இன்றைய விலைவாசியை சமாளிக்க முடியாமல் சிலர், ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்களை வாங்கி விடுகின்றனர். பின்னர் அதை செலுத்த முடியாமல் விழி பிதுங்குகின்றனர். இதற்காகத்தான் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை அவசர தேவைக்கு ஒதுக்கும் படி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதுவும் சிலருக்கு சாத்தியம் இல்லை. ஏனெனில் விலைவாசி உயர்கிறதே தவிர சிலரின் சம்பளம் அப்படியே இருக்கிறது. ஆனால் சரியாக திட்டமிட்டு செயல்பட தொடங்கினால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் எளிதில் அடைத்து விடலாம். இந்தப் பதிவில் அதற்கான 5 டிப்ஸ்களைப் பார்ப்போம்.
கடன் விவரங்களை பேப்பரில் எழுதுங்கள்: ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்களை வாங்கி கஷ்டப்பட்டு கொண்டிருந்தால் முதலில் செய்ய வேண்டியது அனைத்து கடன் விவரங்களையும் ஒரு பேப்பரில் எழுதுவதுதான். அதில் யார் யாருக்கு எவ்வளவு கடன் தர வேண்டும்?, ஒவ்வொரு கடனுக்குமான வட்டி எவ்வளவு?, வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் எவ்வளவு ஈஎம்ஐ செலுத்துகிறீர்கள்? என்பதையெல்லாம் தனியாக எழுதிக் கொள்ளுங்கள்.
குறைந்த அளவிலான கடனைக் கண்டறிதல்: அடுத்ததாக செய்ய வேண்டியது குறைந்த கடனை கண்டுபிடிப்பதாகும். உதாரணமாக சிலர் அவசரத்திற்காக 1 கிராம், 2 கிராம் தங்கத்தை அடகு வைத்திருப்பார்கள். அப்படி நீங்களும் சின்ன தொகைக்காக கடன் பெற்றிருந்தால் அந்தக் கடனை கண்டுபிடிக்க வேண்டும். எப்படியும் பெரிய கடன்களுக்கு அதிக அளவிலான தொகை தேவைப்படும். அதை சற்று பொறுத்துதான் அடைத்தாக வேண்டும். எனவே சின்ன கடனை முதலில் அடைக்கத் தொடங்கினால் கடன் படிப்படியாக குறைகிறது என்ற மனதிருப்தி கிடைக்கும்.
இதன் பின்னணியில் ஒரு உளவியல் காரணமும் உள்ளது. இதனால் கடன் குறைவது போல ஒரு எண்ணம் வரும். இதுவே உங்களுக்கு பெரிய அளவிலான கடனை அடைக்க மனரீதியாக உதவி செய்யும்.
அதிக வட்டிக் கொண்ட கடன்களுக்கு முன்னுரிமை: சில கடன்களுக்கு வழக்கத்தை விட அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக கிரெடிட் கார்டு கடன்களை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஆண்டுக்கு 42 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே இது போன்ற வட்டி கூடுதலாக இருக்கும் கடன்களுக்கு முன்னுரிமை அளித்தால்.. அதிக பணம் மிச்சமாகும். மிச்சப்படும் தொகையை வைத்து பிற கடன்களையும் அடைக்க முயற்சிக்கலாம்.
பட்ஜெட் போட்டு செலவு செய்தல்: ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவு செய்தால் கடனில் சிக்க வேண்டிய நிலை ஏற்படாது. அப்படியே சிக்கி இருந்தாலும் அதன் பிறகாவது சரியான பட்ஜெட்டை போட்டு அதன்படி செலவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் உங்கள் அத்தியாவசிய தேவை என்ன?, எதற்காக அதிகம் செலவு செய்கிறீர்கள்? என்பதை எழுதி வைக்க வேண்டும். கடன் பிரச்சனை முடியும் வரை தேவையற்ற செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக அடிக்கடி ஷாப்பிங் செய்வது, வெளியில் சாப்பிடுவது இன்டர்நேஷனல் டூர் செல்வது போன்றவற்றை தவிர்க்க முயற்சிக்கலாம். நீங்கள் மிச்சப்படுத்தும் ஒவ்வொரு ரூபாயும் உங்களை கடனிலிருந்து விடுபட வைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கூடுதல் வருமானம் தரும் வழிகளைத் தேடுங்கள்: இன்றெல்லாம் கார்ப்பரேட் ஜாப் செல்பவர்களே மாலை 6 மணிக்கு மேல் சிறு தள்ளுவண்டி வைத்து கூடுதல் வருமானம் பெறுகின்றனர். எனவே உங்களுடைய வசதிக்கு ஏற்ப கூடுதல் வருமானம் தரும் ஒரு வேலையை தேடலாம். பார்ட் டைம் வேலை அல்லது ஃப்ரீ லான்சிங் போன்ற வீட்டில் இருந்து செய்யக்கூடிய வேலை மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம். அப்படி இல்லை என்றாலும் உங்களுக்கு மிச்சமிருக்கும் மீதி நேரத்தை எப்படி பணமீட்ட பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
பெரிய கடன்களில் சிக்கி தவிப்பது அந்த சமயத்தில் பெரும் பிரச்சனையாக தோன்றினாலும்.. சரியான திட்டமிடல் மற்றும் முயற்சி இருந்தால் இதிலிருந்து எளிதில் வெளிவர முடியும்.
More Articles
- சம்பளம் ரொம்ப கம்மியா இருக்கா? கவலையே படாதீங்க! இத பண்ணீங்கன்னா ஈஸியா ஹோம் லோன் கிடைக்கும்!
- சொந்த வீடு வாங்குவது லாபமா? வாடகை வீடு லாபமா? 20x ஃபார்முலாவை வச்சு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!
- ரூ.45 லட்சம் சம்பளம்! ஆனா காசு இல்லாமல் தவிக்கும் டெக்கி! கையில வந்த காசு, போன இடம் தெரியல!
- ரூ.55-க்கு ரூ.3,000 பென்ஷன் கிடைக்கும்! நம்ம ஊர் விவசாயி, டைலர், டிரைவர், பிளம்பர்களுக்கு அரசே தரும் ஆஃபர்!
- தங்கம் விக்கிற விலைக்கு.. பழைய நகைகளை கொடுத்து புதிதாக மாற்றும் மக்கள்! டிரெண்டாகும் புது கலாச்சாரம்!
- ஒவ்வொரு நாளும் ரூ.100 சேமித்தால் போதும்! ரூ.5 லட்சம் வருமானம் கிடைக்கும்! உடனே போஸ்ட் ஆபீஸ்க்கு போங்க!