ஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..!

தொழில் துவங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கவேண்டி வரும் மற்றும் முடிவுகள் எடுக்க நேரிடும். மன அழுத்தத்தின் காரணமாகத் தவறான முடிவு எடுக்க நேர்ந்தால், தொழிலில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு பின்னடைவாக அமைந்துவிடும். தொழில் துவங்கும் போது தவிர்க்க வேண்டிய பொதுவான மற்றும் அபாயகரமான தவறுகளை இங்கே காணலாம்.

திட்டமிடுதலைத் தவிர்த்தல்

எந்தவொரு ஸ்டார்ப் நிறுவனமும் திட்டமிடுதலை புறக்கணிக்கவே கூடாது. குறிக்கோளை நோக்கி விரிவான திட்டம் தயாரித்தலில் தொழில் திட்டமிடல், நிதி திட்டமிடல் மற்றும் சந்தைப்படுத்தும் திட்டமிடலும் அடக்கம். இந்தத் திட்டங்கள் நிதி திரட்டவும், தொழில்முறை வல்லுநர்களுடன் இணைப்பை ஏற்படுத்தவும், தொழிலை மாற்றும்போதும் அல்லது முதலீட்டாளர்/கூட்டாளிகளைத் தேடவும் மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.ஆனால் இந்தத் திட்டங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கவேண்டும்.

சந்தை நிலவரத்தை போதுமான அளவு ஆராயாமல் இருத்தல்

நீங்கள் தொழில் துவங்க விரும்பும் துறையின் அனைத்து அம்சங்களையும் புரிந்துகொள்ள முதலில் சந்தை நிலவரத்தை ஆராய்வது மிகவும் கடினமான ஒன்று. அதற்குப் பின்வருவனவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்:

  • உங்கள் வாடிக்கையாளர் யார், அவரை எப்படி, எங்கு அணுக முடியும்?
  • உங்கள் போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் கட்டணங்கள்
  • நீங்கள் விற்கும் பொருளுக்கான துவக்க& சிறந்த விலை

புத்தகங்கள் மற்றும் வர்த்தக இதழ்களைப் படிக்கலாம், உங்கள் துறையின் ஆலோசர்கள் அல்லது முன்னோடிகளிடம் பேசலாம் மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலம் தொழில் பற்றி எவ்வளவு தகவல் சேகரிக்கமுடியுமோ அவ்வளவையும் செய்யுங்கள்.

முறையற்ற பணியமர்த்தல்

சிலநேரம், வெகுவிரைவில் பணம் சம்பாதிக்கச் சிறு நிறுவனங்களின் முதலாளிகள் தேவைக்கு அதிகமானவர்களைப் பணியமர்த்துவர். மேலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சரியான மற்றும் தொழில்முறை வல்லுநர்களான நபர்களைக் கூர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்களை, உங்களுடன் பணியாற்றியவர்களையோ தேர்ந்தெடுக்கலாம். ஆனால் அதற்கான முழுத் தகுதிகளும் இருக்கவேண்டும். எனவே பணிக்கு தேர்ந்தெடுப்பதைத் துரிதப்படுத்தாமல், நன்கு நேரம் எடுத்துச் சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்களைத் தவிர்த்தல்

புதிய தொழில்நுட்பங்கள் புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன், மேலும் திறமையாகப் பணிபுரிய உதவுவதுடன், நீண்ட கால அடிப்படையில் பணத்தைச் சேமிக்க உதவும். ஆனால் இதற்காகப் புதிய நபர்களைத் தேர்ந்தெடுப்பதுடன், அதைக் கற்பதற்கு நேரமும் பொறுமையும் மிக அவசியம். ஆனாலும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படையில் தொழிலை பாதிக்கலாம்.

சந்தைப்படுத்துதலின் திறனை குறைத்து மதிப்பிடல்

பெரும்பாலான சிறு தொழிலதிபர்கள் செய்யும் தவறே, தனது தொழிலுக்கு எந்தவித சந்தைப்படுத்துதலும் இல்லாமலே , வியாபாரம் நடக்கும் என்ற எண்ணம் தான். வாய்மொழியில் பரிந்துரைத்தல், பாரம்பரிய விளம்பரமுறை மற்றும் இணையவழி சந்தைப்படுத்துதல் எனப் பல திறன்வாய்ந்த சந்தைபடுத்துதல் வழிகள் உள்ளன. உங்கள் தொழில் மற்றும் வாடிக்கையாளர் பரவலுக்கு ஏற்றவாறு சந்தைபடுத்துதலுக்கான நிதியை ஒதுக்குங்கள்.

துல்லியமான நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்யாதிருத்தல்

சிறு தொழில்களில் மூலதன முதலீடு மற்றும் முக்கியச் செலவுகளில் பண நெருக்கடி என்பது மிகவும் மோசமான ஒன்று. அந்த நிலைமை எப்போது இருக்கக்கூடாது. எனவே குறைந்த விலையில் அதே சமயம் நல்ல தரமான பொருட்கள் இருக்கின்றனவா என ஆராயவேண்டும். தொழில் நிதி நிலை அறிக்கையைத் தயார் செய்து, தேவையான அளவு நிதி ஒதுக்கீடு செய்து அதன்படியே செயல்பட வேண்டும். அதேநேரம் எங்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை ஒவ்வொரு மாதமும் ஆவணப்படுத்த வேண்டும். எனவே மலிவு விலை கணக்கு பார்க்கும் மென்பொருளை வாங்கி அதன் மூலம் மாதாந்திர வரவு செலவு கணக்கைப் பராமரிக்கவேண்டும்.

அனைத்தையும் தனி ஆளாகச் செய்தல்

பெரும்பாலான சிறு தொழிலதிபர்கள் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், அனைத்தையும் ஒற்றை ஆளாகச் செய்வது தான். இது நிச்சயம் பணப்பலன்களை அளித்தாலும், நிச்சயம் இதைச் செய்யக்கூடாது. நல்ல குழுவை உருவாக்கி திறமையாக அனைத்து வேலையையும் பிரித்துக்கொடுக்க வேண்டும். இப்படிச்செய்வதன் மூலம் உங்களுக்கு நிறைய நேரம் கிடைப்பதால் தொழிலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடலாம்.

நிதி நெருக்கடியான நிலை

தொழிலுக்காக உங்கள் உறக்கம், குடும்பம் மற்றும் அமைதி என அனைத்தும் தியாகம் செய்துவிட்டீர்கள். நிதி நிலைமையிலும் அப்படிச் செய்துவிட வேண்டாம். தொழிலின் மீதுள்ள ஆர்வத்தில் தனிப்பட்ட சொந்த செலவுகளுக்கான பணத்தை எடுக்கத்தூண்டும், அது கூடவே கூடாது. மேலும் குறிப்பிட்ட அளவு மாதச் சம்பளமாக நீங்களும் தொழிலில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக வெற்றி என்பது அவ்வளவு சீக்கிரத்தில் எளிதாகக் கிடைத்துவிடாது. பல கடினமான சூழல்களைக் கடந்துதான் உங்கள் குறிக்கோளை அடைய முடியும். எனவே இது போன்ற தவறுகளைச் செய்யும் போது மனம் தளர்ந்துவிடாமல், அதிலிருந்து பாடம் படித்துப் புதிய உத்வேகத்துடன் மீண்டு எழுந்து வாருங்கள்.

Have a great day!
Read more...

English Summary

8 StartUp Mistakes You Shouldn’t Make - Tamil Goodreturns | ஸ்டார்ட்அப் துவங்கும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யவே கூடாது..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்