ஈரான் போர் காரணமாக தொடர்ந்து உயர்த்தப்பட்ட எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறிப்பாக வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை இன்று குறைந்துள்ளது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்து ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீராகி வரும் நிலையில் சிலிண்டர் விநியோக நிறுவனங்கள் விலையை குறைத்துள்ளன.

Advertisement

இந்தியாவில் பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் எல்பிஜி சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயம் செய்கின்றன.

Advertisement

ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அன்று சிலிண்டர்களின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. அந்த வகையில் ஜூலை ஒன்றாம் தேதியான இன்று சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்து ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஈரான் போர் தொடங்கியது முதலே அதிகமாக விலை ஏற்றப்பட்டது வணிக பயன்பாட்டு சிலிண்டர் தான். இண்டேன் இணையதளத்தில் உள்ள தகவலின் படி சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி அன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1849.50 க்கு தான் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் போர் தொடங்கியதை அடுத்து முதலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தான் உயர்த்தப்பட்டது.

Advertisement

படிப்படியாக உயர்த்தப்பட்டு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.3,283 என உச்சம் கண்டது. இதனால் ஹோட்டல்கள், மெஸ்கள், டீக்கடைகளில் உணவு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டன. இந்நிலையில் தான் 6 மாதங்களில் முதன்முறையாக இன்றைய தினம் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. இதன் படி சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேற்காசிய போர் சூழல் காரணமாக கடந்த 4 மாதங்களாக உயர்ந்து வந்த சிலிண்டரின் விலை தற்போது குறைந்துள்ளது. இதனால் வணிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதே வேளையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாறவில்லை. சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது. ஈரான் போர் முடிந்ததால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர், அந்த வகையில் விலை குறைக்காதது மக்களுக்கு ஏமாற்றம் தான்.