15 வயசுப் பொண்ணுங்கள Vietnam இருந்து கடத்தி கல்யாணம் பண்ணிக்கிறாங்களா? என்ன பிரச்னை சீனால..?

சீனா. இந்த வார்த்தை கேட்ட உடன் நமக்கு ஒரு சிவப்புக் கொடியும், கேப்பிடலிசம் கலந்த கம்யூனிஷமும் தான் நினைவுக்கு வரும். இன்று இணையம் இல்லாத இடமே கிடையாது. ஆனால் உலகிலேயே அதிகம் சென்சார் செய்யப்படும் இணைய வெளி சீனா தான். உலகின் பெரு இணைய வியாபாரிகள் சீனாவுக்கு தகுந்தாற் போல இணைய சேவைகளைக் கொடுக்காததால், ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு ட்விட்டர், தனக்கென ஒரு கூகுள் என தன் போக்கில் உலகைக் கண்டவர்கள். மாற்றி அமைத்துக் கொண்டு வென்றவர்கள். ஆனால் Vietnam-ல் இருந்து சிறுமிகளைக் கடத்திக் கல்யாணம் செய்யும் பிரச்னையைத் தவிர.

Advertisement

கடுமை தான் சீனா

இத்தனை கடுமையாக உலகுக்குத் தெரிவதாலேயே சீனாவுக்கு இரும்புத் திரை தேசம் என்று ஒரு பெயர் உண்டு. ரஷ்யாவைப் போல. சீனா ஒரு கம்யூனிஷ தேசம் என்றாலும் ஒரு சர்வாதிகாரி போலத் தான் நடந்து கொள்ளும். அரசு தான் அங்கு அரசன். அரசன் சொல்வதைக் கேட்டால் சுபமாக வாழலாம் இல்லை... காலி தான்.

Advertisement
நான் தான் எல்லாம்

சர்வாதிகாரிக்கு ஒரு சிறந்த சமீபத்தைய எடுத்துக்காட்டாக ஒரு விஷயம் நடந்தது. பொதுவாக சீனாவின் அரசியல் கொள்கைகள் & சட்டப் படி அதிபராக ஒருவர் இரு முறை மட்டுமே பதவி வகிக்கமுடியும். அந்த விதிமுறையை ஓர் ஆண்டுக்கு முன்பு மாற்றி, கிட்டத்தட்ட நிரந்தர அதிபராகப் பதவியில் இருக்கும் ஜி ஜின்பிங்கின் நடவடிக்கைகள், சீன சர்வாதிகாரத்துக்கான ஒரு வரலாற்று சாட்சி. இந்த அளவுக்கு மீறிய சர்வாதிகாரத்தால் ஏற்பட்ட ஒரு பிரச்னைக்காகத் தான் சீனா இன்று சர்வதேச அரங்கில் கதறிக் கொண்டிருக்கிறது.

பிரச்னை

இன்று, இளம் பெண்கள் பற்றாக் குறையில் தத்தளிக்கிறது சீனா. அட ஆமாங்க, இன்று சீனாவில் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல், சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் தவிக்கிறார்கள்! இந்த மூன்று கோடி பேருக்கு எந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற கேள்விக்கே இடம் கிடையாது. இந்த மூன்று கோடி பேருக்கு சீனாவில் பெண்களே கிடையாது. அது தான் பிரச்னை.

காரணம் 1

சராசரி நிலைக்கு மேல் போன பாலின விகிதாச்சாரம். சீனாவில் சராசரியாக 100 பெண்களுக்கு 115 ஆண்கள் இருக்கிறார்களாம். ஒரு சில மாகாணங்களில் இந்த பாலின விகிதாச்சாரம் 100 பெண்களுக்கு 120 என்று வரை எல்லாம் இருக்கிறதாம். சராசரியாக இந்த விகிதாச்சாரம் 100க்கு 105 வரை இருந்தால் பிரச்னையை எப்படியாவது சமாளிக்கலாம். ஆனால் சீனோ 100க்கு 115 - 120 வரை இருக்கிறதே..? ஆக என்ன செய்தாலும் 15 - 20 ஆண்ளுக்கு சீன பெண்கள் கிடைக்கவே மாட்டார்கள்.

காரணம் 2

1979-ல் "இனி ஒவ்வொரு குடும்பமும் ஒரு குழந்தையைத் தான் பெற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் அரசு சலுகைகள் எதுவும் கிடைக்காது" என உரத்த குரலில் போட்ட சட்டம். அந்த சட்டம் மூலம் மக்கள் தொகையைக் கட்டுபடுத்த வேண்டும் என்பது தான் அரசின் உண்மையான நோக்கம். இந்த மக்கள் தொகை கட்டுப்பாடும் சீனாவுக்கு நல்ல பொருளாதார முடிவுகளைக் கொடுத்தது. பொருளாதாரமும் வளர்ந்தது. ஆனால் சீனாவும் இந்தியாவைப் போல சில மூட நம்பிக்கைகளை பலமாக பின்பற்றக் கூடிய நாடு என்பதை மட்டும் மறந்து விட்டார்கள் ஆட்சியாளர்கள். இந்தியாவைப் போல அங்கும் பெண் சிசு கொலைக்கு பலத்த ஆதரவு உண்டு. நடந்து வந்த பெண் சிசுக் கொலையை சீன அரசும் கண்டு கொள்ளவில்லை.

