புதிய பிஸ்னஸ் துவங்க மோடி தரும் சூப்பரான திட்டம்.. வெறும் ரூ.5 லட்சம் முதலீடு போதும்..!

சுய தொழில் தொடங்குவோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காகப் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் வகைச் செய்கிறது. இளம் தலைமுறையைத் தொழில் முனைவோராக உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், மத்திய அரசு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது.

புதிய வேலை வாய்ப்புகள் மூலம், பொருளாதாரத்தில் புதிய சக்தியைப் பாய்ச்சும் சிந்தனையில் உருவானது. சுய தொழில் தொடங்க முன் வரும் தொழில் முனைவோர் அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வகைச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், தொடங்கும் தொழிலுக்கு ஏற்றவாறு கடன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொழில் துறையில் முதன்முதலாக அடியெடுத்து வைப்பவர்கள் 5 லட்சம் ரூபாயிலிருந்து, 10 லட்சம் வரை முதலீடு செய்ய அனைத்து உதவிகளையும் செய்கிறது. இதில் ஏராளமான பலன்களையும் அவர்களுக்கு அறிவித்துள்ளது.

நீங்கள் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் என்ன தொழில்களைத் தொடங்கலாம். எவ்வளவு லாபம் ஈட்டலாம் என்பதற்கு 10 யோசனைகள் எங்கள் பொருளாதாரப் புத்தியில் உதித்தன. எப்படிக் கடனை வாங்க வேண்டும், எந்தெந்த உபகரணங்களைக் கொண்டு தொடங்க வேண்டும் என்பது வரை வழிகாட்டுகிறது இந்த உபாயங்கள்....

நடமாடும் உணவகங்கள்

நடமாடும் உணவகங்கள் மேற்கத்திய நாடுகளில் சர்வசாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளது. உணவு ஊர்திகள், ஐஸ் கிரீம் ஊர்திகள் அனைத்தும் வீதிகள் தோறும் திரிகிறது. ஆனால் நமது நாட்டில் அது இன்னும் பிரபலமாகாமல் இருக்கிறது. நீங்கள் நடமாடும் உணவகங்களைத் தொடங்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு எளிமையான டிரக்கோ அல்லது பயன்படுத்தப்பட்ட வேனோ(மூடுந்தோ) பேதுமானதாகும். 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் இதனை வாங்கிக் கொள்ளலாம். சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து விற்பனை செய்வதற்கு இது பயன்படுகிறது. இதனால் மாதம் 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டிவிட முடியும்.

புட் கியாஸ்க்

குறைந்த முதலீட்டில் தொடங்குவதற்குப் புட் கியாஸ்க் பொருத்தமான தொழிலாக இருக்கும். 24 மணி நேரமும் உணவு வழங்க வசதியான தொழில்முறை என்பதால், சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறும். தேர்வுகளுக்கு நள்ளிரவைத் தாண்டியும் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்குப் புட் கியாஸ்க் மூலம் தேநீர், உணவுப் பொருட்களைச் சப்ளை செய்யலாம். இதேபோல் பகலிரவு பாராமல் இயங்கும் அலுவலக வளாகங்களிலும் புட் கியாஸ்க்கை நிறுவுவதன் மூலம் உங்கள் வருவாயை இருமடங்காக ஈட்ட முயும்.

