தமிழ்நாட்டில் புதிதாக ஒரு வீடு வாங்குவது, நிலம் வாங்குவது என்றால் கட்டாயம் நாம் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சென்று பத்திரப்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக முன் கூட்டியே டோக்கன் பெற வேண்டும் குறிப்பிட்ட பத்திரப்பதிவு தேதி அன்று காலையிலேயே அலுவலகம் சென்றுவிட வேண்டும். அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கிறது, சொத்தினை விற்பவர், வாங்குபவர் என அனைவரும் இருக்கும் பட்சத்தில் ஒரே நாளில் வேலை முடிந்துவிடும்.

Advertisement

ஒருவேளை ஆவணங்கள் சரியாக இல்லை என்றால் மீண்டும் ஒரு நாள் பத்திரப்பதிவு தள்ளி போகலாம். சொத்து பத்திரப்பதிவு என்றாலே ஒரு நாள் முழுவதுமே அதற்கே செலவாகிவிடும். ஆனால் இனி அந்த தொல்லையே இல்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யலாம். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது.

Advertisement

தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் Faceless மற்றும் Paperless பத்திரப்பதிவு சேவையை படிப்படியாக அனைத்து வகை ஆவணங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் STAR 3.0 திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை தற்போது விஜய் தலைமையிலான அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.

"Anywhere Registration" என்ற இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. STAR 3.0 திட்டத்தின் முதல் கட்டமான எங்கிருந்தும் பத்திரப்பதிவு திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அரசாணையின்படி, ஆகஸ்ட் 17 முதல் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீட்டு மனை சார்ந்த பத்திரங்கள் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல், முழுமையாக ஆன்லைன் வழியாகவே பதிவு செய்யப்பட உள்ளன. இந்த நடைமுறையின் கீழ், பில்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் ஆவணங்களை இணையம் வழியாக பதிவேற்றம் செய்து பத்திரப்பதிவை முடித்து கொள்ளலாம். இதற்காக பில்டர் தரப்பிலோ, வீடு அல்லது வீட்டுமனை வாங்குவோர் தரப்பிலோ சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தற்போது நடைமுறையில் உள்ளபடி ஆவணங்களை அதே நாளில் பதிவு செய்து திருப்பி வழங்கும் சேவை, இந்த Presenceless Registration முறைக்கும் தொடரும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

ஆவணம் பதிவு செய்பவர்கள் மற்றும் சாட்சிகளின் ஆதார் எண், பயோமெட்ரிக் கைரேகை, அரசின் ஆதார் தரவுத்தளத்துடன் ஒப்பிட்டு அடையாளம் சரிபார்க்கப்படும் என்றும், இதன்மூலம் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டின் அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும், எந்த இடத்திலிருந்தும் ஆவணங்களை பதிவு செய்யும் வசதி இதன் மூலம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்காக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், ரியல் எஸ்டேட் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.