ஸ்மார்ட் போன்கள் வந்ததிலிருந்து நம்முடைய முக்கியமான டேட்டாக்கள் அனைத்தையும் அதில் வைத்திருக்கிறோம். வங்கி கணக்கு விவரங்கள், யூபிஐ ஆப்கள், மெயில் ஐடி, பாஸ்வேர்ட், ஆதார் மற்றும் பான் விவரங்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எனவே உங்கள் முக்கிய விவரங்களைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் ஃபோனை பத்திரமாக வைத்திருப்பது முக்கியம். ஒருவேளை எதிர்பாராத விதமாக உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்து விட்டால் இந்த முக்கியமான தகவல்களை எல்லாம் பாதுகாப்பது எப்படி? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Advertisement

இன்றைய சூழலில் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒருவருடைய அக்கவுண்ட்டை ஸ்மார்ட் போன் இல்லாமலேயே ஹேக் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. அப்படி இருக்கையில் உங்கள் ஃபோன் தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால் நிலைமையை யோசித்துப் பாருங்கள்! சில நிமிடங்களில் அவர்கள் உங்கள் டேட்டாவை தவறாக பயன்படுத்திவிடுவார்கள். இதனால் அடையாளத் திருட்டு மற்றும் நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை இழக்கவும் வாய்ப்புள்ளது.

Advertisement

உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்தால் நீங்கள் ஒரு சில விஷயங்களை செய்ய வேண்டும். முதலில் பயப்படாமல் இருக்க வேண்டும். பிறகு வேகமாக செயல்பட வேண்டும். உடனடியாக சரியான நடவடிக்கை எடுத்து விட்டால் இது போன்ற மோசடிகளில் இருந்து எளிதில் தப்பித்துக் கொள்ளலாம்.

என்ன செய்ய வேண்டும்?: உங்கள் போன் காணாமல் போனதை தெரிந்து கொண்ட மறுநிமிடம் உங்கள் டெலிகாம் ஆபரேட்டருக்கு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களிடம் சிம் கார்டு தொலைந்ததை கூறி பிளாக் செய்ய சொல்லலாம். இப்படி செய்வதனால் otp அடிப்படையிலான எந்த பரிவர்த்தனையையும் மோசடி செய்பவர்களால் செய்ய முடியாது. அடுத்ததாக ஆண்ட்ராய்டு போன்களில் "பைண்ட் மை டிவைஸ்" என்ற ஆப்ஷன் இருக்கும் அதே போல ஆப்பிள் பிராண்டின் ஐபோன்களில் "ஃபைண்ட் மை" என்ற வசதி வழங்கப்பட்டிருக்கும்.

Advertisement

இந்த இரண்டு வசதியையும் பயன்படுத்தி உங்களுடைய வங்கி விவரங்கள், மெயில் விவரங்கள், மெசேஜ் போன்றவற்றை மற்றவர்கள் பார்க்காமல் லாக் செய்து வைக்க முடியும். ஆப்பிள் ஐபோனில் பைண்ட் மை ஆப்ஷனை பயன்படுத்தி டேட்டா முழுவதுமாக அழிக்க முடியும்.

UPI தளங்களை பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய வங்கியின் கஸ்டமர் சர்வீஸ்-க்கு தொடர்பு கொண்டு UPI மற்றும் நெட் பேங்கிங் ஆப்ஷன்களை தற்காலிகமாக பிளாக் செய்ய சொல்லலாம். அடுத்ததாக உங்களுடைய மெயில் ஐடி, பாஸ்வேர்ட் மற்றும் வங்கி கணக்கின் பாஸ்வேர்டுகளை மாற்றியமைக்கலாம். உங்கள் ஸ்மார்ட் போனின் IMEI நம்பர் இருந்தால் பிரச்சனை இல்லை. காவல் நிலையத்தில் இந்த நம்பரை வழங்கி புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்.

Advertisement

போன் தொலைந்த பிறகு பலர் வங்கிக் கணக்கிற்கு கொடுக்கும் முன்னுரிமையை தங்களுடைய மெயில் அக்கவுண்டுக்கு கொடுப்பதில்லை. ஆனால் பெரும்பாலான வங்கி பரிவர்த்தனைக்கு மெயில் அடிப்படையிலான OTP தேவைப்படுகிறது. எனவே உங்கள் வங்கி கணக்குக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ? அதே அளவுக்கு உங்கள் மெயில் அக்கவுண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடனடியாக மெயில் பாஸ்வேர்டை ரீசெட் செய்யலாம். எனவே பதற்றப்படாமல் போன் தொலைந்தது தெரிந்தவுடன் நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் மூலம் உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை பத்திரமாக மீட்டெடுக்க முடியும். அதோடு அடையாளத் திருட்டு நடப்பதையும் தடுக்க முடியும்.