இந்த கட்டிடத்தின் விலையை கேட்டா தலை சுத்திடும்..!

ரியல் எஸ்டேட் துறை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதிலும் துபாய், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் மிகப்பெரிய முதலீட்டில் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டியுள்ளது, சில நாடுகள் கட்டியும் வருகிறது.

அப்படி அனைவரும் ஆச்சரியம்படும் அளவிற்கு மிகப்பெரிய பொருட் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய சுவாரசியமான செய்தி தான் இது.

பிரின்சஸ் டவர், துபாய்: $2.4 பில்லியன்

துபாயில் அதிகப் பொருட்செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், உலகின் உயரமான கட்டிடம் என்று அறியப்படும் புர்ஜ் கலிஃபா-விற்கு அடுத்தபடியாக இருப்பதோடு, உலகின் உயரமான குடியிருப்புக் கட்டிடமாக விளங்குகிறது. 2012 ஆம் ஆண்டுப் பணி முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்திற்கு $2.2 பில்லியன் செலவு செய்யப்பட்டது.

ஷாங்காய் டவர், ஷாங்காய்: $2.5 பில்லியன்

2,073 அடி (632 மீட்டர்கள்) உயரத்தில் நிற்கும் ஷாங்காயின் சுழல் டவர், உலகின் வேகமான லிஃப்ட்களைக் கொண்ட கட்டிடம் என்பதில் இருந்து உலகத்தின் மிக உயரமான கண்காணிப்புத் தளம் என்பது வரை, எல்லாவற்றிலும் ஒப்பிட முடியாத பல காரியங்களைக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தக் கட்டிடம், $2.4 பில்லியன் பொருட்செலவில் கட்டப்பட்டது ஆகும்.

யாங்கி ஸ்டேடிடம், நியூயார்க்: $2.6 பில்லியன்

2009 ஆம் ஆண்டு $2.3 பில்லியன் பொருட்செலவில் நியூயார்க்கில் இருந்த யாங்கி ஸ்டேடிடம் புதுப்பிக்கப்பட்டது. இதன்மூலம் இதுவரை கட்டப்பட்ட ஸ்டேடியங்களிலேயே அதிகப் பொருட்செலவில் கட்டப்பட்டதாக உருவெடுத்தது. இந்தக் கட்டிடப் பணிக்குத் தேவைப்பட்ட மிகப்பெரிய தொகையான $1.2 பில்லியன் , பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தி ஷார்த், லண்டன்: $2.6 பில்லியன்

2012 ஆம் ஆண்டு இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை, ஐரோப்பியன் யூனியனில் உள்ள மிக உயரமான கட்டிடமாகத் திகழ்ந்த இது, பிரபல கட்டிட கலைஞர் ரென்ஸோ பியானோவின் 1,016 அடி (310 மீட்டர்கள்) உயரத்தில் அமைந்த தலைசிறந்த படைப்பாகும். லண்டன் பிரிட்ஜ் ஸ்டேஷனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளைப் புதுப்பித்தல் உட்பட முழு மேம்பாட்டிற்கான செலவு ஏறக்குறைய $2.4 பில்லியன் எட்டியுள்ளது.

சிட்டி ஆஃப் டிரீம்ஸ், மக்காவு: $2.7 பில்லியன்

சிட்டி ஆஃப் டிரீம்ஸ் கட்டிடம், மக்காவு நகரில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கேளிக்கை அரங்கம் மற்றும் சூதாட்ட நிலையம் ஆகும். 2009 ஆம் ஆண்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்ட இந்த ஆடம்பரமான அரங்கத்தில், பெரியளவிலான அக்வேரியம் மற்றும் குமிழ் நீரூற்று உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் காணப்படுகின்றன. இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு $2.4 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

வெனிடியன் மக்காவு, மக்காவு: $3 பில்லியன்

$2.4 பில்லியன் செலவில் அமைந்த தன்னாட்சி பிரதேசத்தின் மிகப்பெரிய கேளிக்கை அரங்கம் மற்றும் சூதாட்ட நிலையத்திற்கு அடுத்தபடியாக, மக்காவு நகரில் காண வேண்டியது வெனிடியன் மக்காவு ஆகும். சிட்டி ஆஃப் டிரீம்ஸிற்கு எதிரில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 39 மாடிகளைக் கொண்டு, லாஸ் வேகஸில் அமைந்த கட்டிட மாதிரிக்கு ஏற்ற அமைப்பில் 2005 ஆம் ஆண்டுப் பணி முடிக்கப்பட்டது.

இஸ்தானா நருல் இமான் அரண்மனை, புரூனே: $3.3 பில்லியன்

1984 ஆம் ஆண்டு $1.4 பில்லியன் பொருட்செலவில், உலகிலேயே மிகப்பெரிய அரண்மனையாகப் புரூனே நாட்டின் சுல்தான் தங்குவதற்கான வீடாகக் கட்டப்பட்டு, இப்போதும் அரச குடியிருப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தில் 5 ஆயிரம் விருந்தினர் அமரும் வகையிலான விருந்து சாலை உட்பட மொத்தம் 1,788 அறைகள் உள்ளன.

வெனின் ரிசார்ட், லாஸ் வேகஸ்: $3.4 பில்லியன்

லாஸ் வேகஸ் நகரில் உள்ள ஆடம்பரமான மற்றும் பொழிவு மிகுந்த ஹோட்டல் மற்றும் சூதாட்ட அரங்கங்களில் ஒன்றான வெனின் ரிசார்ட், 2005 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆடம்பரமான 2,716 அறைகளைக் கொண்ட அரங்கத்தைக் கட்டியெழுப்ப $2.7 பில்லியன் செலவானது. இன்றைய மதிப்பில் சுமார் $3.4 பில்லியன் செலவு ஆகலாம்.

