தங்கம் வாங்க வேண்டாம் என்பதற்கான 5 காரணங்கள்..!

பழங்காலத்திலிருந்தே தங்கம் ஒரு இயற்கையான சொத்து மதிப்பாகக் கருதப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அது உயர் மதிப்பைப் பெற்றுப் பணவீக்கத்திற்கு எதிரான காப்பரணாகக் கருதப்பட்டு வருகிறது.
நாணய முறையின் நிலையற்றத் தன்மையால் கரன்சிக்கு எதிராக வேறெந்த மிகச்சரியான முதலீட்டுத் தேர்வும் நடைமுறையில் இல்லை. பெரும்பாலானோர் கரன்சிக்கு அடுத்தபடியாகத் தங்கத்தை மாற்று முதலீடாகக் கருதுகிறார்கள்.

தங்க முதலீடுகளைப் பற்றி விளக்கமாகப் பேசிய பெர்க்ஷைர் ஹாதவே நிறுவன தலைமை நிர்வாக இயக்குநரும் மிகச் சிறந்த முதலீட்டாளருமான வாரென் பஃப்பெட் கரன்சியில் சேமிப்பதிலுள்ள அபாயத்தைப் பற்றியும் அறிந்திருக்கிறார். அதைப் பற்றி அவர் கூறுகையில், ரூபாய் நோட்டுக்களில் முதலீடு செய்யப் பயப்படுவது சரியானதே. உலகெங்கிலும் பணத்தின் மதிப்புக் காலப்போக்கில் குறைந்து வருவது நிச்சயமாகும். மக்கள் கரன்சி பணத்தை விட்டு வெளியேற வேண்டும்.

ஆனால் கரன்சியை விட்டுவிட்டுத் தங்கத்தில் முதலீடு செய்ய ஓடுகிறார்கள். அது தான் தவறு" என்கிறார். ஏன் அப்படிச் சொல்கிறார்..? தங்கம் உங்கள் பணத்தை முதலீடு செய்யச் சரியான இடமல்ல என்று ஏன் சொல்லப்படுகிறது..? என்பதற்கான ஐந்து காரணங்களைக் கீழே பார்ப்போம்.

நீண்ட கால வரையறையில் மோசமான வருவாய்

தங்கத்தில் முதலீடு செய்வதிலுள்ள மிகப் பெரிய பாதகமான விஷயம் இது தான். முதலீட்டாளர்களுக்கான ஒரு புகழ்பெற்ற பழமொழி ஒன்று உண்டு. அது என்னவென்றால் "கரன்சியின் கடந்த காலச் செயல்பாட்டைக் கொண்டு வருங்காலத்திலும் சிறப்பாகச் செயல்படும் என்று நம்ப வேண்டிய அவசியமில்லை" என்பதாகும். இது தங்க முதலீட்டிற்கும் பொருந்தும். பங்குச் சந்தை நிலவரங்கள் எப்போதும் அதன் செயல்திறனில் மாறிக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்க நிதி நிர்வாகக் கல்லூரி தலைமை நிர்வாக இயக்குநரான ராபர்ட் ஆர். ஜான்சன் அவருடைய புத்தகமான "இன்வெஸ்ட் வித் தி ஃபெட்" இல் தங்கம் எப்போதெல்லாம் முதலீட்டளவில் அதன் மதிப்பில் குறைகிறது என்பதைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிடுகிறார். தங்கம் பணவீக்கத்திற்கு எதிராகக் காப்பரணாக உலகெங்கிலும் பரவலாகக் கொண்டாடப்பட்டு வந்த போதிலும் தங்கம் எல்லாச் சூழல்களிலும் பங்குச் சந்தை வட்டி விகிதங்களில் குறைவாகச் செயல்படுகிறது என்கிறார்.

தங்கத்தின் விலைகள் 2004 க்கு பிறகு மும்மடங்காக உயர்ந்திருக்கும் போதிலும் தங்கத்திலிருந்து கிடைக்கும் வருவாய் நிலையற்றதாகும். நீண்ட கால வரையறையில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த யோசனையாகக் கருதப்பட்ட போதிலும் தங்கம் மிக மிக மெதுவாக வட்டி விகிதங்களில் அதிகரித்து லாபங்களை ஈட்டித் தருகிறது. மதிப்பீட்டளவில் தங்கத்தின் தாங்குதிறன் அபாயகரமானது. தங்கத்திலிருந்து லாபம் பெற மிக நீண்ட நாட்கள் காத்திருந்து குறைந்த லாபத்தையே பெற முடிகிறது.

 

பணவீக்கத்திற்கு எதிராகச் செயல்படுவதில் உள்ள குறைபாடுகள்

1972 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை பொதுப் பங்குகள் 14.68 சதவிகித வருவாயைத் தந்துள்ளது ஆனால் தங்கம் 7.85 சதவிகிதத்தை மட்டுமே தந்துள்ளது.

பங்குகளின் மதிப்பை அந்தப் பங்குகளை வைத்திருக்கும் நிறுவன மதிப்பை வைத்து ஓரளவுக்குக் கணித்து விடலாம். ஆனால் தங்கத்தின் மதிப்பை முன்கூட்டி கணிப்பது சாத்தியமில்லை. அமெரிக்காவில் டாலர் மதிப்பு உயரும் போது தங்கத்தின் மதிப்புக் குறைகிறது. அங்கே டாலர் மதிப்பு சரியும் போது தங்கத்தின் விலைகள் ஏறுகிறது. இது எப்போது நிகழும் என்று முன்கூட்டி அறிய முடியாது.

