அமேஸானை இந்தியா விட்டு விரட்டியாச்சே, இனி இந்தியாவில் ரிலையன்ஸ் ராஜ்ஜியம் தான..?

உண்மை தான். உலகின் நம்பர் 1 பணக்காரர். ஆண்டுக்கு பில்லியன் கணக்கில் சம்பாதித்து தற்போது 160 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உச்சாணிக் கொம்பில் இருக்கும் அமேஸான் நிறுவனத்தின் ஜெஃப் பிசாஸ் (Jeff Bezos) உடன் நம் முகேஷ் அம்பானி மோதுகிறார்.

Advertisement

நடக்குமா..?

நீங்கள் கேட்கும் கேள்வியை நானும் கேட்டுக் கொண்டேன். ஆனால் தற்போது இந்தியாவில் இருக்கும் பிசினஸ் சூழல், அரசு கொள்கைகள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி என அனைத்தையும் பார்க்கும் போது அம்பானி செய்தாலும் செய்துவிடுவார் என்றே தோன்றுகிறது. அவர்கள் பக்கம் செய்யும் முயற்சிகள், வேலைகள், முதலீடுகளை எல்லாம் விடுங்கள்... இந்திய மக்கள் தொகை ஒன்று போதுமே..?

Advertisement
நுகர்வோர்கள்

இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்களில் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளீல், ஒவ்வொரு ஆண்டும் 50 சதவிகிதத்துக்கு மேல் இருப்பதை எத்தனை அறிக்கைகள் உறுதி செய்திருக்கின்றன. இப்போது உள் நாட்டு நிறுவனங்களை (ரிலையன்ஸை) மட்டுமே வளர்த்தெடுக்க இந்தியாவின் இ-காமர்ஸ் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. இனி ஆன்லைனில் வாங்கும் இந்திய வாடிக்கையாளர்கள் என்ன செய்வார்கள். இந்திய ஆன்லைன் நிறுவனங்களில் மட்டுமே வாங்க முடியும்..? சரி தானே. அதான் வந்துவிட்டதே ரிலையன்ஸின் அஜியோ நிறுவனம்.

சார்பானதா..?

அட ஆமாங்க. ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக தன்னைப் போர்க்களத்தில் மோத முழுமையாக தயார் செய்து கொண்டு அமேஸான் மற்றும் ஃப்ளிப்கார்ட்டை ஒரு சில சட்டங்கள் மூலம் முழுமையாக விரட்டி விட்டது. இப்போது ரிலையன்ஸின் அஜியோ நிறுவனம் மட்டும் இந்திய சந்தைகளில், குறிப்பாக ஆன்லைன் சந்தைகளில் ராஜ நடை போடுகிறது.

எதிர்காலம்

எதிர்காலத்தில் ரிலையன்ஸ் ஜியோவைப் போல, ஆன்லைன் சந்தை என்று வந்தாலே ரிலையன்ஸின் அஜியோ மட்டுமே தான் நம் நினைவுக்கு வரும், வர வேண்டும் என ரிலையன்ஸ் திரை மறைவில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறது. அதற்காக மூன்று அதிரடித் திட்டங்களை வகுத்திருக்கிறது ரிலையன்ஸ்.

திட்டம் 1

இந்தியாவில் இருக்கும் 30 மில்லியன் (3 கோடி) சிறு வணிகர்கள் மற்றும் சில்லறை வணிகர்களையும், வாடிக்கையாளர்களையும் இணைக்கும் விதத்தில் ஒரே ஒரு சந்தையை ரிலையன்ஸ் ரீடெயில் மூலம் திறக்க இருக்கிறது. இப்படி 10,000 பொதுக் கடைகளை இந்தியா முழுக்க திறக்க இருக்கிறார்களாம்.

வணிகர்களுக்கு

அந்த பொதுக் கடையில் தங்கள் சரக்குகளை விற்கும் வணிகர்களுக்கு தேவையான சரக்கு மேலாண்மை, பில்லிங், அரசுடனான வரி சமர்பித்தல்கள் போன்றவைகள் எல்லாம் மிகக் குறைந்த விலைக்கு செய்து தர இருக்கிறார்கள். குறிப்பாக ஆன்லைனிலேயே பேமெண்ட்களை பெறுவது மற்றும் செலுத்துவது என பக்காவாக திட்டமிட்டிருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு ரிலையன்ஸுக்கு போனால் எல்லாம் கிடைக்கும் என்கிற மாயை உருவாகும். வியாபாரிகளுக்கும் பொருள் விற்றுப் போகும் என ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் அம்பானி.

