அவசரத் தேவைக்கு பிஎப் பணத்தினை இடையில் திரும்ப பெற கூடிய 13 வழிகள்..!

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, உயிர் போகும் தருணங்களில் வருங்கால வைப்பு நிதி எனப்படுப்படும் பிஎப் உற்ற துணையாக உதவுகிறது. ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடனோ, நிறுவத்தின் பங்களிப்புத் தொகையுடனோ ஊழியர்கள் வருங்கால நிதியத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த வைப்புத்தொகை வங்கி டெபாசிட் திட்டங்கள் போன்று வட்டி விகித லாபங்களுடன் வளர்ந்து, தக்க நேரத்தில் உதவுகிறது.

ஊழியர்கள் வருங்கால நிதி மற்றும் இதர ஒதுக்கீடுகள் சட்டம் 1952 ஆம் ஆண்டு ஒரு சமூகநல பாதுகாப்புச் சட்டமாக இந்திய அரசால் இயற்றப்பட்டது. அதே ஆண்டில் ஊழியர்கள் வருங்கால நிதி திட்டம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது. கால் நூற்றாண்டு காலம் கடந்த பிறகு, அதாவது 1976 இல் ஊழியர் சேமிப்பு வைப்புத்தொகை திட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. 1995 இல் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் எனப்படும் ஈபிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.

வருங்கால வைப்பு நிதிமூலம் திரட்டப்பட்ட 5,66,031.95 கோடி ரூபாய் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடன் முதலீடாக வழங்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது. 25,034,85 கோடி ரூபாய் ஈக்விட்டி உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சேமநல நிதி பங்களிப்பாளர் ஒருவர் ஒரு மாதம் வரை வேலையின்றி இருந்தால், 75 விழுக்காடு வரை பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என வருங்கால வைப்பு நிதியம் அண்மையில் அனுமதி அளித்திருக்கிறது. 2 மாதங்களுக்கு மேல் வேலையின்றி இருக்கும்பட்சத்தில், தாம் செலுத்திய வருங்கால வைப்பு நிதியின் முழுப்பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கருணை காட்டியுள்ளது.

உங்களுக்கு அவசரத்தேவை ஏற்பட்டு விட்டதா. கந்து வட்டி வாங்கி அவமானப்படவோ. வங்கிகளின் படியேறி அலையவோ தேவையில்லை. உங்களின் அவசரத் தேவைக்கான பணத்தை வருங்கால வைப்பு நிதியிலிருந்து பகுதி பகுதியாக நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இப்படி இடையில் பிஎப் பணத்தை எடுக்க அனுமதிக்கப்படும் 14 காரணங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.

கல்வி செலவு

மகன் அல்லது மகளின் கல்விச் செலவுக்காக, வருங்கால வைப்பு நிதியிலிருந்து உறுப்பினர் ஒருவர் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.உறுப்பினரின் பங்களிப்புத் தொகையில் 50 விழுக்காடு மட்டுமே விடுவிக்கப்படும் என்ற வரையறை வகுக்கப்பட்டுள்ளது.

திருமணத் தேவை

பேச்சிலரக இருக்கும் உறுப்பினர் ஒருவர், தனது திருமணத் தேவைக்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். மகன், மகள், சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோரின் திருமணத்துக்காகவும் பணத்தைப் பெறலாம். ஆனால் உறுப்பினர் செலுத்திய பங்களிப்புத் தொகையில் 50 விழுக்காடு மட்டுமே இந்தக் காரணங்களுக்காகத் திரும்பப் பெற முடியும்

வருங்கால வைப்பு நிதியத்தின் உறுப்பினராக, முழு 7 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கும் பட்சத்தில், அந்த இரண்டு சூழ்நிலைகளிலும் பணத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது

 

நிறுவன சிக்கல்கள்

தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு ஒரு நிறுவனம் தமது ஊழியர்களுக்கு எந்த வித இழப்பீடும் வழங்காமல் இழுத்தடித்தாலோ, அந்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டாலோ வருங்கால வைப்பு நிதியை உறுப்பினர்களால் திரும்பப் பெற முடியும்.

இதேபோல் 2 மாதமோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஒரு நிறுவனம் சம்பளம் வழங்காத நிலையில், சேமநல நிதியை மொத்தமாகத் திரும்பப் பெற வழிவகை உள்ளது.

