பிஎப் கணக்கு வைத்துள்ள 5 கோடிக்கும் அதிகமான மாத சம்பளக்காரர்களுக்கு ஈபிஎப்ஓ அமைப்பு 2020-21 நிதியாண்டுக்குக் கடந்த ஆண்டை போலவே 8.5 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க முடிவு செய்துள்ளது.
இதற்கான இறுதி அறிவிப்பு மத்திய அரசு வெளியிடும் நிலையில் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நிதியாண்டுகளாக ஈபிஎப் மீதான வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் கொரோனா பாதிப்பு நிறைந்த 2020-21 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பங்குச்சந்தையின் தடாலடி வளர்ச்சியின் காரணமாகக் கடந்த வருடம் அளித்த அதே 8.5 சதவீத வட்டி வருமானத்தை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முக்கியமான கேள்வி
இந்நிலையில் ஈபிஎப்ஓ எப்படி 5 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் சந்தையின் பிற முதலீடுகளை விடவும் அதிக வருமானத்தை அளிக்கிறது என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது.

5 கோடி ஊழியர்கள் கணக்கு
ஈபிஎப்ஓ அமைப்பு தான், 5 கோடி ஊழியர்களின் கணக்கில் ஒவ்வொரு மாதமும் டெப்பாசிட் செய்யப்படும் தொகையை நிர்வாகம் செய்து வருகிறது. இந்த அமைப்புக்கு வரும் பெரும் பகுதி பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் காரணத்தால் அதிகளவிலான வருமானத்தை அளிக்கிறது.

பங்குச்சந்தை முதலீடு
2015ஆம் நிதியாண்டில் மொத்த வைப்புத் தொகையில் 5 சதவீத தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மத்திய நிதியமைச்சகம் ஈபிஎப்ஓ அமைப்பிற்கு அனுமதி அளித்தது.

NSE 50 மற்றும் BSE 30 நிறுவனங்கள்
மக்களின் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் திட்டத்துடன் ஈபிஎப்ஓ அமைப்பு NSE 50 மற்றும் BSE 30 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ள காரணத்தால் முதலீட்டுக்கு எவ்விதமான பாதிப்பு இல்லை.

முதலீட்டு அளவீடு அதிகரிப்பு
2015ஆம் நிதியாண்டில் வெறும் 5 சதவீத தொகை முதலீடு செய்ய அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 15 சதவீதம் வரையில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டில் வரும் லாபத்தைத் தான் ஈபிஎப்ஓ வட்டி வருமானமாக ஊழியர்களின் கணக்கில் செலுத்துகிறது.