தூய்மைப்பணி சேவை

இப்போதெல்லாம் வீடடைக் கூடப் பெருக்கி சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு, உலகம் அவசர கதியில் இயங்கி வருகிறது. காலையில் எழுந்ததுமே காலில் வெந்நீரை ஊற்றிக்கொண்டு, போட்டதைப் போட்ட இடத்தில் விட்டு விட்டு கிளம்பி விடுகிறார்கள். இதற்காகவே நகர்ப்புறங்களில் தூய்மைப்பணி சேவைகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. உபகரணங்களுக்குச் சிறிய முதலீடும், சிலபல வேலையாட்களையும் பணி அமர்த்தினால் தூய்மைப்பணி சேவையைத் தொடங்கி விடலாம். தீபாவளி, புத்தாண்டு போன்ற காலங்களில் சிறப்புச் சேவைகளை அறிமுகப்படுத்தி வீடுகளைச் சுத்தம் பணியை நடைமுறைப்படுத்தலாம். வீட்டுத் தூய்மைப் பணியில் காலடி பதித்த நீங்கள், நல்ல வருவாய் ஈட்டலாம் என்ற நம்பிக்கை பிறக்கும்போது, தொழிலை விரிவு படுத்திக்கொள்ளலாம். பெரிய அளவிலான உபகரணங்களுடன் கிளப்புகள், பொதுக்கூட்டத் திடல்கள், அரங்குகளைச் சுத்தப்படுத்தலாம்.

சீருடை விற்பனையகம்

நகரங்களில் உள்ள பள்ளிகளில் சீருடை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே சீருடை இருந்த நிலையில், தற்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் சீருடை அவசியமாக்கப்பட்டுள்ளது.பல நிறுவனங்கள், வணிகம் மற்றும் சட்டக்கல்லூரிகளிலும் டிரஸ் கோட் என்ற பெயரில் சீருடை அணிவதைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, சீருடை விற்பனையகத்தைத் தொடங்கலாம். நீங்களே தைத்து விற்பனை செய்வதற்கான கருவி மற்றும் பணியாட்களுக்கு 5 லட்சத்துக்கும் குறைவாக முதலீடு செய்தால் தொழிலைத் தொடங்கலாம்.

தனிப்பயிற்சி வகுப்பு(டுடோரியல்)

பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகளைக் கவனிக்க முடியாத அளவுக்குப் பணிச்சுமையில் பெற்றோர்கள் திண்டாடுகிறார்கள். பெற்றோர்கள் பக்கத்தில் இல்லாததால் பள்ளியில் பாடங்களைச் சரிவரப் படிக்காமலும், வீட்டுப்பாடங்களை எழுதாமலும் மாணவர்கள் டிமிக்க விடுகிறார்கள். இதனால் சிலர் வீடுகளுக்கே வந்து பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆசிரியர்களை நியமிக்கிறார்கள், பலர் குழந்தைகளை டுடோரியலுக்கு அனுப்பி வைக்கிறார்கள். நீங்கள் அப்பேர்பட்ட மாணவர்களுக்குக் கல்வி அறிவை புகட்டத் தயார் என்றால் டுடோரியலை தொடங்கலாம். இரண்டு மூன்று ஆசிரியர்கள், சிறிய வகுப்பறை,இருக்கைகள் ஆகியவை பேதுமானதாகும். 5 லட்சம் ரூபாய்க்குள் டுடோரியல் ரெடி. நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி விகிதத்தைக் காட்டும் பட்சத்தில் பெரிய அளவில் டுடோரியலாக விரிவு படுத்திக் கொள்ள முடியும்.

இசைக்கருவி பயிற்சி வகுப்பு

இசைக்கருவிகளை உங்களால் மீட்டத் தெரியுமா. ஏ.ஆர்.ரகுமான் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு கிட்டார், டிரம்ஸ், பியானோவை இசைக்கத் தெரிந்தால் போதும். ஒரு பயிற்சி வகுப்பை உங்களால் தொடங்க முடியும். இசைக்கருவிகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டுமென்பதால், பல இசை வகுப்புகளில் மாணவர்களையே கருவிகளைக் கொண்டு வரச் சொல்கிறார்கள். இசைக்கருவிகளை மீட் தெரிந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். நீங்களே மாணவர்களுக்கு இசைக்கருவிகளை வழங்க முடியும் என்றால் கிட்டார் 9 ஆயிரம் ரூபாக்கும், டிரம்ஸ் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரத்துக்கும் விற்பனைக்கு வந்துள்ளது. அதனை வாங்கி வகுப்புகளில் வைத்துக் கொள்ளுங்கள். வளர்ந்து விட்டதாக நீங்கள் கருதினால் பயிற்சி பள்ளியை விரிவு செய்து கொள்ளலாம்.