எமிரேட்ஸ் அரண்மனை, அபு தாபி: $3.8 பில்லியன்

துபாயில் உள்ள எமிரேட்ஸ் அரண்மனையை ஒரு அரச குடியிருப்பு என்பதை விட ஒரு ஹோட்டல் என்று கூறும் வகையில் அரச குடும்பத்தினருக்கே உரியதாக அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு $3 பில்லியன் பொருட்செலவில் பணி முடிக்கப்பட்டது. இதில் கெம்பென்ஸ்கி குழுவினரால் நடத்தப்படும் ஹோட்டலில் 394 குடியிருப்புகளும், குறிப்பிடப்படாத 2 ஸ்பாக்களும், ஒரு பாதாள வடிவிலான பால்ரூம் மற்றும் எண்ணற்ற கடைகளும் உணவகங்களும் காணப்படுகின்றன.

பேலஸ் ஆஃப் தி பார்லிமெண்ட், புக்காரெஸ்ட்: $3.9 பில்லியன்

ஆயிரக்கணக்கான பணியாளர்களின் உயிரைப் பலி வாங்கியதும் புக்காரெஸ்ட் பகுதிகளை அழித்து, ரோமானிய சர்வாதிகாரி நிக்கோலே சீயாஸ்கூ ஆட்சிக்கு வழிவகுத்த மிகப்பெரிய பேலஸ் ஆஃப் பார்லிமெண்ட், ஏறக்குறைய 10 ஏக்கர்களுக்கு மேலாகப் பரவியுள்ளது. இந்தக் கட்டிட பணி 1984 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. இன்றைய மதிப்பில் $3.9 பில்லியன் செலவு ஆகலாம் என்று தெரிகிறது.

ஒன் வோல்டு டிரேடு சென்டர், நியூயார்க்: $4.1 பில்லியன்

நியூயார்க்கில் இருந்த வோல்டு டிரேடு அரங்கத்தை இடித்து, ஒன் வோல்டு டிரேடு சென்டர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடமாகக் கட்டப்பட்டது. 1,776 அடி (541 மீட்டர்கள்) உயரத்தில் வானளாவிய முறையில் நிமிர்ந்து நிற்கும் இந்தக் கட்டிடம், 2012 ஆம் ஆண்டு $3.8 பில்லியன் பொருட்செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இன்றைய மதிப்பில் $4.1 பில்லியன் உள்ள இந்தக் கட்டிடம், அமெரிக்காவில் இப்போது உள்ள மிக உயரமான கட்டிடமாக உள்ளது.

தி காஸ்மோபொலிட்டன், லாஸ் வேகாஸ்: $4.4 பில்லியன்

2009 ஆம் ஆண்டு விழிபிதுங்கும் வகையில் $3.9 பில்லியன் பொருட்செலவில் கட்டப்பட்ட காஸ்மோபொலிட்டன் கட்டிடத்தில் 3,027 அறைகள் உள்ளன. கலைநுட்பத்துடன் கூடிய உணவகம் மற்றும் சூதாட்ட அரங்கம், உயர்ந்து நிற்கும் இரு டவர்கள், 3,200 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், மிகப்பெரிய அளவிலான ஸ்பா மற்றும் உடற்பயிற்சி நிலையம் என்று எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆப்பிள் பார்க், குப்பர்டினோ: $5 பில்லியன்

பல வளரும் நாடுகளை விட அதிகப் பணத்தை வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், உலகில் செல்வச் செழிப்பாகத் திகழ்கிறது. எனவே கலிஃபோர்னியாவில் உள்ள குப்பர்டினோவில் அதன் சிறப்பான புதிய தலைமையகத்தை அமைக்கப் பில்லியன்களைச் செலவழித்துள்ளது. ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த வளாகம், மொத்தம் $5 பில்லியன் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மரினா பே சேன்ட்ஸ், சிங்கப்பூர்: $6.2 பில்லியன்

உலகின் மிகவும் அற்புதமான முடிவிலி நீச்சல் குளம், இதுவரை கட்டியிராத மிகப்பெரிய கூரையில்லாத சூதாட்டம் அரங்கம், 2,561 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஹோட்டல் மற்றும் பல்வேறு அம்சங்களைச் சிங்கப்பூரின் பரபரப்பான மரினா பே சேன்ட்ஸ் அரங்கம் தன்னகத்தே கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு $5.5 பில்லியன் செலவில் இந்தச் சிறப்புவாய்ந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

அப்ராஜ் அல் பைட், மெக்கா: $16 பில்லியன்

கடந்த 2012 ஆம் ஆண்டு $15 பில்லியன் பொருட்செலவில், மெக்காவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக வானளாவிய 7 கட்டமைப்புகளின் கூட்டாக, மெக்காவின் உயரத்தையும் கடந்து அப்ராஜ் அல் பைட் அமைந்துள்ளது. 34 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அரங்கத்தில், உலகின் மிகப்பெரிய கடிகாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்ஜித் அல்-ஹரம், மெக்கா: $100 பில்லியன்

இஸ்லாமியர்கள் மிகவும் புனிதமான தளமாக மதிக்கப்படுவதோடு, உலகிலேயே மிகப்பெரிய மசூதி திகழ்வது சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹரம் ஆகும். ஹஜ் புனித பயணத்திற்காக வரும் 4 மில்லியன் பயணிகளை ஒருமிக்க உள்ளடக்கக் கூடிய வகையில் மொத்தம் 99 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரங்கத்தின் கட்டுமானத்திற்கு மொத்தம் $100 பில்லியன் செலவிடப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

The most expensive buildings around the world