வருமானத்திற்கு ஏற்றவாறு செலவு செய்து சேமிப்பது எப்படி?

By Abu Bakker Fakkirmohamed
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பலருக்கு நிலையான வேலையும், முறையான மாத வருமானமும் இல்லை. கிடைத்த வேலையைச் செய்து அதன் மூலம் வாழ்க்கையை நடத்துவோரின் எண்ணிக்கை அதிகம். வியாபாரம் செய்து அதன் மூலம் கிடைக்கும் அன்றாட வருமானம், பொருள்களை வாங்கி விற்பதன் மூலம் கிடைக்கும் கமிஷன் தொகை, சுயதொழில் மூலம் கிடைக்கும் வருமானம் போன்றவற்றை நம்பி பெரும்பாலானோர் வாழ்கின்றனர். ஒவ்வொரு மாதமும் நமக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

சென்ற மாதம் போல இந்த மாதம் இருக்காது. இந்த மாத வருமானத்தைப் போல வருகின்ற மாதத்தின் வருமானம் அமையாது. இப்படியாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஒரு மாதத்திற்கான வரவு செலவுகளைச் சமாளிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும். இப்படி நிலையில்லாத வருமானத்தைக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவது சற்றுக் கடினமான செயல்தான். ஆனால் முறையாகத் திட்டமிட்டால் நம்முடைய சீரற்ற வருமானத்தைக் கொண்டு சிறப்பான வாழ்க்கையை நடத்த இயலும். அதற்கான வழிமுறைகள் சிலவற்றை யோசிப்போம் வாருங்கள்.

 வருமானத்திற்கேற்ற வரவு செலவுத் திட்டமிடல்

வருமானத்திற்கேற்ற வரவு செலவுத் திட்டமிடல்

கடந்த பன்னிரண்டு மாதங்களில் நமக்குக் கிடைத்த ஒவ்வொரு மாத வருமானத்தையும் கொண்டு நம்முடைய சராசரி மாத வருமானத்தைக் கணக்கிட வேண்டும். சராசரியாகக் கிடைக்கும் தொகை நம்முடைய உண்மையான மாத வருமானத்தைக் குறிக்காது என்றாலும் புள்ளி விவரத்திற்காக அவ்வாறு கணக்கிட்டுக் கொள்வோம். உதாரணமாகக் கடந்த நான்கு மாதங்களில் உங்களுடைய மாத வருமானம் முறையே, 25,000 ரூபாய், 12,000 ரூபாய், 20,000 ரூபாய், 17,000 ரூபாய் என வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் உங்களுடைய சராசரி மாத வருமானம் 18,500 ரூபாய். எனவே, உங்களுடைய மாத வருமானம் 18,500 எனக் கணக்கில் எடுத்துக் கொண்டு அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் உங்களுடைய வரவு செலவுகளைத் திட்டமிடலாம்.

கடந்த பல மாதங்களில் உங்களுக்குக் கிடைத்த வருமானத்தில் எந்த மாதம் குறைவாக இருந்ததோ அதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாத வரவு செலவுகளையும் திட்டமிடுவது இன்னும் பாதுகாப்பானதாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் இருக்கும். மேற்கண்ட உதாரணத்தின்படி உங்களுடைய கடந்த கால மாத வருமானத்தில் 12,000 ரூபாய் கிடைத்ததுதான் மிகக் குறைந்த வருமானம். எனவே அதனையே உங்களுடைய ஒவ்வொரு மாதத்தின் வருமானம் என நிர்ணயித்துக் கொண்டு அதற்கேற்ப உங்களுடைய வரவு செலவுகளைத் திட்டமிடுவது நலம்.

 

அடிப்படைத் தேவைக்கான செலவுகளைப் பட்டியலிடுதல்

அடிப்படைத் தேவைக்கான செலவுகளைப் பட்டியலிடுதல்

நமக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச மாத வருமானத்தைக் கருத்தில் கொண்டு நம்முடைய பட்ஜெட்டை வடிவமைத்ததைப் போல, கட்டாயம் நாம் செய்தே ஆகவேண்டிய மாத செலவுகள் எவை எவை என்பதைக் குறித்தும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவேண்டும். நிலையான மாத வருமானம் இல்லாதவர்களுக்குச் செலவுகளை முறைப்படுத்தி அவற்றை மேலாண்மை செய்வது மிகக் கடினமானது.

ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களுக்கான செலவு, வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு, குடிநீர், மின்சாரம், தொலைப்பேசிக் கட்டணங்கள் ஆகியவை கட்டாயம் செய்ய வேண்டிய மாத செலவுகள் இவற்றைத் தவிர்க்க முடியாது. இவற்றுக்கான செலவுத் தொகையினைக் கூட்டி அத் தொகையை மனதில் வைத்துக் கொண்டு செயற்பட்டோமென்றால் தேவையில்லாத அதிகப்படியான செலவுகள் வரும்பொழுது அவற்றை உடனடியாகத் தவிர்க்கின்ற மனப்பக்குவம் வந்துவிடும்.