1980 முதல் 2000 ஆம் ஆண்டு வரை பிரேசிலில் என்ன நடந்தது என்று பார்ப்போம். சர்வதேச பன்னாட்டு நிதி நிறுவனம் அளிக்கும் தகவல்களின் படி பணவீக்கம் ஆண்டுக்கு 250% என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இருபதாண்டுக் காலத்தில் ஆய்வாளர்களின் கணக்கீட்டின் படி தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான வருவாயில் 20% சரிந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்திற்கான உற்பத்தி செலவுகளும் செய்கூலிகளும் அதிகம் என்பதால் அது நுகர்வோரின் மீது சுமத்தப்படுகிறது. தவிர்க்க முடியாத அரசாங்க கொள்கை மாற்றங்களும் வரி விதிப்புக்களும் மாறிக் கொண்டே இருக்கும் வட்டி விகிதங்களும் தங்கத்தின் விலைகளை முடக்குகின்றன.

 

தங்கத்திற்கு மோசமாக வரி விதிக்கப்படுகிறது

பங்குச் சந்தை முதலீடுகளில் இருக்கும் மிகப் பெரிய கவன ஈர்ப்புகளில் ஒன்று, நீண்ட கால ஃபெடரல் மூலதன வருவாய் வட்டி விகிதங்கள் 15% சதவீதமாக உள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தங்கம் அப்படிக் கையாளப்படுவதில்லை. தங்கம் ஒரு சேமிப்புச் சொத்தாகக் கருதப்பட்டு அதிகபட்சமாக 28% வரிவிதிப்புக்கு உள்ளாகிறது. குறிப்பாக ஈடிஎஃப் வடிவில் தங்கம் வாங்கும் போது முதலீட்டாளர்கள் இந்த வரிவிதிப்பிலிருந்து தப்ப முடியாது.

தங்கம் வருவாயை உற்பத்தி செய்வதில்லை

ரொக்கப் பணத்தைப் போலத் தங்கம் வருவாயையோ மூலதன ஆதாயத்தையோ அல்லது வட்டியையோ உருவாக்குவதில்லை. தங்கம் ஆபரண வடிவில் சேமிக்கப்படும் போது அதிலிருந்து எந்தவிதமான மாத வருவாயையும் பெற முடிவதில்லை. முதலீட்டிலிருந்து மாத வருமானம் பெற விரும்புவோருக்குத் தங்கம் சரியான தேர்வல்ல. இதில் உள்ள மோசமான விஷயம் என்னவென்றால் தங்கத்திற்குப் பதில் மாற்று முதலீடுகளை நீங்கள் தேர்ந்தெடுக்காமல் போனால் நீங்கள் தவறவிடும் வருமான வாய்ப்பாகும்.

தங்கத்தைப் பாதுகாப்பதில் உள்ள சிரமங்களும் மறுமதிப்பீடும்

தங்கமாக முதலீடு செய்யும் போது அதைப் பாதுகாப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. தங்கத்தைத் திட வடிவத்திலோ ஆபரணங்களாகவோ முதலீடு செய்யும் போது திருடு போகும் அபாயங்கள் அதிகம் என்பதால் அதற்கு இன்சூரன்ஸ் லாக்கர் போன்ற சேமிப்பு செலவுகளைச் செய்ய வேண்டியுள்ளது. வங்கியில் லாக்கர் போன்ற வசதிகளைப் பெற்றுத் தங்கத்தைப் பாதுகாப்பாக வைக்க, நிலையான ஒரு டெபாசிட் தொகையும் அத்துடன் வருடாந்திர பராமரிப்புக் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஒரு தனிநபர் தங்கம் வைத்திருக்கும் போது தங்கம் ஒரு சொத்தாகக் கருதப்படுவதால் மூலதன ஆதாய வரிகளைச் செலுத்த வேண்டியிருக்கிறது. மேலும் தங்கத்தின் மறுமதிப்பீட்டு மதிப்பு நகைகளாகச் சேமிக்கப்படும் போது வெகுவாகக் குறைகிறது. தங்கத்தின் விலையோடு செய்கூலி, சேதாரங்கள், வரிவிதிப்புகள் என்று ஏராளமான விலை கொடுத்து வாங்கப்படும் அதே தங்கத்தை மீண்டும் விற்பனை செய்ய நேரிட்டால் மறு மதிப்பீட்டுத் தொகை குறைவாக இருக்கிறது. அதிலும் ஆபரணத் தங்கத்திற்குத் தேய்மானம், ஆபரணக் கற்கள் என்று பல வகையிலும் கழிவுகள் போகக் குறைவான மறுமதிப்பீட்டு தொகையே கிடைக்கிறது. தங்கத்தைக் கட்டிகளாகச் சேமித்து வைக்கும் போதிலும் தேய்மான விகிதம் கணக்கிடப்பட்டுப் பழைய தங்கமாகக் கருதப்பட்டு மறுமதிப்பீட்டில் குறைகிறது.

இத்தனை குறைபாடுகள் இருந்த போதிலும் தங்கத்தின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தாலும் தொடர்ந்த விளம்பர மயக்கங்களாலும் தங்கத்திற்காகக் கிராக்கி குறைந்து விடாமல் இருக்கிறது. தங்கத்தைப் பற்றிய ஒரு புகழ்பெற்ற பழமொழியை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். "தங்கம் சுரங்கம் என்னும் ஒரு குழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு முதலீடு என்னும் பெரிய குழிக்குள் போடப்படுகிறது" என்பதே அந்தப் பழமொழியாகும். எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் அதிலுள்ள நிறை குறைகளை முழுமையாகப் புரிந்து கொண்ட பின் தங்கத்தில் முதலீடு செய்வதே சிறந்தது.

 

Have a great day!
Read more...

English Summary

5 reasons not to buy gold