 

ஊழியர் பணி நீக்கம்

ஒரு ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது நீதிமன்றத்தை அணுகும் போதோ, தனது தேவைகளைப் பூர்த்திச் செய்து கொள்ள வருங்கால நிதியில் 50 விழுக்காடு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்

தொழிற்சாலை மூடல்

தொழிற்சாலை ஒன்று தொடர்ந்து 6 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தால், உறுப்பினர் தனது பங்களிப்புத் தொகையை நூறு விழுக்காடு வரை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும். வேலை இழப்பை தொடர்ந்து சந்திக்கும்போதோ, இழப்பீட்டுத் தொகையை அந்த நிறுவனம் வழங்காதபோது நூறு விழுக்காடு வட்டியுடன் பங்களிப்பு முழுவதையும் தொழிலாளர் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் இடம் இருக்கிறது.

நோய்

காசநோய், தொழுநோய், முடக்கம், புற்றுநோய், மனநலம் பாதிப்பு மற்றும் இதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் முழுத்தொகையைப் பெற்றுக்கொள்ள இயலும். குறைவான அடிப்படை ஊதியமாக இருந்தால் 6மாதங்களுக்கான பரிவுத்தொகையோ அல்லது பாதிக்கப்பட்ட அந்த உறுப்பினரின் பங்களிப்புத் தொகை வட்டியுடன் வழங்கப்படும்

இயற்கை பேரிடர்

கலவரம், வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களில், உறுப்பினர்களின் சொத்து சேதமடைந்தால், ஐயாயிரம் ரூபாயோ அல்லது பங்களிப்புத் தொகையில் 50 விழுக்காடோ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

தொழிற்சாலையில் மின்வெட்டு

தொழிற்சாலையில் மின்வெட்டு ஏற்பட்டதைக் காரணம் காட்டி, பங்களிப்பாளர் ஒருவர் கடன் முதலீடாக வருங்கால வைப்பு நிதி கோர அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறிப்பிட்ட பகுதியில் மின் வெட்டு ஏற்பட்டதாக மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஊதியம் வழங்க முடியாத அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக முதலாளி ஒப்புதல் அளிக்க வேண்டும்

உடல் ஊனம்

உடல் ஊனமுற்றவர்கள் உபகரணங்கள் வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம், இதற்கு உரிய மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும். 6 மாதங்களுக்கான பரிவுத்தொகை அல்லது வட்டியுடன் பங்களிப்புத்தொகை அல்லது உபகரணங்களுக்கான செலவுத்தொகை இதில் ஏதாவது ஒன்று வழங்கப்படும்.

வயது

உறுப்பினர் ஒருவர் தனது 54 வது வயதில் 90 விழுக்காடு வரை வருங்கால வைப்பு நிதியைத் திரும்பப்பெற அனுமதிக்கப்படுகிறது. ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னரே, விருப்ப ஓய்வு பெற்றாலோ இந்தத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள இயலும்

55 வயதை எட்டிய ஒரு உறுப்பினர் 90 சதவீத பங்களிப்புத் தொகையைத் திரும்பப் பெற வருங்கால வைப்பு நிதி அனுமதிக்கிறது. இதனை இந்தியன் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திலோ அல்லது வரிஷித்த பென்சன் பீம யோஜனாவிலோ முதலீடு செய்து கொள்ளும்வகையில் மாற்றிக் கொள்ளலாம்.

 

சொத்து

வீடு கட்டவும், அடுக்குமாடிக் கட்டடங்களில் முதலீடு செய்யவும், மனையிடம் வாங்கிப் போடவும் வருங்கால வைப்பு நிதியின் பங்களிப்புத் தொகையைப் பெற முடியும். ஆனால் நல நிதியத்தில் உறுப்பினராக 5 வருடம் நிறைவு செய்திருக்க வேண்டும்

கடன்

நிலுவையில் உள்ள கடனுக்காகவோ, கடனுக்கு வட்டி செலுத்துவதற்காகவோ உறுப்பினர் வருங்கால வைப்பு நிதியைக் கோரலாம். உறுப்பினரின் பெயரிலோ, மனைவியின் பெயரிலோ அல்லது கூட்டாக இருவரின் பெயரிலோ கடன் பெற்றால், வருங்கால வைப்பு நிதி விடுவிக்கப்படும்

வீடு

வீடு கட்டுவதற்காகவும், குடியிருப்பதற்காக அடுக்குமாடியில் ஒரு வீட்டை வாங்குவதற்காகவும் வருங்கால வைப்பு நிதியைப் பெறலாம்.குடியிருப்பு வீட்டை வாங்கும்போது மற்றவருடன் நீங்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கான வீட்டுவசதித் திட்டத்தில் மட்டுமே நீங்கள் பயனாளராக இருக்க வேண்டும். இதற்கு 5 ஆண்டுகள் வருங்கால வைப்பு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.

Have a great day!
Read more...

English Summary

13 situations where you can partially withdraw EPF money