 

அதிகப்படியான செலவுகளைத் தவிர்த்தல்

அதிகப்படியான செலவுகளைத் தவிர்த்தல்

ஏதாவது ஒரு மாதத்தில் அதிகப்படியான வருமானம் கிடைக்கும் பொழுது நம்முடைய மனம் மகிழ்ச்சியில் துள்ளுவது இயற்கைதான். இந்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து கிடைத்த அதிகப்படியான தொகையைத் திட்டமிடாத வகையில் செலவழிப்பது புத்திசாலித்தனமல்ல.

ஏற்கனவே திட்டமிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கெனச் செலவழித்த தொகை போக மீதியுள்ள தொகையினைச் சேமித்து வைப்பது நலம். பழைய செல்போனைக் கொடுத்துவிட்டுப் பளபளக்கும் புதிய போன் வாங்கலாம், நண்பர்களுடன் விருந்துண்டு மயங்கிக் கிடக்கலாம், மனைவி குழந்தைகளுடன் ஷாப்பிங் சென்று அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தலாம் எனச் சில பல திட்டங்கள் உங்கள் மனத்திரையில் வண்ணப்படமாய் ஓடும். எதற்கும் அசைந்து கொடுக்காமல், அதிகப்படியாகக் கிடைத்த தொகையை அப்படியே தனிக் கணக்கில் மெய்ன்டெய்ன் பண்ணினால் நீங்கள்தான் சமத்துப் பிள்ளை.

 

 ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு

ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடு

மருத்துவச் செலவுகள், விபத்து போன்றவை நமக்கு மெசேஜ் பண்ணிவிட்டோ அல்லது வாட்ஸ் அப்பில் வணக்கம் சொல்லிவிட்டோ வருவதில்லை. அழையா விருந்தாளியாய் வந்து நம் வீட்டு வாசற்படியில் சிரித்துக் கொண்டிருக்கும். அப்பொழுது எரிச்சல்பட்டு நாம் கையைப் பிசைந்து கொண்டிருப்பது நல்லதல்ல. எனவே உங்களுடைய அத்தியாவசியச் செலவுப் பட்டியலில் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமான உடல் நலக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றைத் தேர்வு செய்து கொள்வது புத்திசாலித்தனமானதாகும். உங்களுடைய வசதிக்கு ஏற்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஒன்றைக் கட்டாயம் தேர்வு செய்து அதற்கான பிரிமியத் தொகையைத் தவறாது கட்டி வரவேண்டும். எதிர்பாராத வகையில் உங்களுக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் உங்கள் குடும்பத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உங்களுடைய ஆயுள் காப்பீட்டுத் தொகை உறுதி செய்யும். ஒருமுறை மட்டும் பிரிமியத் தொகை செலுத்தும் வகையில் சில ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. நம்முடைய வசதியைப் பொறுத்து, ஏதாவது ஒரு திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்

 

கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்

கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்

நம்முடைய அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகக் கடன் வாங்குகின்ற நிலைமையைத் தவிர்க்க வேண்டும். சிறுகச் சிறுக நாம் வாங்குகின்ற கடன், நம்மை மீளமுடியாத துயரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். கடனை வாங்கி அதனை வட்டியோடு திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அதற்காக வேறொரு இடத்தில் மீண்டும் கடன் வாங்க வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு உள்ளாகிவிடக் கூடாது.

முறையான மாத வருமானம் இல்லாதவர்கள், ஒவ்வொரு முறை கடன் வாங்குகின்றபோதும் தங்களுடைய அத்தியாவசியச் செலவுப் பட்டியலில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்தொகையும் வந்து சேர்ந்து கொள்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. சிக்கனத்துடன் செலவு செய்து அதன் மூலம் கிடைக்குச் சேமிப்பின் மூலம் ஏற்கனவே வாங்கிய கடன்களை அடைக்க முயற்சி செய்ய வேண்டும். "கடனில்லாப் பெருவாழ்வு" என்று நம்முடைய தாத்தாக்கள் கூறியுள்ள கோல்டன் வாய்ஸ் எப்பொழுதும் நம்முடைய காதுக்குள் செல்போனின் ரிங்டோனாய் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

 

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

உலகம் முழுவதும் வேலை வாய்ப்புக் குறைந்து வரும் சூழலில், அனைவருக்கும் நிலையான மாத வருமானம் தரக்கூடிய வேலை கிடைப்பது சற்றுக் கடினம். முறைப்படுத்தப்படாத மாத வருமானம் இல்லாதவர்கள், கையில் கிடைக்கு வருமானத்தை முறையாகச் செலவு செய்யப் பழகிக் கொண்டால் சிக்கலின்றி வாழ்க்கையை நடத்தலாம்.

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைத் தோராயமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப நம்முடைய செலவுகளைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டால் நம்ம கோட்டையில் நாம்தான் ராஜா. செலவுகளைக் குறைக்கும் பொழுது சேமிப்பிற்கான வாய்ப்பு ஏற்படும். சேமிப்பை எதிர் காலத்திற்கான முதலீடாக மாற்றப் பழகிக் கொண்டால் கவலைகளின்றி வாழலாம். ஆம், மகிழ்ச்சி என்பது நம்முடைய வருமானத்தைப் பொறுத்தது அல்ல திட்டமிட்டுச் செலவு செய்வதைப் பொறுத்தது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Don’t have regular income? How to manage your money more efficiently

Don’t have regular income? How to manage your money more efficiently
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X