உடற்பயிற்சி மையம்

மக்கள் ஆரோக்கியமாகவும், கட்டுடலோடும் இருக்க வேண்டும் என்றுதான் றினைக்கிறார்கள். ஆனால் பணிச்சுமையும், மாறி வரும் உணவுப்பழக்க வழக்கமும் அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கிறது. பொதுவாகப் பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சி மையங்களில் சேர ஆசைப்படுகிறார்கள். ஆனால் அணுக முடியாத ஒரு இடமாக அவர்கள் கறுக்கிறார்கள். டிரட்மில், கிராஸ் சைக்கிள் போன்ற உபகரணங்களுடன் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை உங்களால் தொடங்க முடியும். அதற்குச் சில பயிற்சியாளர்களை நீங்கள் அப்பாய்ண்மெண்ட் செய்து கொள்ளலாம். இந்த எளிமையான நிறுவனம் வாடிக்கையாளர்களால் வளர்கிறது என்று கருதினால் உடற்பயிற்சிக் கூடத்தை பக்காவாக அமைத்துக் கொள்ளலாம்

பிராஞ்சிஸ் கடைகள்

ஒரு வாடிக்கையாளர் வட்டம் உங்களுக்கு இருக்கும்போது, பிராஞ்சிஸ் கடைகளை நீங்கள் தொடங்கலாம். ஏனென்றால் உங்களின் பிரசித்தி பெற்ற பிராண்ட்கள் மீது அலாதியான நம்பிக்கையுள்ளவர்களாக அவர்கள் இருப்பார்கள். கடைகளைத் திறப்பதற்கான அனுமதியுடன், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரமும் இருக்க வேண்டும். 5 லட்சத்துக்குக் குறைவான தொகையில் பிரான்கைஸ் ஸ்டோரை திறக்கலாம். ஐஸ் கிரீம் போன்ற பிரான்கைஸ் ஸ்டோர்களை நிறுவ 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை தேவைப்படும். நமது நாட்டில் இது மிகப்பெரிய வர்த்தகமாக நடைபெற்று வருகிறது.

கேட்டரிங்

லாபமும், மனசுக்குச் சந்தோசத்தையும் தருவது கேட்டரிங் தொழில். பிரமாண்டமான கேட்டரிங்களுக்கு அதிக முதலீடு தேவை. ஆனால் சிறிய அளவிலான கேட்டரிங்கை தொடங்க முதலீடு அதிகம் தேவையில்லை. 2 சமையல்காரர்களைப் பணியமர்த்தினால் போதும், பிறந்தநாள், ஆண்டு விழா போன்ற சிறிய விசேஷங்களுக்குச் சமையல் செய்து கொடுக்கலாம். இதற்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகைதான் செலவாகும். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியைக் கண்டால் தொழிலை விரிவு செய்து பிரமாண்டப்படுத்தலாம்

நாய் வளர்ப்பு

நாய் வளர்ப்பும், விற்பனையும் உலக அளவில் பிரசித்தி பெற்று வருகிறது. அதாவது கோடி ரூபாய்க்குக் கூட விற்பனையாகும் நாய் இனங்கள் இருக்கிறதாம். நல்ல விலைக்குப் போகும் நாய்களைப் பற்றி அறிந்து கொண்டு அவற்றின் மூலம் இனப்பெருக்கம் செய்து அவற்றைக் காலப்போக்கில் விற்று லாபம் சம்பாதிக்கலாம். சில அரிய வகை நாய் இனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இதற்கு 3 லட்சம் ரூபாய் முதலீடு தேவையாக இருக்கிறது. வருமானமும், லாபமும் உங்கள் கல்லாப் பெட்டியை நிரப்பும்போது, நாய் வளர்ப்புத் தொழிலை மேன்மேலும் வளர்த்து உயர்த்தலாம்.

Have a great day!
Read more...

English Summary

Pradhan Mantri Mudra Yojana Project For New Business Startups. 10 Ideas Under Rs 5 lakh Investment!