மனநிலை

ஆண் தான் குடும்பத்தின் வாரிசு என்பது சீனர்களின் பலமான நம்பிக்கை. ஆக வயிற்றில் வளரும் சிசு பெண் எனத் தெரியவந்தால் உடனடியாக கலைத்துவிடுவார்கள். மீண்டும் தாம்பத்தியம், மீண்டும் வயிற்றில் சிசு, ஆணா, பெண்ணா..? பெண் என்றால் கலைத்துவிடு. இப்படி ஆண் வாரிசு உருவாகும் வரை அனைத்து பெண் சிசுக்களும் இதே கதி தான். பிறக்கும் முன்பே பெண்களை ஒதுக்கிய அப்பா அம்மாக்களின் செல்ல மகன்களை நிராகரித்தார்கள் தப்பிப் பிறந்த சீன பெண்கள்.. காரணம் நவ நாகரீகம்.

பொருளாதார நிலை

இன்றைய கார்ப்பரேட் உலக வாழ்கையை சீன பெண்களும் ரசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். திருமணமா..? அப்பறம் பார்த்துக் கொள்ளலாம் என சொந்தமாக சம்பாதித்து, தங்கள் சொந்த காசிலேயே நல்ல வாழ்க்கையை அனுபவிக்கும் 90-ஸ் கிட்ஸ் பெண்கள் அதிகரித்துவிட்டார்கள். சீனாவிலும் நன்றாக அப்டித்துவிட்டு, நல்ல நிறுவனத்தில் வேலை அல்லது தொழில் தொடங்க வேண்டும், நன்றாக சம்பாதித்து செட்டில் ஆக வேண்டும் என்கிற எண்ணம் பொதுவாக அதிகரித்தது. அதில் சீன பெண்களும் ஈர்க்கப்பட்டதால், கல்யாணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள். இந்த பெண்கள் சுதந்திரம், சீன ஆண்களின் கல்யாண ஏக்கத்தை இன்னும் சிக்கல் ஆக்கிவிட்டது.

நல்ல பிசினஸ்

இந்த பிரச்னையை எப்படி சரி செய்வது என மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறது சீன அரசு. ஆனால் பெருகிவரும் மணப்பெண் பற்றாக் குறையை கவனித்த கடத்தல்காரர்கள், பிரச்னையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இதில் ஆச்சர்யம் என்ன என்றால் சீன அரசுக்கு இந்த செய்தி கிடைத்தும் பெரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் இதைப் பற்றி கொஞ்சம் சத்தமாகக் கூடப் பேசவில்லை. எதைப் பற்றி எனக் கேட்கிறீர்களா..? பெண்கள் கடத்தல்.

டார்கெட் நாடுகள்

சீனாவின் தெற்குப் பகுதி எல்லையில் இருக்கும் வியட்நாம் தான் முக்கிய டார்கெட். வியட்நாமின் மியோவாக் கிராமம் அதிலும் ஸ்பெஷல் டார்கெட். பெண் கடத்தலுக்கான முக்கியப் பாதை. இக்கிராமத்தில் உள்ள ஹுமாங் இனப் பெண்களும், அதன் அண்டைக் கிராமங்களில் வறுமையின் பிடியில் இருக்கும் பெண்களும் தான் சீன கடத்தல் கும்பளுக்கு எளிதில் கிடைக்கும் பெண்கள் கூட்டம். சிலசமயம், வியட்நாமில் வாழ்கை கிடைக்காத பெண்கள் நல்ல வேலை கிடைக்கும் என்கிற ஆநம்பிக்கையில் சட்டவிரோதமாக சீன எல்லை தாண்டுவார்கள். அப்படி தாண்டுபவர்களை கூட ஆசை வார்த்தைப் பேசி கடத்தல் கும்பல்கள் தங்கள் வியாபாரப் பொருள் ஆக்கி நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்.

டார்கெட் 2

கம்போடியா, மியான்மர், லாவோ ஆகிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் இளம் பெண்களையும் சிறுமி களையும் ஈவு இறக்கம் இன்றி கடத்தி வந்து தென் சீன எல்லையில், சீன இளைஞர்களுக்கு விற்கத் தொடங்கினர். சீன அரசும் இதைக் கண்டுகொள்ளாததால், சட்டவிரோதமான மணப்பெண் வர்த்தகம் வியட்நாம் - சீன எல்லையில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் சீன அரசுக்கோ, சீனர்களுக்கோ தங்கள் பிரச்னை தீர்ந்தது போதும் என மீண்டும் தப்புக் கணக்கு போடுகிறார்கள்.

