள்ளது.

Advertisement

இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகளாவிய நிறுவனங்களுக்கு சேவை அளிப்பது மூலம் ஏஐ தொழில்நுட்பம் பரவலாக பயன்படுத்த முடியும். இதன் அடிப்படையில் தான் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய ஐடி துறையில் முதலீடு செய்துள்ளனர். ஏஐ துறையில் தற்போதைய enterprise AI adoption சைக்கிளில் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் முக்கியமானதாக இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.

எனவே ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலம் இந்திய ஐடி துறையிடம் இருக்கிறது என்றால் மிகையில்லை என்ற நிலைக்கு தற்போது வந்துள்ளது.