ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் போர் தீவிரமடைய தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்களை நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் வேலை செய்து வந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஆறு இந்தியர்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான மொம்பசா மற்றும் அல் பாஹியா ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியில் தெற்கு கப்பல் போக்குவரத்து பாதையில் சென்று கொண்டிருந்தன. இந்த கப்பல்கள் ஓமனின் பிராந்திய நீர் எல்லைக்குள் இருந்தபோது, ஈரானின் இரண்டு ஏவுகணைகள் இந்த கப்பல்களை தாக்கியுள்ளது.
அப்போது இரண்டு கப்பல்களிலும் தீ ஏற்பட்டுள்ளது. இதில் கப்பலில் பணிபுரிந்து வந்த 6 இந்தியர்கள் , 2 உக்ரேனியர்கள் படுகாயமடைந்தனர். மொம்பசா கப்பலில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், தங்களின் தேசிய நலன்களை பாதுகாக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
சரக்கு கப்பல்களை குறிவைப்பதையும், ஹார்முஸ் ஜலசந்தியை அச்சுறுத்தல் கருவியாக பயன்படுத்துவதையும் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகம், இதை ஒரு கடற்கொள்ளை செயலாகவே பார்ப்பதாக கூறியுள்ளது. ஈரான் இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் ஹார்முஸ் ஜலசந்தியை நிபந்தனையின்றி மீண்டும் திறக்க வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதை தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் 140 இடங்களில் பதில் தாக்குதல்களை நடத்தியது. இதை தொடர்ந்து, ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல் போக்குவரத்தை மீண்டும் முடக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த முற்றுகை ஈரான் மற்றும் ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளை மட்டுமே குறிவைக்கும் என்றும், பிற நாடுகளின் கப்பல்கள் தாராளமாக செல்ல அனுமதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் போர் தொடங்கியது. இது மே மாதம் அமைதிக்கு வந்தது. ஜூன் மாதத்தில் ஈரானும் அமெரிக்காவும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. போர் முடிந்துவிட்டது இயல்பு நிலை திரும்பிவிட்டது என அனைவரும் நிம்மதி அடைவதற்குள் இரு நாடுகளும் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவது ஆகிய காரணங்களால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் விலைகள் உயரும். இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர வாய்ப்புள்ளது.
More Articles
- 5 நாள் அமைதி போர்களமாக மாறியது.. சரியான டைமிங்-ல் ஈரான் நடத்திய சர்ப்ரைஸ் அட்டாக்.. ஆடிப்போன அமெரிக்கா!
- நாங்க சொன்ன கேட்கணும்.. ஈரான் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்! அமெரிக்காவுக்கு மெசேஜ்!
- சண்டையா? சமாதானமா? என்ன செய்ய போகிறார் டிரம்ப்? கன்னித்தீவு கதையாக நீளும் ஈரான் போர்..!!
- 1000% உயர்ந்த இன்சூரன்ஸ் ப்ரீமியம்.. ஈரான் போரால் விபரீதம்..!
- கச்சா எண்ணெய் விலை 120 டாலருக்கு உயரப்போகுது.. இந்தியாவுக்கு அடுத்த பெரிய பிரச்சனை!
- அமேசான் டேட்டா சென்டர் மீது ஈரான் தாக்குதல்.. குவைத் ஊழியர்கள் அதிர்ச்சி!