இது தான் தேவை

உதாரணமாக ரிலையன்ஸ் ரீடெயிலில் ஒரு கிலோ சர்க்கரை விலை 52 ரூபாய். ஆனால் வெளியே ஒரு கிலோ சர்க்கரை 40 ரூபாய்க்கு கிடைக்கும். மேலே சொன்னது போல் வெளியே விசாரிக்க வாய்ப்பே இல்லாத சூழல் வந்தால் ரிலையன்ஸ் வைத்தது தானே விலை. சும்மா லாபத்தை அள்ளி விடமாட்டார்களா என்ன..?

ரிலையன்ஸ் நிதி நிலை

கடந்த ஆண்டில் முகேஷ் அம்பானிக்கு இருக்கும் மொத்த நிறுவனங்களில் ரீடெயில் என்கிற சில்லறை வணிகம் மற்றும் டிஜிட்டல் ஆகிய இரண்டு துறைகளில் இருந்து மட்டும் 25 சதவிகிதத்துக்கு மேல் வருவாய் வந்திருக்கிறதாம். இதை ப்ளூம்பெர்க் நிறுவனமும் உறுதிப் படுத்துகிறது. எனவே தான் ரிலையன்ஸ் தன் எதிர்கால பிசினஸாக டிஜிட்டல் டெலி கம்யூனிகேஷன் மற்றும் சில்லறை வணிகத்துக்கு டிக் அடித்திருக்கிறார் அம்பானி.

திட்டம் 2

இந்திய டெலிகாம் துறையில் தற்போது 50 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதில் 20 கோடி பேர் கிராம புறத்தைச் சேர்ந்தவர்களாம். இந்த 20 கோடி பேரில் சுமார் 5 கோடி பேர் மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துகிறார்களாம். இந்த எண்ணிக்கை இனி வரும் காலங்களில் பயங்கரமாக குறைந்து, ஆன்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்காகத் வேலை பார்த்துக் கொண்டிருக்கிரோறோ என்கிறார் அம்பானி.

ஆன்லைன் பர்சேஸ்

இணையப் பயன்பாட்டாளர்கள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை இந்த 2019 முடிவில் சுமார் 12 கோடி பேராக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதாம். இந்த எண்ணிக்கையை அப்படியே கைப்பற்றுவது ஒரு பக்கம் இருக்க, புதிதாக வருபவர்களையும் ரிலையன்ஸால் நிச்சயம் கவர முடியும், அதற்கு ஜியோவும், ஜியோவில் இலவச திட்டங்களும் உதவும் என்கிறார் அம்பானி.

சுனில் மிட்டல் கதறல்

ஜியோ வந்தது தான், இன்று இந்திய டெலிகாம் சந்தையில் யாராலும் வியாபாரம் செய்ய முடியவில்லை என வெளிப்படையாக பத்திரிகைகளிடம் பேசும் அளவுக்கு அடிபட்டிருக்கிறார் ஏர்டெல் தலைவர். அவ்வலவு நஷ்டம். இந்த புலம்பல்கள் ஒரு பக்கம் இருக்க, இந்தியாவை, இந்தியர்களை 4ஜி சுவையூட்டி இணையத்தை அள்ளி இரைத்த பெருமை அம்பானியையே சேரும். இன்று இந்தியாவின் கிராமப் புறங்கள் வரை டிக் டாக் செய்து கலக்குகிறார்கள் என்றால் ஜியோ தான் ஆதிமூலம். அந்த பொழுதுபோக்கை அசால்டாக பிசினஸாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அம்பானி. அதற்கு ஒரு சாம்பிள்... கிராம புறத்து வியாபாரிகள் ஆன்லைனிலேயே பணத்தை பரிமாறிக் கொள்ள ஒரு ஆன்லைன் ஆஃப்லைன் ஹைபிரிட் செயலியையும் உருவாக்கி வருகிறார்களாம்.

திட்டம் 3

இந்தியர்கள் ஜியோ மூலம் ஒரு மாதத்தில் 500 கோடி மணி நேரம் ஆன்லைனில் வீடியோ பார்க்கிறார்களாம். இந்த 500 கோடி மணி நேரத்தில் தங்கள் டெலிகாம் வாடிக்கையாளர்களை, சில்லறை வணிக வியாபாரத்துக்கு இழுக்க சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்களாம். கூடிய விரைவில் அஜியோ இந்தியாவின் அமேஸானாக உருவெடுக்கும் என ரிலையன்ஸ் அதிகாரிகள் ஆருடம் சொல்கிறார்கள்.

