உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது எரிபொருள் விலை அடிப்படையில் அமைந்திருக்கும் வேளையில், கோல்டுமேன் சாக்ஸ் குரூப் இன்க் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்த அமெரிக்கா - ஈரான் போர் கடந்த 11 நாட்களாக பெரும் போராக மாறியிருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலை குறித்த அச்சம் மீண்டும் அதிகரித்துள்ளது.

Advertisement

கோல்டுமேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹார்முஸ் நீரிணை இந்த ஆண்டு இறுதி வரையில் முழுமையாக கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு திறக்கப்படாமல் இருந்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலர் வரையில் உயர வாய்ப்புள்ளது என கணித்துள்ளது.

Advertisement

ஜூலை 20ஆம் தேதி டான் ஸ்ட்ரூவென் தலைமையிலான அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய கிழக்கில் மீண்டும் போர் அச்சம் அதிகரித்து, ஹார்முஸ் வழியாக நடக்கும் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர துவங்கியுள்ளது. இதனால் இவ்வழித்தடத்தில் 45 சதவீத எண்ணெய் சப்ளை குறைந்து எண்ணெய் விலை உயர வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் நாட்டின் மீது பெரும் தாக்குதலை நடத்தி வரும் வேளையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 150 முதல் 200 டாலர் வரையில் உயரும் என கணிக்கப்பட்டது, ஆனால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவும், ஈரானும் சென்ற காரணத்தால் கச்சா எண்ணெய் விலை 75 டாலர் வரையில் குறைந்தது.

Advertisement

ஈரான் - அமெரிக்கா போர் உச்சம் அடைந்த காலக்கட்டத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் 126 டாலர் வரையில் உயர்ந்த மீண்டும் 2008ல் பதிவான 147 டாலர் அளவீட்டை தொட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால் கோல்டுமேன் சாக்ஸ் இந்த ஆண்டின் 4வது காலாண்டு வரையில் ஹார்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை எனில் மீண்டும் 120 டாலர் வரையில் மட்டுமே உயரும் என கணித்துள்ளது.

இந்த கணிப்பு முதலீட்டு சந்தையிலும், பொருளாதார வல்லுனர்கள் மத்தியிலும் புதிய நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது. இதேவேளையில் போர் அச்சம் குறைந்தால் கச்சா எண்ணெய் இந்த ஆண்டின் இறுதிக்குள் 85 டாலர் வரையில் முடிவு பெறும், அடுத்த ஆண்டு 75 டாலருக்கு வரும் என கணித்துள்ளது.