கட்டணமாக செலுத்தப்படும் வரதட்சணை

இந்தியாவைப் போலவே சீனாவிலும் திருமணம் ஒரு மிகப் பெரிய விசேஷம் தான். என்ன இந்தியாவில் மாப்பிள்ளை வரதட்சணை வாங்குவார். சீனாவில் மணமகள் வரதட்சணை வாங்குவாள். மணமகன் வீட்டார், மணப்பெண்ணுக்கு சீனப் பாரம்பர்யமான ‘மணமகள் வரதட்சணையை' ரொக்கம் அல்லது பரிசாகக் கொடுக்க வேண்டும். சீன இளைஞர்கள் தங்களின் வருங்கால மனைவிகளுக்காக வைத்திருக்கும் வர தட்சணைத் தொடகையில் இருந்து, 15,000 யுவான் முதல் 1,00,000 யுவான் வரை வரதட்சணையை ஏஜெண்டுகளுக்கு செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

காசு இருக்கே அப்புறம் என்ன..?

இந்த வரதட்சணை காரணத்தால் சட்டவிரோத மணப்பெண் சந்தைக்கு எப்போது டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த நடவடிக்கைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது வியட்நாம் சிறுமிகள் தான். இதில் வேதனை என்னவென்றால் கடத்தப்பட்டு விற்கப்படும் சிறுமிகள் கூட கட்டாயக் குழந்தை திருமணத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்பது தான்.

பிசினஸ் ஜோர்

மணப்பெண் தேவை சீனா முழுக்க இருப்பதாலும், தென் சீனாவின் வியட்நாம் -சீன எல்லைகள் முழுமையாகவும் முறையாகவும் கண்காணிக்காததாலும், பெண் கடத்தல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபத்தில் 17 வியட்நாமிய பெண்கள் மீட்கப்பட்டதாக செய்தி படித்திருக்கலாம். இப்படி அவ்வப் போது செய்தி வருவதோடு சரி, இதுவரை ஒரு தொலை நோக்குப் பார்வையோடு சீனா இந்த வியட்நாமிய பெண்கள் கடத்தலுக்கு ஒரு வழியைக் கண்டு பிடிக்கவில்லை. எல்லையோர பாதுகாப்பை பலப்படுத்தவும் இல்லை.

மொழி பிரச்னை

கடத்தல் கும்பல்களிடம் இருந்து கடத்தப்பட்ட வெவ்வேறு நாட்டுப் பெண்கள் தப்புவது மிகவும் கடினம். அதற்கு முக்கிய காரணம் மொழி. சீன மொழி தெரியாததால், சீனாவில் விற்கப்படும் வியட்நாமிய பெண்களால் தங்களின் இருப்பிடத் தகவல்களைக் கூட மீட்பவர்களுக்கோ, சீன காவல் துறை அல்லது குடியுரிமை அதிகாரிகளுக்குக் கூட உடனடியாகத் தர இயலாது. இன்னும் சில பெண்கள் சீன காவல் துறையின் உதவியை நாடினால், சீன குடியேற்றச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவோம் என்கிற அச்சத்தில் விதிக்கப்பட்ட வாழ்கையை வாழப் பழகுகிறார்கள்.

தனக்குத் தானே வைத்துக் கொண்ட சூன்யம்

அன்று சீனா என்கிற நாட்டின் நன்மைக்காக ஒரே ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ளச் சொல்லி அரசு தனக்கு தானே வினை வைத்துக் கொண்டது. சீனாவை வேறு லெவலுக்கு கொண்டு செல்ல ஆரோக்கியமான மனித வளம் தேவை என்ற பேராசை சீனாவுக்கு எப்போது உண்டு. எனவே ஒரு குழந்தை திட்டத்தை விட கொடூரமாக மனநலம் குன்றியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற கொடூர சட்டம் இயற்றிய நாடு சீனா. தன் நாட்டு மக்களின் மனித உரிமைகளையும், உணர்வுகளையுமே மதிக்காத சீனாவிடம், அண்டை நாட்டாரை மதித்து, அவர்களைக் காப்பாற்றச் சொல்ல முடியுமா என்ன..?

மாற்றம் தேவை

ஒரு பெண்ணை பெண்ணாகவும், சக மனிதராகவும் பார்க்கும் பக்குவம் சீன இளைஞர்களுக்கு வர வேண்டும். நாடு என்பது எட்டிப் பிடிக்க வேண்டிய எண்கள் கிடையாது, 130 கோடி தனி மனிதர்களும், அவர்களின் தேசிய உணர்வும் தான் நாடு... என்பதை நிரந்தர அதிபராக இருக்கும் ஜி ஜின்பிங்கும் உணர வேண்டும். உணர்வார்கள் என நம்புகிறோம்... வியட்நாமிய சிறுமிகளின், பெண்களின் உணர்வுகளை உணர்வார்கள் என நம்புகிறோம்.

English Summary

kidnapped vietnam girls are forced to marry chinese men
Advertisement