நாங்கத் தான் அரசாங்கம்

கட்டுரையின் முதல் பகுதிகளில் சொன்னது போல இந்திய அரசியல்வாதிகளுக்கு தேவையானதைச் செய்துவிட்டு, ஆன்லைன் வியாபாரக் கொள்கைகளை தனக்கு தகுந்தாற் போல எழுதிக் கொண்டது ரிலையன்ஸ். இனி ரிலையன்ஸின் அஜியோ ஃப்ளிப்கார்ட்டைப் போல தள்ளுபடி, ஆஃபர் எல்லாம் கொடுத்து பணத்தை விரையப்படுத்த வேண்டாம். நேரடியாக வியாபாரத்தைப் பார்த்தால் போதும். அதுவும் போட்டியாளர்களே இல்லாத வியாபாரம். ரிலையன்ஸுக்காக சமன்படுத்தப்பட்ட வியாபாரம் என தன் வொயிட் காலர் வேலையைக் காட்டி இருக்கிறார் அம்பானி.

இங்கிட்டு விடு அங்கிட்டு சம்பாதிக்கலாம்.

முகேஷ் அம்பானி, தன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் சுமார் 40 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்துவிட்டார். ஆனால் இன்று வரை ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து அம்பானிக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா..? வெறும் இரண்டு டாலர் தான். ஆனால் இங்கு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலைக்கோ டெலிகாம் சேவைகளை வழங்கிவிட்டு, அத்தனை ஜியோ வாடிக்கையாளர்களையும் தன்னை நோக்கி, தன் ரிலையன்ஸ் அஜியோ ஆன்லைன் கடையை நோக்கி, தன் ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தை நோக்கி ஓடி வருபவர்களாக மாற்றிவிட்டார் முகேஷ் அம்பானி. ஆக டெலிகாமில் விடும் காசை ஒன்றுக்கு இரண்டாக ரிலையன்ஸ் கடைகளின் பொருட்களையே வாங்க வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார் அம்பானி. உனக்கு எல்லாம் டேட்டாவ இலவசமா கொடுக்க நான் என்ன லூசா..?

உலக பொருளாதார மன்றத்தில் ரகுராம் ராஜன்

இதைத் தான் ரகுராம் ராஜன் சொன்னார் "இன்று பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பிசினஸை வளர்க்க எத்தனையோ பொருட்களை சேவைகளை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலைக்கோ கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்கான விலையை எங்கு வைக்கிறார்கள். எப்படி அந்த பொருள் அல்லது சேவைக்கான விலையை சரிகட்டிக் கொள்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார். இரண்டு நாட்களுக்கு முன் ரகுராம் ராஜன் தாவோஸ் மாநாட்டில் சொன்னதை , இங்கு இந்தியாவில் அம்பானி கண் முன் காட்டுகிறார்.

ஜெஃப் பிசாஸ்

அமேஸான் இரண்டு கைகள் கட்டப்பட்ட நிலையில், அஜானுபாகுவான ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்க்க வேண்டிய சூழலில் இருக்கிறது. அதுவும் அம்பானியின் சொந்த ஊரான இந்தியாவிலேயே. அடுத்த சில வருடங்களில் அமேஸான் அல்லது ஃப்ளிப்கார்ட் என்கிற பெயரில் நிறுவனங்கள் இருந்தது கூட தெரியாத வகையில், ஆர்குட், கூகுள் லாடிடியூட், கூகுள் பிகாஸா போல ஒரு நாஸ்டால்ஜியா சேவைகளாகி விடுமோ என இருவருமே பயந்து போய் இருக்கிறார்கள். ஆனால் அம்பானியோ, அங்கே தேர்தலுக்கு நிதி கொடுப்பதில் பிசியாக இருக்கிறார். மன்னிக்கவும் ஜெஃப் அமெரிக்க உங்கள் கோட்டை என்றால், இந்தியா அம்பானியின் கோட்டை. அமெரிக்காவைப் போல நான்கு மடங்கு அதிக (125 கோடி) நுகர்வோர்களைக் கொண்ட பெருங்கோட்டை. இங்கு அம்பானியை வெல்வது 125 கோடி மக்களின் பாக்கெட்டுகளை வெல்வதற்குச் சமம். முடிந்தால் மோதிப் பாருங்கள்... வாழ்த்துக்கள் ஜெஃப்.

English Summary

mukesh ambani leading reliance industries may become the world biggest company
Advertisement