500 ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்து பணக்காரர் ஆக வேண்டுமா.. கனவை நனவாக்கும் 4 திட்டங்கள்!

சேமிப்பு என்பது விவரம் தெரிந்த காலத்திலிருந்து ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய ஒரு பொருளாதார நடவடிக்கையாகும். எவ்வளவு தொகையைச் சேமிக்கிறோம் என்பது முக்கியமல்ல, வாழ்க்கையில் அது எந்த அளவுக்கு உதவுகிறது என்பதுதான் முக்கியம்.

பொருளாதார இடர்பாடுகள் ஏற்படும் போதெல்லாம் நமது பலவீனங்களைக் குறைக்க உதவும் கருவியாக உள்ளது. முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான விவரங்கள் பரவலாகப் போய்ச் சேராததால், சேமிக்கும் நடவடிக்கைகளில் தயக்கங்கள் இருக்கின்றன.

இந்த அச்சம் இனி தேவையற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 500 ரூபாய்க்கும் குறைவான தொகைகளில் நீங்கள் முதலீட்டுத் திட்டங்களைத் தொடங்கலாம். வங்கிகளும், அஞ்சல் அலுவலகங்களும் உங்கள் வசதிக்கேற்ற திட்டங்களைக் கைவசம் வைத்துள்ளன.

வங்கித் தொடர்வைப்பு நிதி

வங்கிகளில் தொடங்கும் தொடர் வைப்பு என்ற ரிகரிங் டெபாசிட் திட்டம் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டமாகக் கருதப்படுகிறது. சேமித்துப் பழக்கமிராத ஒரு பழமைவாதி ஒருவர், இந்தத் திட்டத்தில் இணைவது பொருத்தமாக இருக்கும். ஒன்று முதல் பத்தாண்டுகள் வரை முதிர்வு பருவங்களைக் கொண்ட இந்தத் திட்டத்தில், மாதம் நூறு ரூபாய் செலுத்தும் வகையில் அக்கவுண்டைத் தொடங்கலாம். முதிர்வு பருவம் முடிந்தவுடன் 6 முதல் 7 விழுக்காடு வரையிலான கூடுதலாகத் தொகை உங்கள் கையில் இருக்கும். இதில் வருமானவரிக் கழிவுகள் கிடையாது.

5 வருட அஞ்சலகத் தொடர்வைப்பு நிதி

அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள ஆர்.டி என்ற தொடர்வைப்பு முதலீட்டுத் திட்டத்தில், ஒரு சிறுதொகையுடன் நீங்கள் அக்கவுண்டை திறக்கலாம். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு சிறிதாகச் செய்யப்பட்ட முதலீடு, கூடுதலான பலனைத் தருகிறது. ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் 5 ஆண்டு முதிர்வு பருவங்களுக்கு ஏற்ப 4 திட்டங்கள் இதில் உள்ளன. நீங்கள் 10 ரூபாய் முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். அதிகப் பட்ச தொகையுடன் கணக்கைத் தொடங்க எந்த வரம்பும் கிடையாது. ஒரு ஆண்டு முடிந்த பிறகு 50 விழுக்காடு தொகையை உங்கள் அக்கவுண்டில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆண்டுக்கு 6. 9 சதவீதம் இதற்கு வட்டி வழங்கப்படுகிறது. குறிப்பாக 10 ரூபாய் ரிகரிங் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஆண்டு இறுதியில் 717.43 வழங்கப்படுகிறது. 5 வருட திட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை, வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தேசிய சேமிப்புப் பத்திரம்

என்.எஸ்.சி எனப்படும் தேசிய சேமிப்புப் பத்திரம், ஒரு நிலையான முதலீட்டுத் திட்டமாகும். அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள நூறு ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையிலான இந்தத் திட்டங்களில் பல்வேறு நன்மைகள் உள்ளன, 5 மற்றும் 10 ஆண்டு முதிர்வு பருவங்கள் கொண்ட இந்தத் திட்டத்தில் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப தொகையை முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கான அதிகபட்ச தொகை குறித்த வரம்பு கிடையாது. 1 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடு செய்பவர்களுக்கு வருமானவரி விலக்கு அளிக்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. 7.6 விழுக்காடு வரை வட்டி அளிக்கப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில், முதிர்வு காலம் முடிந்தால் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட வட்டி வழங்கப்படும்.

தேசிய ஓய்வூதியத் திட்டம்

என்.பி.எஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது ஒரு நீண்டகால ஓய்வூதியம் சார்ந்த திட்டமாகும். சந்தையில் இணைக்கப்பட்ட பொருட்களுக்கு வருவாயை அளிக்கிறது. நிலையான வைப்புப் பத்திரங்கள், திரவ மற்றும் அரசாங்க நிதிகள் உள்ளிட்ட சந்தைப் பொருட்களின் கலவையில் இந்தத் திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்படுகிறது. முதலீட்டாளர் எதிர்கால ஆபத்தைக் குறிப்புணர்ந்து விருப்புரிமை அடிப்படையில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். இரண்டு அடுக்குகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், முதல் அடுக்கில் சந்தாதாரர்கள் இடைக்காலத்தில் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க முடியாது. இரண்டாவது அடுக்கில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

Have a great day!
Read more...

English Summary

4 investment options to Become Rich with less than Rs 500